புதன், 23 ஜனவரி, 2013

ஊர்தியையும் பிணையில் எடுக்கலாம்


சொல்கிறார்கள்

ஊர்தியையும்  பிணையில் எடுக்கலாம்!
 சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திலகேசுவரன்: குற்ற வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியை, பெயிலில் எடுப்பது போல், குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தையும் பெயிலில் எடுக்கலாம். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும் போதெல்லாம், வாகனத்தை ஒப்படைக்கிறேன் என, ஒரு, "அபிடவிட்' கொடுத்து விட்டு அல்லது வாகனத்திற்கான காப்பீட்டு மதிப்பை கட்டி விட்டு, வெளியே எடுத்து வந்து, பயன்படுத்தலாம். குற்ற வழக்கில் காவல் நிலையத்திற்கு வரும் வாகனங்கள், வழக்கு முடியும் வரை, காவல் நிலையத்திலேயே இருக்க வேண்டும் என்பதே, இதுவரை கடைபிடிக்கப்பட்ட நடைமுறை. குற்றவியல் நடைமுறைச் சட்டம், 451, 452, 453, வாகனங்களை, உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கு உதவுகின்றன. ஒரு லாரியில், ரேஷன் அரிசி கடத்தப்படுவதை கண்டறிந்த, மதுரை குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர், வழக்கு பதிவு செய்து, லாரியை பிடித்து வைத்தனர். உரிமையாளர் அதிகாரிகளிடம் கேட்டும், ஒப்படைக்க மறுத்தனர். உரிமையாளர் வழக்கு முடியும் வரை, லாரியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டி, நீதிமன்றத்தில் மனு செய்தார். வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எம். வேணுகோபால், கைப்பற்றிய வாகனத்தை, உரிமையாளரிடம் அதிகாரிகள் ஒப்படைக்கலாம் என, தீர்ப்பு வழங்கினார். இது போன்ற சட்ட நடைமுறைகள், திருடப்பட்ட வண்டிகளை, அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்கு மட்டுமல்ல; வாகனத்தின் உரிமையாளரே குற்றவாளியாக இருக்கும் வழக்கிலும், பின்பற்றலாம். விபத்து ஏற்படுத்திய வாகனங்களின் உரிமையாளர்கள், தேவையின்றி நஷ்டம் அடைவதும், காவல் நிலையங்களை சுற்றி, அலங்கோலமாக நல்ல வாகனங்கள் பழுதாகி குவிந்து கிடப்பதும் தவிர்க்கப்படும்.
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இவ்வாறான நிகழ்வுகள் இப்பொழுதும் மிகவும் குறைவாக நடக்கின்றன. காவல் துறையின் ஒப்புதல் கிடைத்தால் வழக்கிற்குத் தேவைப்படும் பொழுது நீதி மன்றத்திற்குக் கொண்டுவருவதாக உறுதி அளித்துப் பெறலாம். 20 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு  வழக்கில் திருடப்பட்டு மீ்ட்கப்பட்ட நகைகள்,  திருமணத்திற்குத் தேவை எனக் காவல் துறையின் ஒப்புதலுடன்   என் முயற்சியால் பெறப்பட்ட நிகழ்வு நினைவிற்கு வருகிறது. எனினும் இதைப் பரவலாக ஆக்க வேண்டும். அதற்கு இத்தீர்ப்பு உதவும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக