திங்கள், 3 ஜூன், 2013

5 காசிற்குத் தூய்மையான குடிநீர்!

  
5  காசிற்குத் தூய்மையான  குடிநீர்!

"நானோ' தொழில்நுட்ப முறையில், 500 ரூபாய்க்கே குடிநீரை சுத்திகரிக்கும் இயந் திரத்தை கண்டுபிடித்த, பிரதீப்: நான், மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில், வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறேன். சுத்தமான நீரை குடிக்க, ஒவ்வொரு மாதமும், 1,000 ரூபாய்க்கும் மேல் செலவாகும் சூழ்நிலை உள்ளது. மனிதனின் அடிப்படை தேவையான குடிநீர், குறைந்த விலையில் கிடைக்க, ஐந்து ஆண்டுகளாக மேற் கொண்ட முயற்சியில், "நானோ' தொழில்நுட்ப முறையில், ஒரு இயந்திரம் கண்டுபிடித்தேன். முதலில் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளை அழித்த பின், இரண்டாம் கட்டமாக ஆர்சானிக், ஈயம், இரும்பு போன்ற, தேவையற்ற உலோகங்களை நீக்கினேன். சில்வர் நானோ துகள்களிலிருந்து கிடைக்கும், "வெள்ளி அயனிகள்' நீரில் உள்ள நுண்கிருமிகளை அழித்து, நீரை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை. வெள்ளி அயனிகளை நேரடியாக நீரில் சேர்ப்பதால், நுண்கிருமிகள், கனிமங்கள், தாதுக்கள் போன்றவை, அதன் சுத்தப்படுத்தும் செயல்திறனை குறைத்துவிடும் என்பதால், அதற்கான மாற்று முறையை கண்டுபிடித்தேன்.

அலுமினியம் ஆக்சிஹைட்ராக்சைடு என்ற, களிமண் போன்ற பொருளால், 50 நானோ மீட்டர் நீளமும், 30 நானோ மீ., அகலமுள்ள கூண்டு செய்து, அதனுள் வெள்ளி அயனியை வைத்து, "உயிரி பாலிமர்' பொருளால் மூடினேன். இதனால், வெள்ளி அயனியை, நீரில் உள்ள நச்சு பொருட்கள் நேரடியாக தாக்க முடியாததால், வெள்ளி அயனி விரைந்து செயல்பட்டு, நீரின் நுண்கிருமிகளை அழிக்கிறது. இதே முறையில், மற்ற அயனிகளை பயன்படுத்தி, தேவையற்ற உலோகங்களை நீக்கினேன்.

இச்சுத்திகரிப்பு இயந்திரத்தை, வீட்டில் பயன்படுத்தி, நீரை சுத்திகரித்து குடிக்கலாம். ஆண்டிற்கு ஒரு முறை கூண்டை மாற்றினால் போதும்; தொடர்ந்து பயன்படுத்தலாம். இதன் விலை, 120 ரூபாய். கிராமப்புற பெண்களுக்கு இத்தொழில் நுட்ப பயிற்சி கொடுத்தால், வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன், சுத்தமான குடிநீரை, லிட்டருக்கு, 5 பைசாவிற்கே தரமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக