தேனிப் பகுதியில் நீர்இறைக்கப் பயன்பட்ட கமலைகள் தற்பொழுது கோழிகள் அடைத்து வைக்கப் பயன்பட்டு வருகிறது.
இன்னும் சில காலத்தில் நாட்டுக்கோழி இனம் அழிக்கப்பட்டால் இந்தக் கமலைகள் பழைய இரும்புப் பயன்பாட்டிற்கு செல்லும் நிலை ஏற்படும்.
தேவதானப்பட்டி பகுதி வேளாண்மை சார்ந்த
பகுதியாகும். இப்பகுதியில் தோட்டங்கள், வயல்கள், தோப்புகள் என ஏராளமாக
இருந்தன. இவைதவிர தேவதானப்பட்டி பகுதியை வளம் சேர்க்க மஞ்சள் ஆறு, வைகை
ஆறு, பச்சிலைநாச்சியம்மன், ஆறு எனப் பல ஆறுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட
குளங்கள், கண்மாய்கள், நூறாயிரத்திற்கும் மேற்பட்ட கிணறுகள் என இருந்தன.
இதன் மூலம் இப்பகுதியில் வேளாண்மை செழித்து வந்தது. கடந்த பத்தாண்டுகளாக
மும்மாரி மழை பொழிந்த இப்பகுதி தற்பொழுது மழை பெய்வது அரிதாகவும்,
வியப்பூட்டும் செயலாகவும் மாறி வருகிறது. இந்நிலையில் தேவதானப்பட்டி
பகுதியில் கிணற்றில் இருந்து நீர் இறைப்பதற்கு இரட்டை மாடுகளும் அதன்
பின்னர் கிணற்றில் இருந்து நீரை இறைப்பதற்கு கமலைகளும் பயன்பட்டு வந்தன.
தற்பொழுது வேளாண் பகுதி சுருங்கிய நிலையில் வேளாண்பொருட்களான ஏர், மாடுகள்,
கமலைகள் என அனைத்தும் ஓரங்கப்பட்டன.
இவை தவிர தற்பொழுது இயந்திரமயமாகிவிட்டதால்
பொறிஉழுவைகள்(டிராக்டர்கள்), முதலான பலவகைப் பொறிகள் வந்துள்ளன. இதனால்
பண்டையக் கால உழவுமுறை கைவிடப்பட்டது. இதனால் நீர் இறைக்கப் பயன்பட்ட
கமலைகள் தற்பொழுது கோழிகள் அடைத்து வைக்கும் கோழிக் கூடுகளாக மாறிவிட்டன.இன்னும் சில காலத்தில் நாட்டுக்கோழி இனம் அழிக்கப்பட்டால் இந்தக் கமலைகள் பழைய இரும்புப் பயன்பாட்டிற்கு செல்லும் நிலை ஏற்படும்.
- வைகை அனிசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக