செவ்வாய், 6 செப்டம்பர், 2011

வேல்முருகனுக்குக் "கை கொடுக்கும் கை'




மதுரை:பிஞ்சு கைகளை ஊன்றி, தவழ்ந்து, நடை பழகும் அனுபவம் வேல்முருகனுக்கு கிடைக்கவில்லை. பிறக்கும்போதே பிஞ்சு விரல்களை பறிகொடுத்துவிட்டு, தன்னம்பிக்"கை'யுடன் பிறந்த இந்த 30 வயது பிரம்மச்சாரி, வீட்டில் முடங்கி கிடக்கவில்லை. ஊனம் என்று தன்னை கேலி செய்ய காரணமாக இருந்த கைகளை கொண்டே இன்று எழுதி வருவாய் ஈட்டுகிறார்.

மதுரை தேனூர் அருகே தச்சம்பத்தைச் சேர்ந்த இவர், 9ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கைகளை நம்பி உழைக்க தயாராக இருந்த இவருக்கு, அதுவே இடையூறாக குறுக்கிட்டது. யாரும் இவரது கைகளை நம்பி வேலை தர தயாராக இல்லை.வயிற்றுப் பசியை போக்க வருமானம் வேண்டுமே? அதுக்காக வேல்முருகன் பிச்சை எடுக்கவில்லை. எது தனக்கு வேலை தர இடையூறாக இருந்ததோ, அந்த கைகளை கொண்டே உழைக்க முடிவு செய்தார். விரல்கள் இல்லாத இரு கைகளை இணைத்து எழுதி பழகினார்.

இன்று... மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இவர் "கை'ப்படாத மனுக்கள் இல்லை. பத்து ரூபாய் பெற்று கோரிக்கை மனு எழுதி கொடுத்து நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.

அவர் கூறுகையில், ""நானும் பலரிடம் வேலை கேட்டுவிட்டேன். எனது குறையை காரணமாக வைத்து யாரும் தரவில்லை. அதுக்காக வீட்டில் முடங்கி கிடக்கவும் எனக்கு மனமில்லை. அதனால் எழுதி வருவாய் ஈட்டுகிறேன். யாராவது, "கிளார்க்' வேலை கொடுத்தால் நல்லா இருக்கும். அதுவரை இந்த "எழுத்து' தொழில்தான் எனது வாழ்க்கை,'' என்றார்.

தன்னம்பிக்கையுடன் உழைக்க காத்திருக்கும் இவருக்கு, வேலை கொடுக்க விரும்பினால், 83443 48135ல் தொடர்பு கொள்ளலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக