சனி, 18 பிப்ரவரி, 2012

சொல்கிறார்கள்                                                                                                                                  



மாடித் தோட்டம் அமைப்பது பற்றி கூறும் சீனிவாசன்: பணி ஓய்வு பெற்ற பின், வீட்டு மாடியில் உள்ள சிறிய இடத்தைக் கொண்டு, அடுக்கு தோட்டம் போட்டேன். இதில் 40 வகை செடி, கொடிகள் வளர்க்க முடியும். புத்தகங்கள் வைக்கும் செல்ப் போன்று மாடியின் மூன்று பக்கமும், ரேக் அமைத்தேன். அதில் டப்பாக்களில் மண் நிரப்பி, நானே தயாரிக்கும் இயற்கை உரம் கலந்து செடி வைத்திருக்கிறேன். நான் அமைத்துள்ள இந்த தோட்டத்திற்கு, எந்த செடிக்கும் சிறப்பு மண் தேடவில்லை. புல் வளர்ந்துள்ள இடத்தில் இருக்கும் மண்ணை எடுத்து வந்துதான் செடி, கொடி வைத்திருக்கிறேன். செடி வைக்க மண் தொட்டி, பிளாஸ்டிக் தொட்டியெல்லாம் வாங்கணும்னா நிறைய காசும், அதோடு நிறைய இடமும் வேணும். நம் வீட்டில் உள்ள டப்பாக்கள், பாட்டில்களில் கூட சிறிய துளையிட்டு செடி வைத்து விடுவேன். இந்த செடிகளுக்காக இயற்கை உரம் தயாரிப்பதும், மிகவும் சுலபம். நம் வீட்டில் சேரும் காய்கறிக் கழிவுகள், வாடிய பூ, பயன்படுத்த முடியாத கோரைப் பாய் இப்படி அனைத்தையும் சேகரிக்க வேண்டும். இதில் பிளாஸ்டிக் கவர்களை மட்டும் தவிர்த்துவிட்டு, ஒரு பக்கெட்டில், சிறிய துளைகள் இட்டு, இவற்றை நிரப்பி ஒரு ஓரமாக வைக்க வேண்டும். மூன்று மாதம் கழித்துப் பார்த்தால், தார் நிறத்திற்கு கறுத்துப் போய் உதிரும் விதமாக, இயற்கை உரம் தயாராக இருக்கும். இதுபோன்ற உரம் தயாரித்து, மண்ணுடன் கலந்து, அதில் செடி வைத்தால், செடிகள் செழிப்பாக வளரும். இது தவிர, தேங்காய் நார், மணல் கலந்து வைத்து அது மக்கிப் போன பின் கிடைக்கும் உரத்தையும் பயன்படுத்தலாம். பூச்சிக்கடியால் செடிகளுக்குப் பாதிப்பு வருவதைத் தவிர்க்க, பூச்சி மருந்து அடிக்காமல், கோமியமும், சாணக் கரைசலும் சேர்த்து, கூடுதல் நீர் சேர்த்து வடிகட்டி அதை ஸ்பிரே செய்கிறேன். கொஞ்சம் பெரிய டப்பாக்களில் செடி வைத்தால், அதில் ஊடு பயிராக கீரையும் வளர்க்கலாம். நான் வைத்துள்ள இந்த சின்ன தோட்டத்திலிருந்தே, எங்கள் வீட்டிற்குத் தேவையான காய்கறி கீரையெல்லாம் கிடைத்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக