கனத்த மவுனத்தில் யாழ்ப்பாணம்: நத்தை வேகத்தில் நலத் திட்டப் பணிகள்
இலங்கையின் வடபகுதியில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதி, இப்போது எப்படி இருக்கிறது? யாழ்ப்பாணம் பகுதியில், இரண்டு நாட்கள் சுற்றிப்பார்த்த போது, மனதை நெருடும் பல காட்சிகள் கண்ணில் பட்டன.விடுதலைப் புலிகளின் வசமிருந்து, 1995லேயே விடுபட்ட பின்னரும், விடுதலைப் புலிகள், சிங்கள ராணுவம் இடையிலான போர் முடிந்து, இரண்டே முக்கால் ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையிலும், பாதிப்பின் வடு இன்னும் யாழ்ப்பாணத்தை விட்டு அகலாத நிலை காணப்படுகிறது.
பாழடைந்த கட்டடங்கள் :யாழ்ப்பாணம் நகர் மற்றும் யாழ் மாவட்டத்தின் சில பகுதிகளில், குண்டு வீச்சில் பாழ்பட்ட பல வீடுகள், கட்டடங்களைப் பார்க்க முடிந்தது.
குறிப்பாக, யாழ் மத்திய கல்லூரி அமைந்திருக்கும் தெருவிலேயே, இத்தகைய கட்டடங்கள் உள்ளன. யாழ் மத்திய கல்லூரியில், புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. கடந்த வாரம், மாணவர்களுக்கு என புதிய நீச்சல் குளம் ஒன்றை, இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இக்கல்லூரியில் திறந்து வைத்தார்.
குறிப்பாக, யாழ் மத்திய கல்லூரி அமைந்திருக்கும் தெருவிலேயே, இத்தகைய கட்டடங்கள் உள்ளன. யாழ் மத்திய கல்லூரியில், புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. கடந்த வாரம், மாணவர்களுக்கு என புதிய நீச்சல் குளம் ஒன்றை, இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இக்கல்லூரியில் திறந்து வைத்தார்.
அவலத்தில் போலீஸ் நிலையம்:யாழ்ப்பாண நகர் போலீஸ் நிலையம், இன்னும் சீரமைக்கப்படவில்லை. அதன் கட்டடத்தில், துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த அடையாளங்கள், ஆங்காங்கே எலும்புக் கூடு போல துருத்திக் கொண்டிருக்கும் கம்பிகள் என, புனருத்தாரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது, போலீஸ் நிலையக் கட்டடம்.
புதுப்பிக்கப்படும் கோர்ட்:தற்போது, சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு வருவதாக, அரசுத் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. அதற்கேற்ப, யாழ் கோர்ட் கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஆயினும், யாழ் மாவட்டத்தின் பிற பகுதிகளில், நிலைமை சொல்லும்படி இல்லை.
வேலையில்லாத் திண்டாட்டம்:சமரபாகு என்ற கிராமத்தில், வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக, இளைஞர்கள் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வருவதாக, அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நாட்டில், நீண்ட கால போர் எத்தகைய மோசமான விளைவுகளை ஏற்படுத்தி, எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும் என்பதை, சமரபாகுவில் பார்க்க முடிந்தது.
ராணுவ பீதியில் மக்கள்:யாழ்ப்பாண நகர் மட்டுமின்றி, அம்மாவட்டம் முழுவதும், ராணுவத்தின் இருப்பு இன்றும் தொடர்கிறது. நகரில், குறிப்பிட்ட தூரத்திற்கு, ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்திய வண்ணம், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.அவ்வப்போது, ராணுவ வீரர்கள் அடங்கிய வாகனங்கள், ரோந்து செல்கின்றன. அந்த வாகனங்கள் மட்டுமின்றி, இலங்கை தேசியக் கொடி கட்டப்பட்ட வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் ஆகியவற்றையும் கண்ட மாத்திரத்தில், சாலைகளில் சென்று கொண்டிருப்போர், சட்டென ஒதுங்கி நின்று விடுகின்றனர்.நகரின் பல பகுதிகளில் இருந்து, ராணுவம் பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரைவில், மொத்த ராணுவத்தையும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்ற, அரசுடன் பேசி வருவதாகக் கூறினார்.
மோசமான சாலைகள்:நகரின் குறிப்பிட்ட இடங்களைத் தவிர, பெரும்பாலான இடங்களில், சாலை வசதிகள் சொல்லும்படியாக இல்லை. குண்டு, குழிகள் எல்லாம் ஒட்டுப் போடப்பட்டு, ஒப்பேற்றப்பட்டுள்ளன.சாலைகள் அனைத்தும், கிராமச் சாலைகள் போல, ஒற்றை வழிச் சாலைகளாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், பருத்தித் துறை, வல்வெட்டித் துறை செல்லும் பாதை மட்டும், இரு வழிச் சாலையாக, முறையான பராமரிப்புடன் காணப்படுகிறது. இப்பாதையின் சில பகுதிகளில், சாலை போடும் பணிகள், ஜரூராக நடந்து வருகின்றன.நகரின் முக்கியமான பகுதிகளில் இருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு செல்வதற்கான பஸ் வசதிகள் மிகவும் குறைவு. அதனால் பல தனியார் மினி பஸ்கள் பயணிகளை புளி அடைத்துச் செல்வதைப் போல ஏற்றிச் செல்வதைக் காண முடிந்தது.
மறக்க முடியாத சோகம்:யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள உஸ்மானியா கல்லூரி, 2009 போருக்குப் பின், முழுவீச்சில் செயல்படத் துவங்கியுள்ளது. 2003ல், இக்கல்லூரியில், 41 மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர். தற்போது, இங்கு, 447 பேர் படித்து வருகின்றனர்.விடுதலைப் புலிகளின் சரிவுக்கான முக்கிய காரணங்களில், 1990களில், வட மாகாணத்தில் இருந்து, முஸ்லிம்களை வெளியேறச் சொன்னதும் ஒன்று. யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத் தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்த முஸ்லிம்கள், 72 மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டனர்.இந்த துயர சம்பவத்தைக் கொண்டாடிய புலிகள், உஸ்மானியா கல்லூரியின் வாசலில், "தமிழினத்தின் நீண்ட பெருமை மிக்க வரலாற்றில், புதைந்து போன ஒரு வீர மரபு மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது - தேசியத் தலைவர் வே. பிரபாகரன்' என எழுதி வைத்திருந்த காட்சியை, அங்கு புகைப்படமாக வைத்திருந்தனர்.
இந்திய உதவியில் ரயில் திட்டம்:போரின் உச்சகட்ட கொடூரத்தின் சாட்சியமாக, சேதம் அடைந்த யாழ்ப்பாணம் ரயில் நிலையம் காட்சியளிக்கிறது. தற்போது, ஓமந்தை வரையிலான ரயில் பாதை, இந்திய அரசின் நிதியுதவியால் முடிவு பெற்று செயல்பாட்டில் உள்ளது.தொடர்ந்து, பளையில் இருந்து காங்கேசன் துறை வரையிலான ரயில் பாதை அமைக்கும் பணி, அடுத்தாண்டிற்குள் முடிந்து விடும் என, பலாலியில் உள்ள இந்தியத் துணைத் தூதர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார். தற்போது இப்பணி, யாழ்ப்பாணத்தில் இருந்து துவங்கியுள்ளதாக கூறிய அவர், கண்ணி வெடிகள் அகற்றப்பட்டதாக உறுதியளிக்கப்பட்டால் தான், பணிகள் விரைவில் முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இனி மேல்தான்...:கடந்த 7ம் தேதி, யாழ்ப்பாண நகரில் உள்ள பூங்கா ஒன்றின் அருகில், மின்சார வாரியத்திற்கான கட்டடம் கட்டுவதற்காக, இலங்கை மின் வாரிய அமைச்சர் சம்பிக ரணவக்க, பாரம்பரிய தொழில்கள் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர், அடிக்கல் நாட்டினர். இனிமேல் தான், அங்கு மின்வாரியக் கட்டடம் வரப் போகிறது.
மின்வெட்டு இல்லை:இருப்பினும், யாழ்ப்பாண நகரில் மின்வெட்டு இல்லை. அவ்வப்போது, மின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் கூட, 24 மணி நேரமும் மின்சார வசதி உள்ளது. அடுத்தாண்டிற்குள், வட மாகாணம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என, அமைச்சர் ரணவக்க உறுதியளித்துள்ளார்.
வியாபாரிகள் விருப்பம்:யாழ்ப்பாண நகரின் பிரதான பகுதியான திருநெல்வேலியில், தற்போது தான் விரிவாக்கப்பட்ட காய்கறிச் சந்தைக்கான கட்டடம் ஒன்று திறக்கப்பட்டது. இந்தத் திறப்பு விழா, கடந்த 7ம் தேதி நடந்தது. நகரின் முக்கிய இடமான இந்தச் சந்தை, இன்னும் விரிவாக்கப்பட வேண்டும் என, அங்குள்ள வியாபாரிகள் விரும்புகின்றனர்.
குவியும் மக்கள்:யாழ்ப்பாணத்தின் முக்கிய அடையாளங்களான நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் யாழ்ப்பாண நூலகம் ஆகியவற்றுக்கு, நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மக்கள் சுற்றுலா வருகின்றனர். கடந்த 8ம் தேதி, இந்த இரு இடங்களுக்கும், நாட்டின் மத்திய பகுதியில் உள்ள புத்தளம் இஸ்லாமியப் பள்ளி ஒன்றின் மாணவ மாணவியர் சுற்றுலா வந்திருந்தனர்.
அருங்காட்சியகத்தின் அவலம்:நகரின் நாவலர் சாலையில் அமைந்துள்ள அருங்காட்சியகம், ஏதோ ஏழை குடிசை போலக் காட்சியளித்தது. யாழ்ப்பாணத்தின் தொன்மையை விளக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பழம் பொருட்கள், பராமரிப்பின்றி காணப்படுகின்றன. சில பொருட்களைக் காணவில்லை. வெறும் அலமாரி தான் இருக்கிறது. ஏனோ தானோ என்று தான் அருங்காட்சியகம் பராமரிக்கப்படுகிறது.
நினைத்தால் செய்யலாம்:பார்லிமென்டில் பெரும்பான்மையான பலத்துடன் உள்ள அதிபர் ராஜபக்ஷேவின் அரசு நினைத்தால், பல நலத் திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் நிறைவேற்றிட முடியும். ஆனால், அரசு அதற்குத் தயாராக இல்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.கொழும்பு, அனுராதபுரம் உள்ளிட்ட நாட்டின் பிற நகரங்கள், முழுமையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் இருக்கும் போது, யாழ்ப்பாணம் அடிப்படையான உட்கட்டமைப்பு வசதிகள் கூட இன்றி திண்டாடுவதை நாம் நேரில் பார்க்க முடிந்தது.
வெறிச்சோடிய யாழ்ப்பாணம்: போர்க் கால நினைவுகளில் இருந்து, இன்னும் யாழ்ப்பாண மக்கள் மீளவில்லை. பகல் பொழுதிலேயே பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது. மாலை 7 மணிக்கு மேல் நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில், மக்கள் நடமாட்டம் அறவே இல்லை. 8 மணி வரை, நகரின் பிரதான வீதி, பஸ் நிலையம் அமைந்துள்ள பகுதி ஆகியவற்றில், சிறிது மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது.பொதுவாக, நகரின் அனைத்து பகுதிகளிலும், 8 மணிக்கு மேல், யாரும் வெளியில் நடமாடுவதில்லை. திருநெல்வேலி, சமரபாகு, மாதகல், வல்வெட்டித் துறை போன்ற பகுதிகளில், மக்களிடம் விசாரித்த போது, "இனியாவது எங்களை வாழவிட்டால் போதும். போருக்குப் பிந்தைய நிலை கொஞ்சம் பரவாயில்லை' என்று, மிகவும் நொந்த மனதுடன் தெரிவித்தனர்.அதேநேரம், விடுதலைப் புலிகள், ராணுவம் இருவரின் கட்டுப்பாட்டில் இருந்தும் விடுபட்ட மகிழ்ச்சி மனோ நிலை அவர்களிடம் காணப்படவில்லை.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர்
தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக