பன்முக இராணி...!
பன்முக தன்மைகளை தனக்கே உரித்தாக்கிய பேராசிரியர் ருக்மணி பன்னீர்செல்வம்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் என் சொந்த ஊர். விவசாயக் குடும்பம். படிப்பு வாசனையே அறியாதவர்கள் என் அப்பா - அம்மா. ஏழாம் வகுப்பு படிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டது. குடும்ப வறுமையாலும், சூழ்நிலையாலும் ஏழாம் வகுப்புடன் என் படிப்பு தடைபட்டது. இது தான் முற்றுப்புள்ளி என்று நான் சமரசம் ஆகி விடவில்லை. எட்டு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் என் படிப்பைத் தொடர்ந்தேன். பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பி.ஏ., எம்.ஏ., பி.எட்., எம்.பில்., பிஎச்.டி., தையற்கலை, தட்டச்சு, இந்தி என, கல்வியில் என் எல்லைகளை விரிவாக்கினேன். கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என, இவை எல்லாம் இப்போது எனக்கான அடையாளங்கள்... வீட்டில் இருந்தபடியே படித்து எட்டாம் வகுப்பு தேர்வு எழுதலாம் என்று செய்தித்தாளில் வந்த தனியார் பயிற்சிப் பள்ளியின் விளம்பரத்தை பார்த்த போது, என்னுள் நம்பிக்கை துளிர்விட்டது. வீட்டில் அனுமதி கிடைக்காது என்பதால், வீட்டுக்குத் தெரியாமல் அஞ்சல் மூலமாக பாடங்களைப் பெற்று படித்தேன். அம்மா, அப்பா இருவருமே வேலைக்கு போய்விட்டு இரவு தான் வீடு திரும்புவர் என்பதால், இதை ரகசியமாகவே வைத்திருந்தேன். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் அவர்களிடம் சொன்னேன். என் அண்ணன் உதவியோடு மற்ற படிப்புகளைத் தொடர்ந்தேன். யுனிவர்சிட்டி கோல்டு மெடலிஸ்ட் என்கிற பெருமையுடன் ஊரிசு கல்லூரியில் எம்.ஏ., சேர்ந்தேன். புரட்சிகரமான சிந்தனையிலும், முற்போக்கான எண்ணங்களிலும் விருப்பம் கொண்ட எனக்கு, அதே அலைவரிசையில் கணவர் அமைந்தது என் பாக்கியம். ஊரிசு கல்லூரியில் வருகை பேராசிரியர் பணியில் இருந்தபோது, வேலூர் மகளிர் சிறை கைதிகள், 10 பெண்களுக்கு எம்.ஏ., வரலாறு பாடம் நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. நான் பெற்ற கல்வியின் பயனை முழுமையாக உணர்ந்தது; அந்த பெண்களின் தேர்ச்சியில் தான். வேலூர் விநாயக முதலியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியர் பணிக்கு நடுவே முனைவர் பட்டத்தையும் பெற்ற போது, "வில்லேந்திய புறாக்கள்' என்கிற கவிதைத் தொகுதி, "இந்திய வரலாறு கண்ட இணையில்லா அரசிகள்' உள்ளிட்ட சில நூல்களை எழுதினேன்.
- தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக