ஞாயிறு, 2 ஜூன், 2013

கச்சத்தீவு அருகே போர்க்கப்பல்: இந்திய இறையாண்மைக்கு விடப்படும் அச்சுறுத்தல்: பிரதமருக்கு வைகோ கடிதம்

கச்சத்தீவு அருகே போர்க்கப்பல்: இந்திய இறையாண்மைக்கு விடப்படும் அச்சுறுத்தல்: பிரதமருக்கு வைகோ கடிதம்

கச்சத்தீவு அருகே இலங்கை போர்க் கப்பல் நிறுத்தப்பட்டிருப்பது, இந்திய இறையாண்மைக்கு விடப்பட்டுள்ள அச்சுறுத்தல் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சனிக்கிழமை வைகோ கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பது:
தமிழக மீனவர்களின் உரிமை நலன்களைப் பறிக்கும் வகையில், 1974-ஆம் ஆண்டு இந்திய அரசு, கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டது. அதற்காக இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் பெறவில்லை.
இது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும்.
கச்சத்தீவைத் திரும்பப் பெற்று இந்தியாவோடு இணைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகச் சட்டப்பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையின் போர்க்கப்பல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் அச்சுறுத்தி உள்ளனர்.
கச்சத்தீவு அருகே சீனப் படகுகளும், இலங்கைப் போர்க்கப்பலில் சீன வீரர்களும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது நமது கடலிலும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும், இந்தியாவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்டு உள்ள அச்சுறுத்தல் ஆகும். போர்க்கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்துவது ஒரு முன்னோட்ட எச்சரிக்கையே ஆகும்.
இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கவும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இலங்கைப் போர்க் கப்பல்கள் அகற்றப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளைத் தாங்கள் (பிரதமர்) மேற்கொள்ள வேண்டும் என்று கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக