ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

70 year young fearless fisher boatman: பார்வை இல்லை; கடலில் பயம் இல்லை: படகு ஓட்டிப்பிழைக்கும் 70 அகவை "இளைஞர்'




கீழக்கரை:"பார்வை இழந்தும், உடலில் வலிமை உள்ளவரை உழைப்பேன்' என்ற உறுதியுடன் ஏர்வாடியின் 70 வயது "இளைஞர்' நாகசாமி, கடலில் படகு ஓட்டி பிழைத்து வருகிறார்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே சடைமுனியன் வலசையை சேர்ந்தவர் நாகசாமி, 70. மனைவி சமந்தரம். இரு பெண்கள் உட்பட ஏழு பிள்ளைகள். இவர்களது பிரதான தொழில் மீன்பிடித்தல்.பல ஆண்டுகளுக்கு முன் கடலுக்கு சென்று திரும்பினார். வழக்கம் போல் வலையை உதறினார். அதிலிருந்த இருந்த விஷத்தன்மை கொண்ட "சொறி' என்ற "ஜெல்லி' உடைந்து கண்ணில் பாய்ந்தது. பார்வை பறிபோனது.பல மருத்துவமனைகளின் படி ஏறினார். பலன் பூஜ்யம். ஆனாலும் இவரது உலகம் இருள் சூழவில்லை. "கரை மேல் பிறக்க வைத்து கண்ணீரில் மிதக்க விட கண்ணும் இல்லை என நோகவில்லை. நாட்களையும் வீணடிக்கவில்லை. "போனது பார்வை தானே... தனக்கு இருக்கு தன்னம்பிக்கை' என்ற தைரியம் இவரை கட்டுமரமேறி கடலுக்கு இழுத்து சென்றது.
இந்த பயணம் இப்போதும் தொடர்கிறது. மீன்கள் அதிகமாக வசிக்குமிடம் இவருக்கு அத்துப்படி. கச்சிதமாக இவரது கை அசையும். படகு அங்கு நிற்கும். மீன்பாடு படகை நிரப்பும். கரை திரும்பியதும் சகாக்களுடன் கடலில் கிடக்கும் வலையை இழுப்பது கண் கொள்ளாக் காட்சி. கடலுக்கு செல்லாத நேரம்... கிழிந்த வலைகளை சரிபடுத்துவதே. எங்கும் தனித்து தான் செல்கிறார். பார்வையற்றோருக்கான அரசின் சலுகைகள் வழங்கப்படவில்லை என்பது வெந்த புண்ணில் "வேல்' பாய்ச்சுவது போல் உள்ளது.

இவர் கூறியதாவது: இந்த தொழிலை தவிர எந்த வேலையும் தெரியாது. கடலில் கிடந்த கொடிய ஜல்லியால் கண்ணை இழந்தேன். கடந்த 48 ஆண்டுகளாக வாழ வைப்பது கடல் அன்னை தான். என்னால் சும்மாவே இருக்க முடியாது. எந்த வேலையாவது செய்து கொண்டிருக்க வேண்டும். பார்வை இழந்தும் எந்த பாதிப்பும் தெரியவில்லை. உடலில் வலிமை உள்ளவரை உழைப்பேன், என்றார்."உழைப்பு சோறு போடும்; சத்தியமே ஜெயதே!' என்பதே இவரது இரண்டு கண்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக