2. உலகத் தமிழ்ப் பரப்பு மையம் நிறுவிடுக!
பிழையற்ற தமிழில் பேசவும் எழுதவும்
அனைவரும் பயிற்சி பெறும் வகையில் உலகத் தமிழ்ப் பரப்புக் கழகம் நிறுவ
வேண்டும். அந்தந்த நாட்டு மொழிகளின் வாயிலாகத் தமிழ்க் கற்றுத் தரப்பட
வேண்டும். வெவ்வேறு நிலைகளுக்கான தேர்வுத் திட்டங்களை வகுத்து, கால
வேறுபாடின்றியும் அகவை வேறுபாடின்றியும் ஒருவர் ஒரு நிலையிலான தேர்வில்
வெற்றி பெற்றார் என்றால் அடுத்த நிலையிலான தேர்விற்குத் தகுதியானவர் என்ற
வகையில் பாடமுறை அமைய வேண்டும்.
கொச்சைத் தமிழ்ப் படைப்புகள்
தடுக்கப்பட்டு அதை மீறி வெளியிடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். உலகில்
உள்ள ஒவ்வொருவரும் தத்தம் மொழிக்குத் தாயான தமிழ் மொழியை அறிவதில் பெருமை
கொள்ளும் வகையிலும் தமிழ் அறியாததை இழிவாகக் கருதும் வகையிலும் தமிழ்
உணர்வை உருவாக்க வேண்டும். தமிழ் இலக்கியச் செழுமை, தமிழ்ப் பண்பாட்டுப்
பெருமை, தமிழ் நாகரிக வளமை, தமிழ் வரலாற்றுச் சீர்மை முதலானவற்றை அனைத்து
நாட்டினரும் தத்தம் மொழியில் பயிலும் வண்ணம் உலகக் கல்வியகங்களின்
பாடத்திட்டங்கள் அமைய வேண்டும்.
நோபிள் பரிசினும் உயர்வான பரிசுத்
தொகையைத் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு வழங்கும் வண்ணம் உலகளாவிய பரிசுத்
திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழைத் தாய்மொழியாகக்
கொண்டவர்களுக்கும் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களுக்கும் என இரு வகையிலும்
தமிழ்ப் படைப்புகளுக்கு, பிற மொழிகளில் தமிழ் பற்றி வரும் படைப்புகளுக்கு
என இரண்டிரண்டு பிரிவுகளிலும் பரிசுகள் அமைய வேண்டும். எல்லா நாடுகளிலும்
அந்தந்த நாடுகளில் தமிழ்ப்படைப்புகளுக்கான உயர் பரிசுகள் வழங்க ஆவன செய்ய
வேண்டும்.
தமிழ் தொடர்பான எந்த உலக அமைப்பாயினும்
தமிழ் நாட்டவர் தலைமைப் பொறுப்பில் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள
வேண்டும். ஏனெனில் தமிழ் நாட்டில் எத்தனைக் கட்சிகள் இருக்கின்றனவோ
அத்தனைப் பிரிவுகள் இத்தகைய அமைப்பில் உருவாகி விடும். பல்குழுவும் பாழ்
செய்யும் உட்பகையும் தோன்றித் தமிழ் அமைப்புகளைக் குலைக்காமல் இருக்க
வேண்டுமென்றால் இம் முடிவை எடுத்துத்தான் ஆக வேண்டும்.
3. உலகத்தமிழ்க்கலை ஆணையம் அமைத்திடுக!
கலைதான் வளர்ச்சிக்கு ஊடகம். ஆனால், கலை
வெளிப்பாடு தமிழாக இல்லை. சமசுகிருதம், தெலுங்கு முதலான பாடல்களுக்கு
ஆடுபவர்கள்தாம் மிகுதி. தமிழ்க்கலை பண்பாட்டை எதிரொலிப்பன அரசு சார்பான
அல்லது தமிழ் அமைப்புகள் சார்பான நிகழ்ச்சிகளில் சில அமையலாமே தவிரப்
பொதுவாகப் பெரும்பாலும் இல்லை. தமிழ்க்கலைகளே தாய்க் கலையாக இருப்பினும்
பிற கலைகளுக்கே தமிழ்நாட்டில் முதன்மை கொடுக்கும் அவலம் இன்னும்
நீங்கவில்லை. இசைக்கல்வியில் முன்பை விடத் தமிழ்ப் பாடல்கள் சற்றுக்
கூடுதலாகக் கற்றுத் தரப்பட்டாலும் அயல்மொழிப் பாடல்கள் கற்பிக்கப்படும்
அளவிற்குத் தமிழ்ப்பாடல்கள் கற்றுத் தரப்படவில்லை. இசை, நாட்டியம் முதலான
துறைகளிலும் தமிழ்க் கலைச் சொற்கள் நல்ல முறையில் கற்றுத் தரப்படுவதில்லை.
தமிழகக் கலைத்துறை மூலம் பயன் பெற்றவர்கள் பிற மாநிலத்தவரே மிகுதி. ஆனால்
அவர்கள் தமிழும் அறியார்; தமிழுணர்வும் இல்லார்.
“என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்துநூ றாக
ஒன்றேனும் தமிழர் நடை யுடைபா வனைகள்
உள்ளதாய் அமைக்க வில்லை; உயிர்உள்ள தில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவ தாயில்லை!
ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!
ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!”
என்றார் பாவேந்தர் பாரதிதாசன். அந்த நிலை
இன்னும் மாறவில்லை. தமிழ் முத்திரை பதிக்கும் வண்ணம் திரைத்துரையோ பிற
கலைத்துறையோ சீராகவில்லை. அதே நேரம், தமிழ் நாட்டால் வாழ்வு பெறும் அயற்
கலைஞர்கள்தாம் மிகுதி. ஆனால் அவர்கள் தமிழுக்கு நன்றியுடையவர்கள் ஆகும்
வண்ணம் விளங்கச் செய்யவில்லை நாம். கலைஞர்களுக்குச் சூட்டும் பெயர்களும்
தமிழில் இல்லை; அவர்கள் ஏற்று நடிக்கும் பாத்திரப் பெயர்களும் தமிழாய்
இல்லை. திரைப்படங்களில் நல்ல தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டவன் ஊழல் புரிபவனாக,
மக்கள் நல எதிராளியாக, நாட்டுப் பகைவனாகக் காட்டப்படுவதே மிகுதி. தமிழில்
பெயர் மாற்றம் செய்து தமிழ் உணர்வை வளர்த்தத் தலைவர்களும் இது குறித்துக்
கவலைப்படாத பொழுது வேறு யார் கவலைப்படுவார்கள். கைந்நூல் – கதர் – ஆடை
அணிந்தவர்களை நேர்மையான அரசியல்வாதியாகக் காட்டட்டும்; வேண்டாம் என்று
சொல்லவில்லை. ஆனால், மோசமான அரசியல்வாதிப் பாத்திரத்திற்கும் ஒழுக்கக்
கேடானவர்களுக்கும் ஊழல்வாதிகளுக்கும் மக்கள் பகைவர்களுக்கும் நல்ல தமிழ்ப்
பெயர் சூட்டுவது எந்த வகையில் அறமாகும்? இதைத் தட்டிக் கேட்க யாருமில்லையே!
திராவிட இயக்கம் என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்பவர்கள் இச்சிறுமை
கண்டு நாண வேண்டாவா? இக் களங்கத்தைத் துடைக்கக் கிளர்ந்தெழ வேண்டாவா?
அவ்வாறான பாத்திரப் படைப்புகளை உருவாக்கிய கதையாசிரியர்கள், இயக்குநர்கள்,
பட உருவாக்குநர்கள், பங்கேற்ற கலைஞர்கள் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க
வேண்டாவா? தத்தம் பெயர்களைத் தமிழ்ப் பெயர்களாக மாற்றித் தமிழுணர்வை
விதைத்தவர்கள் ஆட்சியிலேயே தமிழ்ப் பெயர்களுக்கு இழுக்கு ஏற்பட விடலாமா?
‘திராவிட இயக்கத்தினர்’எனக் கூறிக் கொள்பவர்களின் திரைப்படங்களிலும்
தொலைக்காட்சிப் படங்களிலும் படைப்புகளிலும் வெட்கங் கெட்ட இதுதான் நிலைமை
எனில், தமிழ் அழிப்பையே தலையாயப் பணியாகக் கொண்டவர்கள் பற்றி என்ன கூறுவது?
எனவே, தணிக்கைக் குழுவில் தமிழ்க்கலை பண்பாட்டு உணர்வாளர்களை
உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும். தீய மாந்தர்களுக்கு நற்பண்பு சார்ந்த
தமிழ்ப் பெயர் இடப்படும் படைப்புகளுக்குத்தடை விதிக்க வேண்டும்.
இயல் இசை நாடகங்களில்தான் தமிழ்ப்
புறக்கணிக்கப்படுகின்றது என்றால் ஓவியம், கல்தச்சு (சிற்பம்) முதலான
கலைகளிலும் தமிழ் புறக்கணிக்கப்படுகின்றது. தமிழ்க்கடவுள் படிமங்களைக் கூட
ஆரிய உருவில் படைப்பதுதான் கல்தச்சர்களின் தலையாய பணியாக இருக்கின்றது.
தமிழ் வரலாற்று நாகரிகப் பண்பாட்டு இலக்கியச் சிறப்புகளைப் பாரெங்கும்
பரப்பும் வகையில் ஓவியங்களும் கல்தச்சுகளும் இருக்க வேண்டும்.
தமிழ் நாட்டின் உயரிய பல விருதுகள் பிற
மாநிலத்தவருக்கே கிடைக்கின்றன. சான்றாகக் கல்பனா சாவ்லா விருதைக்
குறிப்பிடலாம். மறைந்த இந்த அம்மையார் போற்றுதலுக்கு உரியவர்தான். ஆனால்,
இந்தியக் குடியுரிமையைத் துறந்து அயலகக் குடியுரிமையைப் பெற்றுச் சிறந்த
இவரைத் தலையில் வைத்துக் கொண்டாடத் தேவையில்லை. தமிழக அரசின் சார்பில் இவர்
பெயரில் விருது வழங்குவதே தவறு. அப்படி வழங்கப்பட்ட முதல் விருதும்
தமிழ்ப் பெண்மணி ஒருவருக்குத் தரப்படவில்லை. மலையாளப் பெண்தான் பெற்றார்.
அதுபோல், கலை விருதுகளும் தமிழ்க் கலைவாணர்களை அணி செய்யும் வகையில்
வழங்கப்படவில்லை. எடுத்துக்காட்டிற்கு ஒன்று காண்போம். ‘ஊதொலி’ (சாக்சபோன்)
இசை தமிழகக் கலையன்று. அவ்விசையில் சிறந்த கலைஞராய் இருப்பினும், தமிழ்க்
கலை வளர்ச்சிக்குத் துரும்பளவேனும் செயல்பட்டிராத ஒருவருக்கு எதற்குத்
தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட வேண்டும். இவருக்கு மட்டுமல்ல;
பெரும்பாலான கலைமாமணி விருதுகள் உடல் கவர்ச்சி மூலம் பணம் ஈட்டுவதில்
வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்றனவே தவிர, தமிழ்க்கலை பண்பாட்டு
அடிப்படையில் வழங்கப்படுவது இல்லை. தமிழகச் செல்வம் அயலவரால்
சுரண்டப்படுவது போதாது என்று தமிழக அரசும் அரசின் துறைகளும் எந்தத்
திட்டமாக இருந்தாலும் இவ்வாறு அயலவருக்குப் பரிசுகளை வாரி வழங்குவது
முறைதானா? தமிழ் மொழி, இலக்கிய, கலை ஈடுபாடு மிக்க அயலவருக்குத் தனியாகப்
பரிசுத் திட்டம் நடைமுறைப்படுத்தி அத்திட்டத்தின் மூலம் அவர்களை
ஊக்கப்படுத்தலாமே!
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை
(1.) இமாலயக் கலை பண்பாட்டு மரபைப் பேணவும்
பரப்பவும், (2.) புத்த – திபேத்திய கலை பண்பாட்டினைப் பேணவும் பரப்பவும்
என ஆண்டு தோறும் இந்தியா முழுமையும் தன்னார்வத் தொண்டு அமைப்பினருக்கு நிதி
உதவி வழங்கி வருகிறது. இதே போல் ஆண்டுதோறும்,
1. தமிழ்க் கலை பண்பாட்டைப் பேணவும் பரப்பவும்
2. தமிழக நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சி அளிக்கவும்
3. தமிழக மரபுக் கலைகளில் பயிற்சி அளிக்கவும்
4. தமிழ்க் கலைகளை ஆவணமாக்கவும்
5. தமிழ்க் கலைப் பொருட்கள் அருங்காட்சியகம் அமைக்கவும்
6. தமிழ் நூலகங்கள், படிப்பகங்கள் அமைக்கவும்
எனத் தனித்தனியே தன்னார்வத் தொண்டு அமைப்பினருக்கு நிதி உதவிகள் வழங்க வேண்டும்.**
கலை வளர்ச்சியைத்தமிழ்நாட்டுடன்
நிறுத்திக் கொள்õளமல், தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ் மரபுக்
கலைகளையும் நாட்டுப்புறக் கலைகளையும் பயிற்சி, வளர்ச்சி, மேம்பாடு என்ற
நிலைகளில் செயல்படுத்த உலகத்தமிழ்க்கலை ஆணையம் தோற்றுவிக்கப்படவேண்டும்.
பயிற்சி நூல்கள், பயிற்சி ஒலிப் பேழைகள், பயிற்சி ஒளிப்பேழைகள், பயிற்சிக்
குறுவட்டுகள் முதலான அனைத்து வகையிலும் வெளியீடுகள் மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு கலைகளைப் பற்றியும் முழுமையான தொகுப்பு நூல் வெளியிடப்பட வேண்டும்.
உலக நாடுகள் எங்கும் பயிற்சி அளிக்கவும், உலக மக்கள் இங்கு வந்து பயிற்சி
பெறவும் வழிவகை செய்ய வேண்டும். தமிழ்க்கலைப் பொருள்கள், கலைஆடைகள் அடங்கிய
அருங்காட்சியகங்களைப் பன்னாடுகளிலும் அமைக்க வேண்டும். அனைத்து நாட்டுக்
கலைகளுக்கும் அடிப்படையாய் உள்ளன தமிழ்க்கலைகளே என்பதை உலகோர் உணரச் செய்ய
வேண்டும். கலைகளின் வாயிலாகவும் தமிழ்ச் சிறப்புகளைப் பரப்ப வேண்டும்.
இத்தகைய ஆணையம் ஒப்பியல் கலை ஆய்வுக்கும் உலக ஒற்றுமைக்கும் வழிவகுக்கும்
என்பதிலும் ஐயமில்லை.
(தொடரும்)
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற
6-ஆவது உலகத் தமிழர்கள் ஒற்றுமை மாநாடு – 2009
தி.பி.2040, புரட்டாசி 9, 10, 11 / கி.பி.2009 செப்டம்பர் 25, 26, 27
கோலாலம்பூர், மலேசியா
படங்கள் : நட்புவளையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக