வியாழன், 8 செப்டம்பர், 2011

எங்களிடம் காசுமில்லை; நெஞ்சில் மாசுமில்லை:வைகோ



தூத்துக்குடி:""உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டியிடும். எங்களிடம் காசுமில்லை; நெஞ்சில் மாசுமில்லை,'' என, அக்கட்சி பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள பனைக்குளத்தில், கட்சி நிர்வாகி இல்ல திறப்பு விழாவில் கலந்து கொண்ட வைகோ கூறியதாவது: நெல்லையில் ம.தி.மு.க., சார்பில், அண்ணாதுரையின் 103வது பிறந்த நாள் விழா மாநாடு, செப்.,15ம் தேதி நடக்கிறது. இதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக, பார்லியில் முதல் குரல்கொடுத்தது நான் தான்.உலகில் ஜப்பான், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அணு உலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பொதுமக்கள், மீனவர்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ம.தி.மு.க., ஆதரவு தெரிவிக்கிறது. இந்த அணுமின் நிலையத்தில் சிறு அளவு ஆபத்து ஏற்பட்டாலும், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டியிடும். எங்களிடம் காசுமில்லை; நெஞ்சில் மாசுமில்லை. எனவே, உள்ளாட்சியில் ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை தர, எங்கள் கட்சியினரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் போட்டி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. டில்லி ஐகோர்ட் வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு பலர் பலியாகியுள்ள சம்பவம் கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமென்பதே, எங்களது கட்சியின் நிலைப்பாடு.இவ்வாறு வைகோ கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக