செவ்வாய், 17 டிசம்பர், 2013

முள்ளிவாய்க்கால் முற்றம்: பழ. நெடுமாறன் வழக்கு

முள்ளிவாய்க்கால் முற்றம்: அரசின் நடவடிக்கைக்கு த் தடை கோரி பழ. நெடுமாறன் வழக்கு

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு அளிக்கப்பட்ட திட்ட அனுமதியை ரத்து செய்ய தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளையின் தலைவர் பழ. நெடுமாறன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவின் விவரம்:
இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரின்போது கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களின் நினைவாக தஞ்சாவூர் அருகே விளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற்றது. நெடுஞ்சாலைத் துறை மற்றும் அரசிடம் முறையாக அனுமதி பெற்று இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
ஆனாலும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா ஆகியவை நெடுஞ்சாலைத் துறையினரால் இடித்துத் தள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 14-ஆம் தேதி விளார் ஊராட்சித் தலைவர் எங்கள் அறக்கட்டளைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு அளிக்கப்பட்ட திட்ட அனுமதியில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, நினைவு முற்றத்துக்கு அளிக்கப்பட்ட திட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு அளிக்கப்பட்ட கட்டட அனுமதியை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிகிறது.
எனவே, அரசின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் பழ. நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சதீஷ் கே. அக்னிகோத்ரி, கே.கே. சசிதரன் ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் ஏ.எல். சோமையாஜி, இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இருப்பதால், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடாது என்று வாதிட்டார்.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (டிசம்பர் 17) தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக