வெள்ளி, 15 ஜூன், 2012

சொல்கிறார்கள் "பிரமிப்பு ஏற்பட்டது!'

சொல்கிறார்கள்

"பிரமிப்பு ஏற்பட்டது!'


படைப்புத் திறன் மிக்க இளம் மாணவியாக, "பாலஸ்ரீ' விருது பெற்றுள்ள ஹரிணி ஜீவிதா: நான் ஆறு வயதிலிருந்தே, பரதநாட்டியம் கற்றுக் கொள்கிறேன். என் நாட்டிய குரு, ஷீலா உன்னிகிருஷ்ணன் தான், "பாலஸ்ரீ' விருது பற்றி எடுத்துச் சொல்லி, என்னைப் பங்கேற்க வைத்தார். சென்னையில் தான், முதல் சுற்றுப் போட்டிகள் நடந்தன. எழுத்து, படைப்பாற்றல், கலை, விஞ்ஞானம் என, பல பிரிவுகளில், பல சுற்றுகளில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்ற போது, கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது. ஆனாலும், தன்னம்பிக்கையுடன், அனைத்தையும் எதிர்கொண்டேன். கற்பனைத் திறன் பிரிவில் தேர்வாகி, அடுத்த கட்டத்திற்குச் சென்றேன். அடுத்து, திருவனந்தபுரத்தில் நடந்த போட்டிகள், இன்னும் கடுமையாக இருந்தன. அனைத்தும், தனித்திறமை மற்றும் கற்பனைக்குமான சவால்கள். உதாரணத்திற்கு, அரைமணி நேரம் மட்டுமே, கால அவகாசம் தந்து, ஒரு நாடகம் தயார் செய்து, நடிக்க கூறினர். நாங்கள், "வனப்பாதுகாப்பு' என்ற தலைப்பில் நாடகத்தை அரங்கேற்றினோம். கேரளாவில் சங்கமித்த, இளந்திறமையாளர்களைப் பார்த்து, எனக்கு பிரமிப்பு தான் ஏற்பட்டது. டில்லியில் நடந்த, இறுதி கட்ட போட்டிக்கு, இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும், 60க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். மொத்தம் ஆறு நாட்கள், தொடர்ச்சியாக காலை முதல் இரவு வரை, நிறைய போட்டிகள், நிகழ்ச்சிகள் நடந்தன. கலை நிகழ்ச்சி பிரிவில், தலை மீதும், உள்ளங்கைகளிலும், தீபங்கள் ஏந்தி, கவிழ்த்த பானை மீது, ஆடிய படியே, தட்டின் மீது தாவி ஆடி, யோகாசனமும் செய்து காட்டியதற்கு, நல்ல வரவேற்பு இருந்தது. டில்லியில் பங்கேற்ற, 60 பேரில், 16 பேர் மட்டுமே, "பாலஸ்ரீ' விருதுக்கு தேர்வானோம். அதில், தமிழகத்திலிருந்து படைப்பாற்றல் திறன் பிரிவில், தேர்வானது நான் மட்டுமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக