First Published : 18 Feb 2012 12:28:44 AM IST
சென்னை, பிப். 17: திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை சனிக்கிழமை (பிப்ரவரி 18) முதல் ஆண்டு முழுவதும் திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை நகரில் பணியாற்றிய பிராமணர் அல்லாத சிலர் தாங்கள் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்து ஒன்றுபட்டு செயல்படுவதற்காக 1912-ம் ஆண்டு மெட்ராஸ் யுனைட்டெட் லீக் என்ற அமைப்பினை உருவாக்கினர். இந்த அமைப்புக்கு வழிகாட்டியாக இருந்த டாக்டர் நடேசனார் தான் திராவிட இயக்கத்தின் நிறுவனர். அரசு பதவிகளில் இருந்த சரவணப் பிள்ளை, ஜி. வீராசாமி நாயுடு, துரைசாமி முதலியார், எஸ். நாராயணசாமி ஆகியோர் "மெட்ராஸ் யுனைட்டெட் லீக்' உருவாகப் பாடுபட்டனர். முதல் முதலில் அவர்கள் மேற்கொண்ட சமுதாயப் பணி கல்வியாகும். மாலையில் ஓய்வு நேரத்தை இதற்காக செலவிட்டனர். பல்கலைக்கழகப் பட்டம் பெறும் பிராமணர் அல்லாத இளம் பட்டதாரிகளுக்கு வரவேற்பு விழாக்களை நடத்தினர்.1913-ம் ஆண்டு இந்த அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழா டாக்டர் நடேசனார் மருத்துவமனையில் உள்ள தோட்டத்தில் நடைபெற்றது. அந்த விóழாவில்தான் அமைப்பின் பெயர் "திராவிடர் சங்கம்' என மாற்றப்பட்டது.1914-ம் ஆண்டு திருவல்லிக்கேணி உயர்நிலைப் பள்ளி ஒன்றில் திராவிடர் சங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவும், பிராமணர் அல்லாத பட்டதாரிகளுக்கு வரவேற்பு விழாவும் நடைபெற்றது. நீதிபதி கிருஷ்ணன், டி.எம். நாயர் ஆகியோர் உரையாற்றினர். இதுபோன்ற திராவிடர் இயக்கத்தின் வரலாற்றை திராவிட இயக்க வரலாறு என்ற நூலில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் எழுதியுள்ளார். இதிலிருந்து டாக்டர் நடேசனார் தொடங்கிய திராவிடர் சங்கம்தான் இன்று வளர்ந்துள்ள மொழி உணர்வு, பகுத்தறிவு உணர்வு, சமூக நீதி ஆகியவற்றுக்கு அடித்தளம் என்பதை அறிந்து கொள்ளலாம். எனவே திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை திமுக சார்பில் சனிக்கிழமை (பிப்ரவ்ரி 18) முதல் ஆண்டு முழுவதும் திராவிடர்களாகிய நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்.திராவிட இயக்கத்தை வளர்த்த பெரியவர்களின் பெருமைகளை நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் நாம் பேச வேண்டும். திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா தமிழன் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்க்கும் விழா, தன்மான உரிமைத் திருவிழா என்பதை மனதில் கொள்ள வேண்டும் என்று கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக