புதன், 23 ஜனவரி, 2013

மும்பையில் தமிழ் மகள் பட்டயக்கணக்குத்தேர்வில் (சி.ஏ.) முதலிடம்

 

மும்பையில் மிதியூர்தி(ஆட்டோ) ஓட்டும் தமிழரின் மகள் அகில இந்தியப் பட்டயக்கணக்குத்தேர்வில்

(சி.ஏ.) முதலிடம்

மும்பையில் ஆட்டோ ஓட்டும் தமிழரின் மகள், அகில இந்திய சார்ட்டர்டு அக்கவுன்டன்சி (சி.ஏ.) தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயகுமார் பெருமாள் கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் தன் மனைவி, மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். அவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். அவரது மகள் பிரேமா ஜெயகுமாரும், 22 வயது மகனும் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற சி.ஏ. தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில், சி.ஏ. தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.
அதில் பிரேமா ஜெயகுமார் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் 800க்கு 607 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் பி.டி.ஐ. செய்தியாளரிடம் கூறுகையில், ""இது எனது வாழ்நாள் சாதனை. என்னைப் பொறுத்தவரை, வெற்றிக்கான சாவி என்பது கடின உழைப்புதான். எனது இந்த வெற்றிக்கு என் பெற்றோர்தான் காரணம்.
அவர்களின் ஆதரவு மற்றும் ஆசி இல்லாமல் இந்த வெற்றி கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தி வந்தனர். எனக்காக இவ்வளவு தூரம் பாடுபட்ட அவர்களை இனி வசதியாக வாழ வைக்க விரும்புகிறேன். என் தந்தையையும், இல்லத்தரசியான தாயையும் நினைத்து பெருமைப்படுகிறேன்.
அவர்கள் எனது மற்றும் என் தம்பியின் படிப்புக்கு பணம் ஒரு தடையாக இருக்கும் நிலையை எப்போதும் ஏற்படுத்தியதில்லை'' என்று தெரிவித்தார். பிரேமாவின் சகோதரரும் சி.ஏ.வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
முன்னதாக, மும்பை பல்கலைக்கழகம் நடத்திய பி.காம் மூன்றாம் ஆண்டுத் தேர்வில் பிரேமா 90 சதவீத மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


மும்பை: சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.,) படிப்பில், தமிழகத்தை சேர்ந்த, பிரேமா ஜெயகுமார் என்ற மாணவி, நாட்டிலேயே முதலாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த ஜெயகுமார் பெருமாளின் மகள், பிரேமா. குடும்பத்தினருடன் சிறு வயது முதல் மும்பையில் வசித்து வருகிறார். இவர் தந்தை, மும்பையில், ஆட்டோ ஓட்டுகிறார். கடந்த ஆண்டு, நவம்பரில் நடந்த, சி.ஏ., இறுதி தேர்வை பிரேமா எழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின.

மொத்தமுள்ள, 800 மதிப்பெண்களில், 607 மதிப்பெண் பெற்று, நாட்டிலேயே, முதலாவது மாணவியாக பிரேமா தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தம்பியும், சி.ஏ., படிப்பில் இப்போது வெற்றி பெற்று உள்ளார்.

மும்பை, மாலாடு பகுதியில், ஒரு அறை வீட்டில் தாய், தந்தை, தம்பியுடன் வசிக்கும் பிரேமா, ""கடின உழைப்பு தான் வெற்றிக்கு காரணம்,'' என, தெரிவித்துள்ளார். பி.காம்., படிப்பிலும், மும்பை பல்கலைக்கழகத்தில், 90 சதவீத மதிப்பெண் பெற்று, இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றவர் பிரேமா.

1 கருத்து:

  1. வெற்றிக்கான சாவி என்பது கடின உழைப்புதான் உண்மையான கருத்து. தங்கைக்கு பிரேமா அவர்களுக்கு வாழ்த்துகள்! திரு ஜெயக்குமார் மற்றும் அவரது துணைக்கும் வணக்கமும் பாராட்டும்.

    பதிலளிநீக்கு