திங்கள், 29 ஏப்ரல், 2013

கி.பி., 7ஆம் நூற்றாண்டு ச் சிற்பங்கள் ; திருக்கோவிலூர் அருகே கண்டெடுப்பு


கி.பி., 7ஆம் நூற்றாண்டு ச் சிற்பங்கள் ; திருக்கோவிலூர் அருகே கண்டெடுப்பு
விழுப்புரம், : பல்லவர் காலத்தில் உருவான, இரண்டு அய்யனார் சிற்பங்கள், கண்டறியப்பட்டு உள்ளன. திருக்கோவிலூர் அடுத்த நெற்குன்றம் ஆற்றங்கரையில், சிவன் கோவில் உள்ளது. கல்வெட்டு ஆய்வாளர்கள், வீரராகவன், மங்கையர்கரசி, மற்றும் பிச்சைப்பிள்ளை ஆகியோர், இந்த கோவிலில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள ஆலமரத்தடியில், அய்யனார் சிற்பங்கள் கண்டறியப்பட்டன.

இதுபற்றி, ஆய்வாளர் வீரராகவன் கூறியதாவது:

பொதுமக்கள் வழிபாட்டில் உள்ள ஒரு அய்யனார் சிற்பம், திண்டிவனம் அடுத்த கிளியனூரில் உள்ள தனிக்கோவில் சிற்பத்துடன் ஒத்துப்போகிறது. ஒழுங்கற்ற கற்பலகையில், புடைப்புச் சிற்பமாக வெட்டப்பட்டுள்ள அய்யனார் சிற்பம், கிராம காவல் தெய்வமாக காட்சியளிக்கிறது. அய்யனார், வலது காலை தொங்கவிட்டும், இடது காலை குத்திட்டும், உட்குடி ஆசனத்தில் அமர்ந்துள்ளது போல், சிலை வடிக்கப்பட்டுள்ளது.

வலது கையில் சாட்டை ஒன்று பற்றி, வலது தொடையிலும், இடது கை, கால், முட்டியின் மீதும், ஊர்ந்து செல்வது போல் உள்ளது. இடது பாதத்தின் கீழ், குதிரை ஒன்றும், இடையில் அரையாடை அணிந்தும், அதில் நேர்த்தியான முடிச்சுகளும் அமைந்துள்ளது. வயிற்றின் மீது வயிற்றுக்கட்டும், வயிற்றுக்கடியில் குத்துவாள் ஒன்றும் செருகப்பட்டுள்ளது.

மார்பில் புரிநூலும், கழுத்தில் ஆரமும், காதுகளில் பத்திரக் குண்டலங்களும், தலையில் மூன்றடுக்கு கொண்டையுடன், சடாபாரத்துடன் செதுக்கப்பட்டிருப்பது, சிற்பத்திற்கு அழகூட்டுகிறது. இந்த சிற்பம். கி.பி., 10-11ம் நூற்றாண்டில் வடிக்கப்பட்டதாக இருக்கலாம். இந்த சிற்பத்திற்கு அருகே, உடைந்த பழமையான பல்லவர் கால அரிய அய்யனார் சிற்பம் கண்டறியப்பட்டது. இதன் தலை அலங்காரமும், காதணிகளும், கழுத்தில் அணியப்பட்டுள்ள சரபலியும், வெகு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, பல்லவர் கால கலை நயத்தை எடுத்து காட்டுகிறது. இது. கி.பி., 7ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். இவ்வாறு, வீரராகவன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக