ஞாயிறு, 10 ஜூன், 2012

சொல்கிறார்கள்



இதுவரை 500 பதக்கங்கள் வென்று விட்டேன்!'

நீச்சல் வீராங்கனை ஐஸ்வர்யா: என் அப்பா, பிரபலமான நீச்சல் பயிற்சியாளர் சந்திரசேகர்; அவரிடம் நீச்சல் பயின்றவள் நான். நான்கு வயதில் முதன் முதலில் நீந்த ஆரம்பித்தேன். அந்த வயதில் நான் நீச்சல் போட்டியில் வென்ற தங்கம், மறக்கவே முடியாது. அதற்குப் பின், என் அப்பா, "போட்டிகள் வேண்டாம்; நன்றாக பயிற்சி எடு' என்றார்.ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம், கடுமையான பயிற்சிகள் எடுத்தேன். கிட்டத்தட்ட, ஆறு ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் போட்டியில் பங்கேற்ற போது, நான் ஆறாம் வகுப்பு மாணவி; மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தேன்.பத்தாம் வகுப்பு படிக்கும் போது, "பேக் ஸ்ட்ரோக்' பிரிவில், ஒரே சமயத்தில், மூன்று தங்கம் உட்பட, ஐந்து பதக்கங்களை மாநில அளவில் ஜெயித்து, தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றேன். அங்கு, நான்கு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றேன்.அந்த வெற்றியால், இந்தியாவின் சார்பாக, தெற்காசிய விளையாட்டிற்கு தேர்வானேன். ஆனால், போட்டிக்கு முன், முட்டியில் ஏற்பட்ட சுளுக்கால், தவித்துப் போனேன். வலியை பொருட்படுத்தாமல் தாங்கிக் கொள்வோம் என முடிவெடுத்து, போட்டியில் பங்கேற்றேன்.பாகிஸ்தானில் நடந்த அந்தப் போட்டிக்கு, என் அப்பாவால் வர முடியவில்லை. போட்டி துவங்க, சில மணி நேரம் இருக்கும் போது தான், அப்பா உடன் இல்லாதது, எவ்வளவு சோர்வாக உள்ளது என்பதை உணர்ந்தேன். மனதை பலப்படுத்தி போட்டியில் பங்கேற்று, வெள்ளி வென்றேன்.பிளஸ் 1 படிக்கும் போது, ஐந்து தங்கம், ஐந்து வெள்ளி, நான்கு வெண்கலப் பதக்கங்களை தேசிய ஜூனியர் போட்டிகளில் வென்றேன். அந்த வெற்றிகள் தான், அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங்கில் விளையாட்டுக் கோட்டாவில், இரண்டாம் இடத்தை எனக்குப் பெற்றுத் தந்தது.இதுவரை, 500 பதக்கங்களுக்கு மேல் ஜெயித்து இருக்கிறேன். நீந்துவதில், இன்னும் இரண்டு நிமிடங்கள் குறைத்துவிட்டால், ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துவிடும்.
"கருவிலேயேபிரச்னையைதீர்க்கலாம்!'
பச்சிளங் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர் தீபா ஹரிகரன்: கர்ப்ப காலத்தில், அம்மா, கரு இருவருக்கும் ரத்த வகை எப்படி உள்ளது என்பதை அறிய வேண்டும். அம்மாவின் ரத்தம், ஆர்.எச்., நெகடிவ்வாக இருந்து, கரு, ஆர்.எச்., பாசிடிவ் என்றால், கருவிலேயே ரத்த சோகை பிரச்னை வரும். பிறந்த பின், மஞ்சள் காமாலை உட்பட, பல உடல் கோளாறுகள் வரலாம். கர்ப்பத்தின், 14வது வாரத்தில், "ஸ்கேன்' செய்யும் போது, கருவின் ரத்த ஓட்டம் வழக்கத்தை விட வேகமாக இருந்தால், ஆர்.எச்., பாசிடிவ் என, ஊகிக்கலாம். தொடர்ந்து, குறிப்பிட்ட இடைவெளியில், கருவின் ரத்த சிவப்பணுக்களை கண்காணிக்க வேண்டும்.கருவில், சிவப்பணு அளவு கணிசமாகக் குறைவது தெரிந்தால், கருவினுள், அம்மாவின் வகை ரத்தத்தை ஏற்ற வேண்டும். கர்ப்பத்தில், கருவின் ரத்தம், அம்மாவின் ரத்தத்தில் கசியும். ஆனால், மாறுபட்ட ரத்த வகையாக இருந்தால், ஏதோ வேண்டாத அன்னிய வஸ்து நமக்குள் வருகிறது என, அம்மாவின் ரத்தத்திலுள்ள, எதிர்ப்பு அணுக்கள் நினைத்து, அதை வேகமாக அழிக்கும்.இது அனைத்தும், கருவைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நடக்கும் செயல். இதனால், கருவின் ரத்தத்திலுள்ள சிவப்பணு குறையும். உடலின், அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்வது சிவப்பணுவின் செயல். உயிர் வாழ எது அவசியமோ, அது வேகமாக அழிகிறது. சிவப்பணு அழியும் போது, மஞ்சள் காமாலை வரும்.சிவப்பணுவின் அளவு குறைவதால், கருவிலேயே ரத்த சோகையும், பிறந்த பின் இதயம், நுரையீரல் கோளாறு போன்ற பிரச்னைகளும் வரலாம். மஞ்சள் காமாலையை உண்டாக்கும், "பிலிருபின்' நிறமி, 15 வரை இருந்தால், பிரச்னை இல்லை. ஆனால், மாறுபட்ட ரத்த வகையால், 40 வரை கூட அதிகமாகும்.மாறுபட்ட ரத்த வகையால், வாழ்நாள் முழுக்க, உடல் கோளாறுகளுடன் இருப்பதை தவிர்க்க, சிறப்பு சிகிச்சை மூலம், கருவிலேயே, ஆர்.எச்., நெகடிவ் ரத்தத்தை கருவின் தன்மையைப் பொருத்து, தேவைக்கேற்ப ஏற்றுவோம். இதனால், பல உடல் கோளாறுகளை கருவிலேயே தவிர்த்து விடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக