வியாழன், 5 ஏப்ரல், 2012

கடலூர், விழுப்புரத்தில் கருக்கலைப்பு அதிகரிப்பு: அபாயத்தை அறியாத அப்பாவி மக்கள்




கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் பலர், கருவுற்ற மூன்றாம் மாதத்தில், "ஸ்கேன்' என்ற ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் சோதனை மேற்கொண்டு, பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்து வருகின்றனர் என்ற புகார் உள்ளது. ஆனால், அக்காலத்திற்குள் பாலினம் எது என்பதை எப்படித்துல்லியமாக கண்டறிகின்றனர், அதற்கு என்ன ஆதாரம் என்பதை யாரும் கூறவில்லை. மேலும், கருக்கலைப்பிற்கு பெண்களாக முன்வருகின்றனரா, அல்லது கணவர் தரப்பு தூண்டுதல் இருக்கிறதா என்ற தகவலும் இல்லை.

தடுப்பு சட்டம்: கருக்கலைப்பைத் தடுக்க தமிழக அரசு, 1994ம் ஆண்டு, கருவின் தன்மையைக் கணிக்கும் தொழில் நுட்ப முறைகள் (ஒழுங்குபடுத்துதல் மற்றும் தவறான பயன்பாட்டை தடுத்தல்) சட்டத்தை இயற்றியது.
இதன்படி,
*கர்ப்பிணிப் பெண்களுக்கு, "ஸ்கேன்' செய்து, கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரிவிக்கக் கூடாது; இதை மீறுவோருக்கு சிறை தண்டனை விதிப்பதோடு, "ஸ்கேன்' என்ற சோதனை மையத்திற்கான அனுமதி ரத்து செய்யப்படும்.
*"ஸ்கேன்' மையத்திற்கு அனுமதி வழங்க, மாவட்ட அளவில் இணை இயக்குனர் தலைமையில், ஒரு குழுவை நியமித்தது. சுகாதாரத் துறையில் பணியாற்றும் பகுதி சுகாதார செவலியர்கள் மற்றும் சமுதாய நல செவிலியர்கள், "மையங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன.

பலன் இல்லை:ஆனால், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள இந்த மாவட்டங்களில், தற்போது கருக்கலைப்பு அதிகரித்து உள்ளது. கடலூர் மாவட்டத்தில், 126; விழுப்புரம் மாவட்டத்தில், 56 தனியார் பரிசோதனை மையங்கள் உள்ளன.தொழில் போட்டி காரணமாக, சில "ஸ்கேன்' மையங்களில், கருவின் பாலினத்தை பகிரங்கமாகவே தெரிவித்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு கருக்கலைப்பு நடப்பதால், புகார் எதுவும் தெரிவிக்கப் படுவதில்லை. எனவே, இதுகுறித்து, அரசு ஆய்வு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

காரணம் என்ன?இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தொழில் போட்டியில் தனியார் "ஸ்கேன்' மையங்கள், பாலினத்தை பகிரங்கமாகவே கூறுகின்றனர் என்ற புகார் எழுத்துப் பூர்வமாக வருவதில்லை; அதனால் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. உரிய கணக்கெடுப்பு வசதியும் அதனால் இயலவில்லை .கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்ணுக்கு, உடல் மற்றும் மன ரீதியாக பல பாதிப்புகள் ஏற்படும். முறையாக கருக்கலைப்பு செய்யாவிட்டால், உயிருக்கே ஆபத்து ஏற்படவும்; கர்ப்பப்பை பலவீனமடைந்து, அடுத்து கருத்தரிக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது. இதை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே, இதுபோன்ற செயல்களை தடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

இன்னர்வீல் சங்க அகில இந்திய அமைப்பு உறுப்பினரான பேராசிரியர் ஜெயந்தி ரவிச்சந்திரன் கூறியதாவது:ஒத்துழைப்பு அவசியம்கருவின் பாலினத்தை அறிவிப்பதை தடை செய்து, மத்திய அரசு, 1994ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்த போதிலும், 2004 ஆண்டு தான் செயல்பாட்டிற்கு வந்தது. கடலூர் மாவட்டத்தில், "ஸ்கேன்' மையங்களை கண்காணிக்க, மருத்துவ துறை இணை இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப் பட்டது; அதில், நானும் ஒரு உறுப்பினர்.எங்கள் குழு தீவிர ஆய்வு மேற்கொண்டு, அரசின் அனுமதியின்றி, "ஸ்கேன்' மையங்கள் நடத்தி வந்த தனியார் மருத்துவமனைகள் மற்றும் பாலினத்தை அறிவித்த மையங்களில் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக, மாவட்டத்தில் கருவின் பாலினத்தை அறிவிப்பது, முற்றிலுமாக தடுக்கப்பட்டது.கருவின் பாலினத்தை தெரிவிக்கும் ஸ்கேன் மையம் குறித்து, பொதுமக்கள் தகவல் கொடுத்தால், சம்பந்தப்பட்ட மையத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு ஜெயந்தி ரவிச்சந்திரன் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக