சனி, 8 ஜூன், 2013

பன்மொழி பயிலத் தாய்மொழியே அடித்தளம்

பன்மொழி பயிலத் தாய்மொழியே அடித்தளம்

பெற்றோர் தங்களது குழந்தைகள் ஆங்கில வழிக் கல்வி பயிலவே விரும்புகின்றனர். அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி இல்லை. போதிய மாணவர் சேர்க்கை இல்லை. பல பள்ளிகளை மூடும் நிலை ஏற்படுகிறது. உயர் படிப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கின்றன. அதனால், அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  பன்மொழிக் கல்வி நமது கற்பனை மற்றும் சிந்தனைத் திறனை விரிவடையச் செய்கிறது.  ஒரு குழந்தை பன்மொழிகளைக் கற்பதற்கான, வலுவான அடித்தளமாக தாய்மொழி விளங்குகிறது. தாய்மொழிக் கல்வி, பன்மொழி எழுத்தறிவு பெறுவதை எளிதாக்குகிறது என்று "யுனெஸ்கோ' அமைப்பு கூறுகிறது.
 உயர் கல்வியில் பாடங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால், பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்குவதாக தமிழக அரசு கூறுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் அறிவியல், கணிதப் பாடநூல்களில் உள்ள அறிவியல் சொல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இல்லை. லத்தீன் அல்லது கிரேக்க மொழிகளில்தான் உள்ளன.
 தமிழ்வழிப் பாடநுல்களில் அறிவியல் சொற்கள் தடித்த எழுத்துகளில், அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருக்கும். உயர் கல்வியில் ஆங்கில நடையில் படிக்கும்போது, அதில் வரும் அறிவியல் சொற்களைப் புரிந்து கொள்வதற்காகத்தான் அவ்வாறு அச்சிடப்பட்டுள்ளது. அறிவியல் சொற்களை கற்றுக் கொண்ட மாணவனுக்கு இப்போது தேவைப்படுவது, ஆங்கில மொழி நடை மட்டுமே. அது பள்ளிக் கல்வியில் ஒரு பாடமாக உள்ள ஆங்கிலப் பாடத்தை, முறைப்படி கற்றுக்கொடுத்தாலே கிடைத்துவிடும்.
 தமிழகத்தில் ஊராட்சிப் பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு மாணவனால் 2-ஆம் வகுப்புப் பாடநூலைப் படிக்க முடியவில்லை என்ற தகவல் அண்மையில் வெளியாகி, அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் தோலுரிக்கப்பட்டது. பெரும்பாலும், தமிழ் வழியில் படித்த ஆசிரியர்கள், தமிழ்ப் பாடங்களை நடத்திய நிலையில், மாணவர்களின் கல்வித் தரம் இவ்வாறு உள்ளது. ஆங்கில வழியில் படிக்காத ஆசிரியரைக் கொண்டு, ஆங்கில வழிக் கல்வியைச் சிறப்பாக எப்படி வழங்க முடியும்?
  ஆங்கிலவழிக் கல்வி வெற்றிபெற, முழு நேரமும், மாணவரின் செவியில் ஆங்கில  உரையாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும் சூழல் அவசியம். அது அரசுப் பள்ளிகளில் சாத்தியம் இல்லை.
 உலகில் முதன் முதலில் மொழி தோன்றியது. அதன் பின்னர் தான், அதற்கான இலக்கணம் தோன்றியது. ஒரு குழந்தை அஞ்சல் வழி மூலமாகவோ, பயிற்சி மையங்கள் மூலமாகவோ தமிழைக் கற்பதில்லை. தாயும் சுற்றத்தாரும் பேசும் சொற்களைக் கவனித்து, அதைத் திரும்பச் சொல்லிக் கற்கிறது.
 அதுபோல, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட குழந்தை முதலில் தமிழ் படிக்க வேண்டும். அதன் பின்னர்தான் அவர்களுக்கு அயல் மொழியைக் கற்பிக்க வேண்டும். அப்போதுதான், குழந்தைகளின் கற்றல் எளிதாக இருக்கும்.
 கர்நாடக மாநிலத்தில் 5-ஆம் வகுப்பு வரை அவரவர் தாய்மொழியில் மட்டுமே கல்வி கற்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 5-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் பாடம் நடத்தத் தனியார் பள்ளிகளுக்கு கர்நாடக அரசு அனுமதி வழங்குவதில்லை.  அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பாடம் ஆங்கிலமாக இருக்கும் இன்றைய நிலையில், ஆங்கிலத் தேர்வின்போது 35 மதிப்பெண்களுக்கான விடைகளை, பள்ளியில் உள்ள கரும்பலகைகளில் ஆசிரியர்கள் எழுதி, அதை விடைத்தாள்களில் எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். இப்படித்தான், அரசுப் பள்ளி மாணவர்கள், ஆங்கிலப் பாடத்தில் "தேர்ச்சி' பெறுகின்றனர்!
 ஆங்கிலப் பாடங்கள் உள்ளிட்ட எந்த பாடங்களையும் ஆசிரியர்கள் முறையாக நடத்தி முடிப்பதில்லை. போதிய வேலைநாள்கள் இல்லை என்று காரணம் கூறுகின்றனர். குறிப்பாக, ஆங்கிலப் பாடங்களில், பின் பகுதியில் வரும் இலக்கணம் உள்ளிட்ட பயிற்சிகளை நடத்துவதே இல்லை. இதை அரசும் கண்டுகொள்வதில்லை. நடைமுறையில் உள்ள ஆங்கிலப் பாடத்தை முறையாக நடத்துவதற்கான வழிவகைகளைச் செய்தாலே, அரசுப் பள்ளி மாணவர்கள் நல்ல ஆங்கில அறிவைப் பெறுவார்கள்.
   அரசுப் பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைப்பதற்காக, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், பெங்களூரில் உள்ள மத்திய அரசின், மண்டல ஆங்கிலக் கல்வி மையம் (தென்னிந்தியா) தயாரித்த "ஹலோ இங்கிலீஷ்' என்ற 20 பாடங்கள் கொண்ட காட்சி டிவிடி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது. "சிம்ப்ளி இங்கிலீஷ்' என்ற சிடிக்களும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் அதைப் பயன்படுத்தி, பலனடைந்ததாகத் தெரியவில்லை. அரசும் கண்காணிக்கவில்லை.
  ஆண்டுக்கொரு முறை, பணியிட மாற்றக் கலந்தாய்வு. வீட்டுக்கு அருகிலேயே பணி செய்யும் வாய்ப்பை அரசு வழங்குகிறது. அரசுத் தரப்பில் ஆசிரியர்களுக்கு எந்தக் குறையையும் வைக்கவில்லை. பாடத் திட்டத்திலும் எந்த குறையும் இல்லை. பாடத்தை நடத்தும் ஆசிரியர்களிடம்தான் குறை. அதனால், ஆசிரியர்களிடம்தான் மாற்றம் தேவை. 

கருத்துகள்(5)

சரியான கருத்துதான். எந்த அளவிற்கு ஆசிரியர்கள் அக்கறை காட்ட வேண்டுமோ அதே அளவிற்கு அரசும் அரசுப்பள்ளிகளில் தனது அக்கறையை காட்ட வேண்டும். ஒவ்வொருவரும் தனது பொறுப்பை உணர்ந்து செயல்படுவதும் மிக இன்றியமையாதது. அரசுப்பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் தங்களது மாணவர்களை தனது பிள்ளைகளாக பார்க்க தவறிவிட்டார்கள். தனது சொந்த பிள்ளை தனது பள்ளியில் படித்தால் அவர்களுக்கும் இப்படித்தான் வகுப்பு எடுப்பார்களா, இந்த ஆசிரியர்கள்? தாய் மொழிதான் நமது சிந்தனை வளத்திற்கும், ஆய்வு செய்வதற்கும் ஏற்ற ஒன்று.
ஒன்பதாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் வழக்கம் காரணமாக தமிழிலேயே தடுமாறும் மாணவர்களுக்கு எவ்வாறு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கப் போகிறார்கள் என்று புரியவில்லை. ஆங்கில போதனையைச் சரிவரச் செய்ய போதிய ஆசிரியர்களும் இலை; மேல்வகுப்பு வரை 'அனைவருக்கும் தேர்ச்சி' என்ற வழக்கமும் தொடரும் போலும். அடிப்படைத் திறமைகளை மதிப்பீடு செய்வதிலும்' சலுகை' என்கிற ஓட்டுவங்கி அரசியல் நிலவும் இன்றைய சுழ்நிலை எந்தவிதத்திலும் தரமான கல்விக்கு உதவாது.
நாங்கள் படித்த காலத்தில், 8வது வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வி முறையே இருந்தது. ஆங்கிலம் ஒரு பாடமாக அம்மொழியினைக் கற்க ஏற்றவாறு கற்பிக்கப்பட்டது நாங்கள் தமிழிலும் பேசப், படிக்க எழுத நல்ல அறிவு பெற்றோம் ஓரளவு பேசப், படிக்க எழுத ஏற்ற ஆங்கில அறிவும் பெற்றோம் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பும் பெற்றோம் அத்தகு வழிமுறையே இன்றும் தேவை அவரவர் தாய்மொழியினை வளர்க்க பெற்றோர் சமுதாயத்து இதர அங்கங்கள் அனைத்தும் அம்மொழியினில் பேசப், பழக வேண்டும் இவையெல்லாம் அந்நிய மொழியயை ஆதரிக்க இன்றைய இளைய தலைமுறை எங்கணம் தாய்மொழியறிவு பெறும்? தாய்மொழியறிவும் இல்லாமல், அந்நிய மொழியறிவும் இல்லையேல் ஏதாவது அரசியல் வியாதிக்கு அடிவருடியாக இருக்க, பிழைக்க மட்டுமே முடியும்.நல்ல குடிமகனாக வாழ முடியாது இருக்க, பிழைக்க, வாழ என்ற இந்நிலைக்கிடையே உள்ள வேறுபாடு அறிந்தவர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்கள்.
அருமை.
எனக்கு 6ஆம் வகுப்பு ஆசிரிஎய் ஆங்கிலத்தில் noun , verb , போன்ற அடித்தளங்களை சொல்லித்தந்தார் அதன் பிறகு ஒருவருமே ஆங்கிலத்தில் முறையாக சொல்லிதரவில்லை. ஆசிரியர்கள் அதனை ஒரு மதிப்பெண் தரும் பாடமாகத்தான் நடதுகிரர்களேதவிர ஒரு மொழியாக கட்ட்ருதருவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக