வியாழன், 16 பிப்ரவரி, 2012

Parents- Please listen! பெற்றோர்களே கவனியுங்கள்!'

சொல்கிறார்கள்


மன நல மருத்துவர் திருநாவுக்கரசு: தற் போது இளம் குற்றவாளிகள் அதிகரித்து வருகின்றனர். 13 வயது முதல், 20 வயதிற்குட்பட்டவர்கள் தான் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம், நம் வளர்ப்பு முறையும், வாழ்க்கைச் சூழலும் தாறுமாறாக மாறிப் போய் கிடப்பதும் தான். இன்றைய படிப்பு, அறிவை வளர்ப்பதற்கு பதில், பொருளாதார ஆதாயத்தை நோக்கியதாகவே உள்ளது. தாய்மொழிப் பாடங்கள் வழியே மாணவர்களுக்கு புகுத்தப்படும் நன்னெறிகள், நீதிபோதனைகள் அனைத்தும் குறைந்து விட்டன. நற்குணங்களை வளர்த்தெடுக்கும் அம்சங்கள், மொழி இலக்கியங்களில் தான் அதிகம் விரவிக் கிடக்கின்றன. விரல் விட்டு எண்ணும் அளவிலான மாணவர்கள் கூட, இவற்றையெல்லாம் இன்று படிப்பதில்லை. அறிவியல், கணக்கு என்று இயந்திரத் தனமான பாடங்களையே தான் குழந்தையிலிருந்தே கற்றுக் கொள்கின்றனர். காரணம், நம் வற்புறுத்தல் தான். மீடியாக்களில், அதீதமாகக் காட்டப்படும் வன்முறைக் காட்சிகள், குடும்பத்தில் பெற்றோரிடம் நடக்கும் தொடர் மோதல்கள், இன்னபிற அம்சங்கள் அனைத்தும் சேர்ந்து, சிறு வயதிலேயே பெரும் குற்றங்களைச் செய்யும் அளவிற்கு மனதைத் தூண்டுகின்றன. உளவியல் ரீதியாக இதை அணுகும்போது, தொடர்ந்து ஒரே விஷயத்தை எடுத்துக் கொண்டு கொடுக்கப்படும் டார்ச்சர், இயல்பாகவே மனபாதிப்பை உண்டாக்கும். இதை மன நோய் என்று சொல்ல முடியாது; மன பாதிப்பு என்று சொல்லலாம். வழக்கமான செயல்பாடுகளிலிருந்து, ஒருவர் மாறுபாடு தெரிந்தாலே, அதைச் சரியாக கண்டுபிடித்து முறையான கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். மனநோய் என்பது 40, 50 வயதிற்கு மேல் தான் வரும் என்று இப்போது பலரும் நினைக்கின்றனர். ஆனால், இன்று 13 -17 வயதுள்ளவர்கள் அதிகமாக மனநோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இதை அனைத்துப் பெற்றோரும் உணர்ந்து, குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக