ஞாயிறு, 2 ஜூன், 2013

காந்தியின் அரிதான அஞ்சல் தலைகள்...




காந்தியின்  அரிதான  அஞ்சல் தலைகள்...

நாட்டின் விடுதலை வேள்வியில் கோவைக்கும் நிறைய பங்கு உண்டு. நிறைய பேர் வெளியே தெரியாமல் நிறையவே உழைத்திருக்கின்றனர். அவர்களின் ஒருவர்தான் மறைந்த கோபால்.
பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றிவர், ஓரு முறை மகாத்மா காந்தியின் பேச்சை கேட்டது முதல் அவர் மீதும் நாட்டின் மீதும் பெரும் பக்தி கொண்டிருந்தார்.
அவரது பேச்சும், மூச்சும் எப்போதும் காந்தியைப் பற்றியே இருக்கும். நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டு துவங்கி அவர் இறக்கும் வரை சுதந்திர தினவிழாவினை கொடியேற்றி வைத்து மிகக் குதூகலமாக கொண்டாடியவர்.
தனக்குள் ஏற்பட்ட காந்தியத்தை தனது மகன் ரவிக்குமாரிடம் விதைத்துவிட்டு சென்று விட்டார்.
கோவை முருகன் மில் தொழிலாளியும், நவஜோதி ஸ்ரீ கருணாகர குருவின் சிஷ்யருமான ரவிக்குமாருக்கும், இதனால் காந்தி மீது நிறைய ஈடுபாடு உண்டு, அந்த நேரம் சுப்பையன் என்பவரின் வழிகாட்டுதலின் பேரில் காந்தி தொடர்பான தபால் தலைகளை சேகரிக்க துவங்கினார். கடந்த முப்பது வருடங்களாக இவர் சேகரித்துவரும் காந்தி தொடர்பான தபால்தலைகள் தற்போது விலை மதிப்பில்லாத பொக்கிஷமாக மாறியுள்ளது.
உலகில் உள்ள தபால் தலைகளிலே காந்தி தொடர்பான தபால் தலைகளுக்குதான் தற்போது மதிப்பு அதிகமாகும். உலகில் 135 நாடுகள் காந்தியின் தபால் தலைகளை வெளியிட்டு அவருக்கு கவுரவம் சேர்த்துள்ளன, இவரிடம் மட்டும் 55 நாடுகளின் தபால் தலைகள் உள்ளன.
இந்த தபால் தலைகளில் பல அபூர்வமானவை. வழக்கமாக காகிதத்தில்தான் தபால் தலைகள் அச்சிடப்படுவது வழக்கம், காந்திக்கு பிடித்த கதர் துணியில் அச்சான அபூர்வ தபால் தலை இவரிடம் உள்ளது. இதே போல ஒரு காலத்தில் அரசாங்க உபயோகத்திற்கு மட்டுமே சில தபால் தலைகள் சர்வீஸ் என்ற தலைப்பில் அச்சிடப்பட்டன, அந்த தபால் தலையையும் வைத்துள்ளார். சுதந்திரம் பெற்றதும் போடப்பட்ட முதல் தலையும் இவரிடம் உள்ளது.
தென்னாப்பிரிக்காவில் காந்தி தொடர்பான தபால் தலைகள் நிறைய வெளியிட்டுள்ளனர், காந்தி ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட ரயில் நிலையம் படத்தை போட்டு வெளியான தபால் தலையும் இவரிடம் உள்ளது.
காந்தி தொடர்பான தபால் தலைகள் பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கில் சேகரித்து வைத்துள்ளார், தனது மாத சம்பளத்தில் ஒரு பங்கை ஒதுக்கி இதற்காக பல இடங்களுக்கு எழுதியும், அலைந்தும் சேகரித்த தபால் தலைகளை இன்று பலரும் பார்த்துவிட்டு நிறைய விலைக்கு கேட்கின்றனராம்.
கோவை மாநகராட்சி ஊழியரும், இவரது துணைவியாருமான பிரேமாவும் இவரது தபால் தலை சேகரிப்பிற்கு நிறையவே உதவி வருகிறார், இவர்களது மகளும், மென் பொறியாளுருமான ஜெகதாம்பிகா இன்னும் ஒரு படி மேலே போய் காந்தி தொடர்பான ரூபாய் நோட்டுகள், காயின்கள் என்று சேகரிக்க துவங்கியுள்ளார்.
இது தொடர்பாக ரவிக்குமாரிடம் தொடர்பு கொள்வதற்கான எண்: 9442674484.
முக்கிய குறிப்பு: காந்தி தொடர்பான தபால் தலைகளை பார்க்க சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை பார்க்கவும்.

எல்.முருகராசு,

Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக