கட் டுரைத் தலைப்பு, மொழி இலக்கண அறிஞர்கள் விவாதிக்க வேண்டிய தலைப்புப்போல இருக்கிறதல்லவா? "நாட்டுப்புறம்' என்னும் சொல்லில் உள்ள வல்லின றகரம் சரியா? இடையின ரகரம்போட்டு "நாட்டுப்புரம்' என்று எழுதலாமா? சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் வெளியிடப்பட்டுள்ள ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல்தான் இவ்வாறு விவாதிக்க வைத்துள்ளது. இதுமட்டுமன்றி, பாட அமைப்புகளும் போக்கும் கல்வியாளர்களைக் கிள்ளிவிடுகின்றன. நாட்டின் எதிர்காலத் தலைமுறை தவற்றைச் சரியெனப் புரிந்துகொள்ளக் கூடாதே என்ற அச்சத்தையும் இப்பாடநூல் உண்டாக்கியுள்ளது. சமச்சீர்கல்வி பாடத்திட்டத்தின்கீழ், ஒன்று முதல் பத்து வகுப்புகளுக்கான வரைவுப் பாடத்திட்டம் கடந்த ஆண்டின் இறுதியில் இணையதளத்தில் வெளியிடப்பட்டபோது, அதில் காணப்பட்ட குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. அவற்றுள் ஒரு சில கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் இப்போது ஆறாம் வகுப்பு, முதல் வகுப்புகளுக்குரிய பாடநூல்கள் வெளியாகியுள்ளன. அவற்றுள் தமிழ் தவிர, ஏனைய பாடநூல்கள் கருத்துப் பாடங்களாதலால் அவற்றின் உள்ளடக்கப் பகுதிகள் சில இடங்களில் கூடுதலாகவும் குறைவாகவும் உள்ளன. ஆனால் மொழிப் பாடத்தைப் பொறுத்தவரை, ஆறாம் வகுப்புத் தமிழ், மலிவு விலையில் கூறுகட்டி விற்கப்படும் வாழைப்பழம்போல மிகவும் நைந்த நிலையில் உள்ளது. சமச்சீர் கல்வி என்பதற்கு, வேறுவேறு வகைகளாக இருந்த பாடத் திட்டங்களை ஒன்றாக்கி, பொதுவாக அமைக்கப்பட்டது என்பதுதான் பொருள். ஆனால், ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட பாலபாடம் போலுள்ளது. ஐந்தாம் வகுப்புவரை தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் தந்த தமிழ்ப் பாடநூல்களைக் கற்றவர்களுக்காக எழுதப்படும் பாடநூல் என்பதை மனதில்கொண்டு எழுதப்பட்ட நூலாக இது தெரியவில்லை. இதற்கு முன்பிருந்த தமிழ்ப் பாடநூல்களை யாரும் சுமையென்றோ கடினமென்றோ கூறவில்லை. அப்படியிருக்க முந்தைய கலைத்திட்டம், பாடத்திட்டம் போன்றவற்றைச் சிறிதும் கவனத்தில் கொள்ளாது, ஆளுக்கொரு பாடத்தைத் தயாரித்து, கூட்டாஞ்சோறு ஆக்கியதுபோல ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளடக்கப் பகுதிகளும் அவற்றை விளக்கியுள்ள முறையும் இரண்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கேற்ற வகையில் உள்ளது. மொழிப்பாட நூல்கள் தொன்மையைப் போற்றி, புதுமையைப் பேணி, மாணவர்களை ஆர்வத்துடன் சிந்திக்கத் தூண்டுவதாக அமைய வேண்டும். படிக்கவும் எழுதவும் போதிய பயிற்சி தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மொழிச் சுவையூட்டும் பலவகைக் கூறுபாடுகளை விட்டுவிட்டு, கூறியது கூறல், ஒருபடைச் சார்பு, பொருளற்ற கட்டுமானம் ஆகியவற்றைப் பாடநூலில் பயன்படுத்துவது கற்பித்தலை வீணாக்கி, கற்றலை வெற்றிடமாக்கிவிடும். இதைத்தான் ஆறாம் வகுப்புப் பாடநூல் சரியாகச் செய்துள்ளது. ஆறாம் வகுப்புத் தமிழ்ப்பாடநூல் இயல் 3-இல், உரைநடைப்பகுதியிலும் தொடர்ந்து சில இடங்களிலும் "நாட்டுப்புரம்' என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது "நாட்டுப்புறம்' எனும் வழக்கத்தில் உள்ள சொல்லுக்கு மாற்றாகக் கொடுக்கப்பட்டுள்ளது. வல்லின றகரம் பெற்றுள்ள "நாட்டுப்புறம்' எனும் சொல்லாக்கம் பிழையானது என்றும், இடையின ரகரம் பயின்ற "நாட்டுப்புரம்' என்பதே சரியானது என்றும் பாடநூல் குழுவினர் எப்படி முடிவு செய்தார்கள் என்று தெரியவில்லை. தமிழகப் பல்கலைக்கழகங்கள் நாட்டுப்புற இயல் எனும் சொல்லையே பயன்படுத்துகின்றன. அப்பெயரில் தனித்துறைகளும் இயங்கி வருகின்றன. மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புற இயல் துறைத் தலைவர் முத்தையா, நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் ஆ. சிவசுப்பிரமணியன் போன்றோர் நாட்டுப்புற இயல் எனும் சொல் அமைப்பில் தவறேதும் இல்லை என்பதை உறுதி செய்கிறார்கள். வல்லினம் அமைந்த சொல்லே சரியானது என்கின்றனர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அருங்கலைச் சொல் அகர முதலி, வின்சுலோவின் தமிழ் - ஆங்கில அகராதி ஆகியவற்றிலும் நாட்டுப்புற இயல் என்ற சொல்லே இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டரசு வெளியிட்டுள்ள, கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க மையப் பொருண்மைத் தலைப்புகளின் வரிசையில் நாட்டுப்புறவியல் எனும் சொல்லே இடம்பெற்றுள்ளது. சொற்பயன்பாடு இவ்வாறிருக்க, பாடநூலில் "நாட்டுப்புரம்' என்னும் சொல்லைத் தந்தவர்கள், நூலில் அடிக்குறிப்பாக அதற்குரிய விளக்கத்தை ஓரிரு சொற்றொடர்களில் தந்திருக்கலாம். அதையும் செய்யாமல் "நாட்டுப்புறம்' என்னும் சொல்லைப் புறந்தள்ளியதை எவ்வகையில் ஒத்துக்கொள்வது? அத்துடன் பாடநூல் தயாரிப்பு அவசரக்கோலத்தில் அள்ளித்தெளித்தது போலத் தோன்றுகிறது. நூலில் இடம்பெற்றுள்ள எழுத்துப்பிழைகளும் இலக்கணப் பிழைகளும் இதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. எட்டு அலகுகளைக் கொண்ட பாடநூலில் மூன்று அலகுகளில் (அலகு - 1, 5, 6) வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள் பாடங்களாகத் தரப்பட்டுள்ளன. இது அளவில் அதிகமே. தமிழ்ப் பாடநூலில் நாட்டுக்கு உழைத்த தலைவர்களின் வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்படுவதுண்டு. ஒவ்வொரு முறையும் பாடத்திட்டம் மாற்றப்படும்போது, காந்தியடிகள், காமராஜ், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றோருள் ஒருவரது வாழ்க்கை வரலாற்றுச் செய்தி இப்பகுதியில் இடம்பெற்றிருக்கும். ஒருவரைப் பற்றிய பாடமே தொடர்ந்து பாடநூலில் இடம்பெறுவதில்லை. ஆனால், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வரலாறு, ஆறாம் வகுப்பில் மட்டுமே தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. 1995, 2003-ம் ஆண்டு பாடநூல்களைத் தொடர்ந்து இப்போதும் (2010) இவரைப் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. இப்போது வெளிவந்துள்ள பாடநூல் ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருப்பது உறுதி. அவ்வாறாயின் இருபதாண்டு காலத்தில், இடைவெளியின்றித் தொடர்ந்து இரண்டு தலைமுறைகளுக்கு ஒரே பாடப்பொருளைக் கற்றுக்கொடுப்பது ஏற்புடையதுதானா? பாடநூல் ஆசிரியர்கள் இதை ஏன் கவனத்தில் கொள்ளாது புதிய சிக்கலை உருவாக்கியுள்ளனர் என்பதும் தெரியவில்லை. இயல் 2, செய்யுள்பகுதியில் "நாய்க்கால்' எனத் தொடங்கும் நாலடியார் பாடல் கொடுக்கப்பட்டுள்ளது. இது வெண்பா இலக்கணத்தின்படி அமைந்த பாடலாகும். ஈற்றடி முச்சீராக முடிந்திருக்க வேண்டும். ஆனால், பாடநூலில் அவ்வாறின்றிச் சொற்கள் தாறுமாறாக அச்சாகி வெண்பா வடிவமும் சிதைந்து காணப்படுகிறது. இயல் - 3-இல் "நான்மணிக்கடிகை' நூலிலிருந்து ஒரு பாடல் கொடுக்கப்பட்டுள்ளது. "மனைக்கு விளக்கம் மடவார்' என்பதுதான் பாடம். (நான்மணிக்கடிகை - கழக வெளியீடு - பாடல் எண் 105) ஆனால் பாடநூலில் ""மடவாள்'' என்னும் சொல் பயின்று வந்துள்ளது. மடவாள் என்பது பிழையான சொல் என்றும் பாராமல் மடவாள் என்பதற்குப் பெண் என்று பொருளையும் கூறுகிறது பாடநூல். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை அறக் கருத்துகளைக் கூறுபவை. அவற்றுள் நான்மணிக்கடிகை, பழமொழி எனும் இரண்டு நூல்களிலிருந்து இரண்டு பாடல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. இவ்விரண்டு பாடல்களுமே கல்வி பற்றிக் கூறும் பாடல்களாக உள்ளன. இவ்வாறு கூறியதையே கூறி புதிய கருத்திற்கான வாய்ப்பு வீணாக்கப்பட்டுள்ளது. கருத்தமைந்த திரைப்படப் பாடலைப் பாடப்பொருளாக்குவது நல்ல உத்திதான். அதற்காக பட்டுக்கோட்டையார், உடுமலை நாராயண கவி ஆகிய இருவரின் பாடல்களும் ஒரே பாடநூலில் இடம்பெறச் செய்திருப்பது, தேடலற்ற தன்மையைக் காட்டுகிறது. துணைப்பாடம் என்பது, கதையோ, கட்டுரையோ எதுவாகினும் மாணவர்களே படித்தறிந்து, அதன் கருத்தை ஒன்றிரண்டு பத்திகளில் தொகுத்து எழுதத் தூண்டுவதாக அமைய வேண்டும். இப்பாடநூலில் உள்ள துணைப்பாடப் பகுதி, மாணவர்களின் படித்தல், எழுதுதல் திறனை வளர்க்கக் கூடியதாக இல்லை. இதுவரை இப்பகுதியில் மாணவர்களை ஆர்வத்தோடு படிக்கத்தூண்டும் சிறுகதைகள் தரப்பட்டிருந்தன. ஆனால் இப்போதுள்ள நூலில் ""வீரச்சிறுவன்'' என்னும் பாடத்தைத் தவிர மற்றவை ஆர்வமூட்டும் பாடப்பகுதிகளாக இல்லை. கொடுக்கப்பட்டுள்ள கதைகளும் (இயல் 5, 6) சுவையற்றவை; பழம் பஞ்சாங்கம் என்பதுதான் உண்மை. இலக்கணப் பகுதியில் முதல் எழுத்து, குறில், நெடில் என்பதற்கான இலக்கண விளக்கம் இல்லை. ஒரே பகுதியில் சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் ஆகிய இரண்டும் கொடுக்கப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்குச் சுமையானதாகும். இரு இயல்களில் இத்தலைப்புகளைப் பங்கிட்டுத் தந்திருக்கலாம். பல இடங்களில் தரப்பட்டுள்ள இலக்கண விளக்கம் போதுமானதாகவும் மாணவர்களுக்கு விளங்கக் கூடியதாகவும் இல்லை. உதாரணமாக, எட்டாவது இயல் இலக்கணப் பகுதியில் மூன்று காலங்கள் பற்றிய விளக்கமும் எடுத்துக்காட்டுகளும் மிகமிகக் குறைவாகவே உள்ளன. பாடநூலில் உரைநடை, செய்யுள், இலக்கணம், துணைப்பாடம் ஆகிய பகுதிகளில் சந்திப்பிழை, ஒருமை பன்மைப் பிழை, வாக்கியப் பிழை, பொருள்பிழை போன்றவை நிறைந்துள்ளன. லட்சக்கணக்கான இளம் மாணவர்களுக்குப் பயன்படும் பாடநூல், பிழைகள் மலிந்ததாக இருத்தல் கூடாது. சில இடங்களைப் பார்க்கும்போது, இதன் அச்சுப் பிரதிகள் பிழை திருத்தப்பட்டவைதானா என்னும் ஐயம் ஏற்படுகிறது. தலைசிறந்த ஆவணம்போல தயாரிக்கப்பட வேண்டிய பாடநூல், பெரியஎழுத்து ""நல்லதங்காள் கதைப் புத்தகம்''போல உள்ளது வேதனையளிக்கிறது. பசிக்கேற்ற உணவு என்றாற்போல, வகுப்பின் நிலைக்கேற்றவாறு பாடநூல் அமைய வேண்டாமா?
கருத்துக்கள்
DON'T LEARN TAMIL LESSONS FROM NEW SYLABBUS.POLITICIANS KILLED TAMIL LANGUAGE. TAKE IN HOME TUTION FROM GOOD ORIGINAL VERSION BOOKS ,PRACTICE READING ,WRITING,CONVERSATION TOWARDS WTH PARENTS THEN READ TAMIL BOOKS WHAT U LIKE.