புதன், 7 செப்டம்பர், 2011

Perukanviko in World Poets Conference: அமெரிக்காவில் 31ஆம் உலகக்கவிஞர்கள் மாநாடு பெருங்கவிக்கோ பங்கேற்றார்

அமெரிக்காவில் 31ம் உலகக்கவிஞர்கள் மாநாடு

பதிவு செய்த நாள் : September 7, 2011
கருத்துகள் (0) 5 views
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)


அமெரிக்காவில் 31ம் உலகக்கவிஞர்கள் மாநாடு
பெருங்கவிக்கோ பங்கேற்றார்
உலகளாவிய பன்மொழிக் கவிஞர்களின் 31ம் மாநாடு அமெரிக்காவின் விசுகான்சின் மாகாணத்தின் மிச்சிகன் ஏரிக்கரையில் உள்ள நகரமான கெனொசாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  இம்மாநாட்டின் வரவேற்புக் குழுத்தலைவராக மேரி அன் என்ற அமெரிக்கப் பெண்கவிஞர் இருந்து தம் குழுவினருடன் சிறப்பாகக் கவிஞர் மாநாட்டை நடத்தினார்.

31 – ஆம் உலகக்கவிஞரகள் மாநாடு கெனொசாவில் 28-8-2011 முதல் 3-9-2011 வரை நடைபெற்றது. 27ம் நாள் வந்திருந்த உலகக்கவிஞர்கள் தங்கள் தங்கள் பெயர்களை உரியகட்டணத்தைச் செலுத்திப் பேராளர்களாகப் பதிவு செய்துகொண்டனர். அன்றுமாலை கெனொசா உணவகத்தில் அமெரிக்க அவாய்த்தீவின் பாராம்பரிய நடனமான ஊலா நடனத் துடன் ஒரு அறிமுக விருந்தும் – பன்னாட்டுக் கவிஞர்கள் சந்திப்பும் சிறப்பாக நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது உலக நாட்டுக்கவிஞர்களும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவித் தங்கள் சகோதரபாசத்தைப் புதுப்பித்துக் கொண்டனர்.
இந்த உலகக்கவிஞர் மாநாட்டின் கருப்பொருள் “உலக அமைதி- மனிதநேயம் உலகமக்கள் ஒருமைப்பாடு”  என்ற பொருள் பற்றியதாகும். இக்கருத்துக்கள் பற்றிய இசைப்பாடல்கள் இசைக்கப்பட்டன,

29-8-2011 ஆம்நாள் கெனொசாவின் கார்ட்கெச் கல்லூரியில் தொடக்கவிழா நடைபெற்றது. இந்தமாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, சீனா, ஜப்பான், ஆஸ்திரியா போன்ற 21 நாடுகளிலிருந்து நூற்றுகும் மேற்பட்ட பன்மொழிக் கவிஞர்கள் பங்கேற்றனர். இந்த விழாத் தொடக்கத்தில் அனைத்துநாட்டுக் கொடிகளையும் அந்தந்த நாட்டுக்கவிஞர்கள் முன்நின்று அவர்நாட்டுக் கொடிக்கும்,  அனைத்து மக்களுக்கும் மரியாதை செய்தது பிரமிப்பை ஏற்படுத்தியது.
இந்திய தேசக்கொடியை நம் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் தமிழருக்கான பாரம்பரியப்பண்பாட்டு உடைஅணிந்து இந்தியக் கொடியைக் கம்பீரமாகப் பிடித்து பன்னாட்டுக் கொடி அணிவகுப்பில் கலந்துகொண்டது மாநாட்டின் கண்கவர் அம்சமாகவும் கண்கொள்ளாக் காட்சியாகவும் அமைந்தது.
இந்தத் தொடக்க விழாவிற்கு கெனொசா மேயர் கீத்போமேன் மேடையில் அமர்ந்து சுருக்கமாக உரையாற்றினார்.

இந்த மாநாட்டிற்குத் தமிழ்நாட்டிலிருந்து,  பெருங்கவிக்கோ முனைவர் வா.மு.சேதுராமன்,  சகடா அறிவியல் கல்லூரித் தலைவர் முனைவர் சேதுகுமணன், சென்னை வழக்கறிஞர் முனைவர் சந்திரசேகர்,  அமெரிக்க டென்னிசி மாநிலத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் வா.மு.சே. கவிஅரசன் ஆகியோர் வருகை தந்திருந்தனர். திருமிகு சேதுகுமணன் தமிழகத்திலிருந்து கொண்டு வந்த பொன்னாடைகள், பரிசுப் பொருள்களை பெருங்கவிக்கோ மேடையில் அமர்ந்திருந்த அனைவருக்கும் அணிவித்து வழங்கியது இந்திய, தமிழ்நாட்டின் பெருமையை உணர்த்துவதாக இருந்தது.
பின்பு அனைத்துநாட்டு மொழிக்கவிஞர்களும் தங்கள் தங்கள் நாட்டுமொழிக் கவிதைகளை வழங்கினர். இசுபாசினியல் மொழியும் சீனமொழியும் பேசும் அனைத்து நாட்டுக் கவிஞர்கள் பலர் வந்திருந்தனர். பெருங்கவிக்கோவின் “உலகம் ஒரு பூந்தோட்டம்”  என்ற கவிதை ஓசை நயத்துடன் படித்தார். தமிழ் மணிகண்டன்,  முனைவர் மகாலட்சுமியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பெருங்கவிக்கோவின் கவிதையை கவிஅரசன் ஆங்கிலத்தில் படித்து உலகக் கவிஞர்களுக்கு கவிதையின் சாரத்தையும் அளித்தார். மொழியாக்கத்தைவிட , பெருங்கவிக்கோ சந்தத்துடன் பாடிய கவிதையை நயத்துடன் உலகக் கவிஞர்கள் இரசித்தனர்.  ஆசுதிரிய நாட்டுக் கவிஞர்  பெருங்கவிக்கோ தமிழில் ஓசைநயத்துடன் பாடியவாறு ஏன் மொழியாக்கக் கவிதை ஓசை நயத்துடன் பாட இயலவில்லை என்பது குறித்துக் கேள்வி எழுப்பினார். கவிஅரசன் உலகக் கவிஞர்களுக்கு சந்தம்-சிந்துவுடன் ஒவ்வொரு சீரும் தேமா-புளிமா, கருவிளம், கூவிளம் எனற அளவு சிதையாமல் கவிதை எழுதும்போது இந்த ஓசை நயங்கள் இயற்கையாகவே கவிதையுடன் இணையும் பாங்கை விளக்கினார். மூத்த தமிழின் இலக்கணத்தையும் அந்த அளவு முறைகளையும் பாங்குடன் உலகக்கவிஞர்கள் கேட்டறிந்து கொண்டனர். இந்தக் கவிதையின் மையக்கருத்தாக எல்லைக்கோடில்லா உலகம் உருவாக வேண்டும் என்பதே. தமிழ்ச்சந்த இனிமையையும், கவிதைப் பொருளையும் உலகக் கவிஞர் சுவைத்தனர். இதுநடக்குமா? எல்லைக் கோடில்லாத உலகம் உருவாகுமா என்று கேட்டார். “இது கவிஞர் கனவு” என்றார் வா.மு.சே. மாலை நிகழ்வுகளும் சிறப்பாக அமைந்தது. சேதுகுமணன் அவர்கள் சிறப்பாக இந்தக் கவிதை நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

மறுநாள் 30-8-2011 அன்று கெனொசா அமெரிக்கசிவில் போர் அருங்காட்சியக வெளிஅரங்கில் அமெரிக்கக் கவிஞர் வில்லியம்மார் தலைமையில் நடைபெற்ற ஆங்கிலக் கவிதை நிகழ்வில் கவிஅரசன் ஈழ இறுதிப்போரின் அவலங்கள் குறித்து எழுதிய கவிதையைப்படித்து அனைத்துலகக் கவிஞர்களின் கவனத்தை ஈழத்தின்பால் ஈர்த்தார். ஈழத்தமிழர் இன்னல் பற்றிய இந்த ஆங்கிலக் கவிதை மிகவும் அழுத்தமாகவும், உறுதியாகவும் அமைந்ததை பலகவிஞர்கள் பாராட்டினர். வருத்தத்துடன் ஈழவிடுதலைக்கும் மறுவாழ்விற்கும் தங்களால் ஆன விழிப்புணர்வுப் பணிகளை தங்கள் நாடுகளில் செய்வோம் என்றும் உறுதியளித்தனர். பெருங்கவிக்கோவின் பேரன் கவின்சாதுகுரு கவிஅரசன் எழுதிய “எங்கிருந்து நான்”  என்ற ஆங்கிலக் கவிதையை உலகக் கவிஞர்களுக்கு வாசித்தார். பெருங்கவிக்கோவின் கவிதைப் பரம்பரையின் வெளியீடாகவும் அமைந்தது இந்நிகழ்வு.
முனைவர் சேதுகுமணன், முனைவர் சந்திரசேகருடன் பன்னாட்டுக் கவிஞர்கள் பலரும் தங்கள் கவிதையைப் பகிர்ந்து கொண்டனர். சந்திரசேகரின் கருத்து வளத்தையும், சேதுகுமணினின் கவிதை வளத்தையும் பன்னாட்டுக் கவிஞர்கள் இரசித்தனர்.
மாலையில் மிச்சிகன் ஏரிக்கரையில் மேடை போட்டு கவிஅரங்கம் நடந்தது. பலநாட்டுக் கவிஞர்கள் பாடினர். அந்தமேடை அருகில் பிரான்சுப் பெண்கவிஞர் மேரியா இராபர்ட் மனிதநேயத்தை வற்புறுத்தி பலரும் வியக்கும் வண்ணம் நாட்டியம் ஆடிச் சிறப்பித்தார்.


31-8-2011 ஆம்நாள் பன்னாட்டுக் கவிஞர்கள் மிச்சிகன் ஏரிக்கரையில் கூடினர். அமெரிக்கக் கவிஞர்கள் இந்நிகழ்வு அமைந்தது. அப்போது கவிஅரசன், சேதுகுமணன், சந்திரசேகர் ஆகியோரோடு பெருங்கவிக்கோ அமர்ந்திருந்த போது ஒரு அமெரிக்கர் ஓடோடி வந்து பெருங்கவிக்கோ கையைப் பற்றிக்கொண்டு வணக்கம், வாருங்கள் நன்றாயிருக்கிறீர்களா என்றார். அவர்பெயர் இராபர்ட். எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடினார். நான் தமிழ்நாட்டில் ஊட்டியில் பணி ஆற்றினேன். தமிழ் நன்றாகத் தெரியும். இன்று கெனொசா நியூசு  செய்தித்தாளில் உங்களைப் பற்றிய செய்திகண்டு தங்களைச் சந்திக்க வந்தேன் என்றார்.

உடனே கவிஅரசன் கெனொசா நியூசு செய்தித்தாளை வாங்கிப்படித்தார். அதில்மிகச் சிறப்பாக பெருங்கவிக்கோ முனைவர் வா.மு.சேதுராமன் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு மற்ற கவிஞர்களோடும், மேயர், தலைவர் உள்ளிட்ட பலரோடு படம் வெளிவந்திருந்தது, இந்தியாவிற்குப் பெருமை அளிப்பதாக அமைந்தது.
கொலம்பசு அமெரிக்கா வரும்போது பயன்படுத்திய 15ம் நூற்றாண்டுக் கப்பல்களைப் போன்றே வடிவமைக்கப்பட்ட கொலம்பசுக் கப்பலைக் கவிஞர்கள்கண்டு வியந்தனர்.
உலகக் கவிஞர்கள் மத்தியில் இந்திய நாட்டுக்கும், தமிழுக்கும் மிகப்பெரும் சிறப்பைத் தமிழ்க்கவிஞர்கள் உண்டாக்கினர். இந்த உலகக்கவிஞர்கள் சங்கத்தை (W.C.P.) முதன் முதலில் உருவாக்கியவர்களுள் முக்கியமானவர் ஒருதமிழர். அவர்தான் கவிஞானி. கிருட்ணாசீனிவாசு. இவர்சாதி, மதம்,  நாடு, மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு தன்னோடு நான்கு நாட்டுப் பெருங்கவிஞர்களை இணைத்துக் கொண்டு இந்த உலகக்கவிஞர் சங்கத்தை உருவாக்கினார். ஒரு தமிழ்க் கவிஞரை உலகக் கவிஞர்களுக்கு அறிமுகம் செய்வேன் எனச் சபதம்பூண்டு அமெரிக்க சான்பிரான்சிசுகோவில் நடந்த 5ஆம் உலகக் கவிஞர் மாநாட்டிற்கு அழைத்துச் சென்றார் . பின்னர் உரோசிமேரி வில்கின்சன் என்ற அமெரிக்கப் பெண்கவிஞர் பலமாநாடுகளைச் சிறப்பாக நடத்தினார். இப்போது 31ம் மாநாடு கெனொசாவில் நடந்துள்ளது.
பெருங்கவிக்கோ 5ஆம் உலகக்கவிஞர்கள் மாநாட்டிலிருந்து எகிப்து, துருக்கி, உரோமேனியா, இத்தாலி. பிரான்சு, செக்கோசிலோவோகியா, சீனா, மங்கோலியா, மெக்சிகோ போன்ற பல நாடுகளில் நடந்த இருபது உலகக்கவிஞர் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழ், தமிழர் இந்திய நாட்டின் பெருமையை பதிவு செய்திருக்கிறார்.
இந்த 31ம் உலகக் கவிஞர்மாநாடு மெச்சிக்கன் ஏரிக்கரையில் நடந்தபோது இந்தியாவின் பெருங்கவிக்கோ முனைவர் வா.மு.சேதுராமன் வந்த கலந்துசிறப்பித்துள்ளார் என்ற செய்தியைப் பதிப்பித்து சிறப்பித்தது. அந்தச் செய்தியை கண்டு மகிழ்ந்த கெனொசா வாழ் தமிழ் அறிந்த அமெரிக்கர் ஆர்வத்துடன், பெருமையுடன் தமிழ் ஆர்வத்தை வெளிப்படுத்தியது உலகக்கவிஞர்களை வியக்க வைத்தது. இந்தியாவிற்குப் பெருமை சேர்வதாக அமைந்தது. மாநாட்டுத் தலைவர் மேரிஆன் இதைக்குறிப்பிட்டு பெருங்கவிக்கோவைப் பெருமைப்படுத்தினார். பெருங்கவிக்கோ எழுந்து நின்று வணங்கி அனைவர் பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டார்.

1-9-2011 முதல் 4-9-2011 வரை சுற்றுலாவிற்குப் பலகவிஞர்கள் சென்றனர். இந்தச் சுற்றுலா மின்னிசோட்டா,  மினியா போலிசில் முடிவடைந்த பின் உலகக் கவிஞர் தங்கள் தாய்நாடு திரும்புகின்றனர். ஈழத்தமிழர் இன்னல் தீர்க்கவேண்டிப் பாரதப் பிரதமரைச் சந்தித்து பட்டினிப் போராட்டம் நடத்தியபின் இம்மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றார்.
மொத்தத்தில் இம்மாநாடு வா.மு.சே. தொடர்ந்து செல்லும் கவிதைப் பயணத்தில் எல்லைக்கோடு காணும் நல்ல பயணமாக அமைந்தது.

1 கருத்து:

  1. பெருங்கவிக்கோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

    www.eraeravi.com
    www.kavimalar.com
    www.eraeravi.wordpress.com
    www.eraeravi.blogspot.com
    http://eluthu.com/user/index.php?user=eraeravi

    இறந்த பின்னும்
    இயற்கையை ரசிக்க

    கண் தானம் செய்வோம் !!!!!

    பதிலளிநீக்கு