சனி, 8 ஜூன், 2013

அழிவுப் பாதையில் வேளாண்மை!

அழிவுப் பாதையில்  வேளாண்மை!
விவசாயத்தின் அழிவு மற்றும் அவல நிலையை சொல்லும், வேளாண் பொருளாதார வல்லுனரும், கோவை, வேளாண் பல்கலையின், முன்னாள் துணை வேந்தருமான இராமசாமி: தற்போது, அமெரிக்காவின் கார்வெல் விவசாய பல்கலை கழகத்தின் ஆலோ சகராகவும் பணியாற்றி வருகிறேன். கடந்த, 2001 முதல், 2011 வரை, 8.67 லட்சம் பேர், விவசாய தொழிலை விட்டு, நகரத்திற்கு குடிபெயர்ந்ததாக, தமிழக மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. விவசாயிகள் வெளியேறுவதால், விவசாயமும் சேர்ந்தே வெளியேறி, அழிவுப் பாதையில் செல்கிறது. செலவு இல்லாத பாரம்பரிய விவசாயம் செய்தவனை, பசுமை புரட்சி என்ற பெயரில், பணக்கார நாடுகளின் வேளாண் முறைகள், செலவை அதிகரித்து கடனாளியாக மாற்றியது. 1970களில் நான்கு மூட்டை நெல்லை விற்று, ஒரு சவரன் தங்கம் வாங்கிய விவசாயி, இன்று, ஒரு நெல் மூட்டையை, 1,000 ரூபாய்க்கு விற்க முடியாத நிலை உள்ளது. இதனால், 40 வயதிற்கும் கீழ் உள்ள இன்றைய தலைமுறையினர், படித்த பின் விவசாயத்தை தவிர்த்து, நிரந்தர ஊதியம் கிடைக்கும் பணிகளுக்கு செல்கின்றனர்.
பல்லாயிரக்கணக்கில் இருந்த விவசாய நிலங்கள், கல்லூரிகளாகவும், தொழிற்சாலைகளாகவும் உருமாறி விட்டன. முப்போகம் விளைந்த பூமியில், ரியல் எஸ்டேட்காரர்களின் கலர் கொடிகள் பறப்பதால், வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்து வந்த, கால்நடைகள் மேய்வதற்கும் இடமின்றி போய் விட்டது. விவசாயம் செய்வதை விட, கூலியாக இருப்பது நிரந்தர வருமானம் தரும் என்ற கீழ் நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டனர். ஆட்கள் பற்றாக்குறையை நீக்க, சிறு சிறு வேளாண் கருவிகளை உருவாக்க வேண்டும். துண்டு நிலங்களை ஒன்றாக்கி, பல ஏக் கரில் ஒரே பயிர் சாகுபடியை நடைமுறைபடுத்த வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கான குளிர்பதன சேமிப்பு கிடங்குகளை, கிராமங்கள் தோறும் அமைத்து, பாரம்பரிய விவசாயத்தை நவீன முறையில் மேற்கொள்ள, விவசாயிகளுக்கு ஊக்கம் கொடுத்து, அழிவு பாதையில்
உள்ள விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக