செவ்வாய், 15 ஜூன், 2010

இலங்கைத் தமிழர் எதிர்ப்பு நிலையை மத்திய அரசு கைவிட வேண்டும்: பா.ஜ.க. வலியுறுத்தல்



சென்னை, ஜூன் 14: இலங்கைத் தமிழர் எதிர்ப்பு நிலையை மத்திய அரசு கைவிட வேண்டும். இதனை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று பா.ஜ.க. கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டிலேயே, தமிழர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா. அவர் இப்போது காவல் துறையின் நடவடிக்கையிலிருந்து தப்பித்து கொழும்பு சென்று விட்டார். மத்திய அரசால் தப்பிக்க வைத்து, அனுப்பப்பட்டுள்ளார் என்பதே சரியானதாகும். டக்ளஸ் தேவானந்தா பற்றிய தகவல் தில்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைவர் கூறியிருக்கிறார். ஆனால், தேவானந்தா குறித்து தில்லிக்கு எதுவும் தெரியப்படுத்தப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார். டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது. இந் நிலையில் அவருடன் பிரதமர் மன்மோகன் சிங் கை குலுக்கியுள்ளார். அவர் கொழும்புக்கு திரும்பிச் சென்றுள்ளது, ஒரு குற்றவாளியை தப்பிக்க வைக்கும் மத்திய அரசின் உள்நோக்கத்தை தெளிவாகக் காட்டுகிறது. டக்ளஸ் தேவானந்தா குற்றவாளி என தெளிவாகத் தெரிந்தும், தீர்ப்பு வரட்டும். பார்க்கலாம் என்று ப. சிதம்பரம் கூறியிருப்பது, கண்டனத்துக்குரியது. தமிழர்களுக்கு என்ன அநீதி இழைக்கப்பட்டாலும் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மத்திய அரசு இப்போது உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சென்ற தமிழ் அமைச்சர்களும் அவ்வாறுதான் உள்ளனர். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணை போயிருக்கும் மத்திய அரசு, தமிழர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி அளிக்கப்படும் என்று இப்போது கூறியிருக்கிறது. இதற்கு முன்பு அளிக்கப்பட்ட ரூ.1000 கோடி, தமிழர்களுக்காக செலவிடப்பட்டதாக தெரியவில்லை. அதைப் பற்றிய தெளிவான விவரங்களைப் பெற மத்திய அரசு முயற்சிக்கவில்லை. இந்நிலையில் தமிழர்களின் பெயரில் கொடுக்கப்படும் பணம், அவர்களுக்குதான் பயன்படும் என்ற உத்தரவாதம் எதுவும் இல்லை. ù தாடர்ந்து தமிழர் எதிர்ப்பு நிலையையே மத்திய அரசு எடுத்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த தமிழர் எதிர்ப்பு நிலையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதனை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இந்த நிலையிலும் இப் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி பாராமுகமாக இருப்பது நல்லதல்ல. எனவே, கருணாநிதி உடனே தலையிட வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்

உண்மையைத்தான் சொல்லுகிறார் பொன்.இராதாகிருட்டிணன். ஆனால், மத்திய அரசு கொள்கையே எங்கள் கொள்கை எனக் கூறும் தமிழக அரசு தமிழர் எதிர்ப்பு நிலையைக் கைவிடுமாறு மத்திய அரசிடம் சொல்லும் என எதிர்பார்ப்பது அறியாமையே. தமிழக அரசின் நிலையைத் / தமிழர்களின் உணர்வை மத்திய அரசிற்கு உணர்த்தும் நிலையை /மத்திய அரசிற்கு உணர்த்துவதே கடமை எனத் தமிழக அரசு நினைத்திருநதால் பேரின அழிப்பு நடைபெற்றிருக்காதே. எனவே, நாடு தழுவிய நிலையில் தன் கட்சி மூலம் இதனை அறிவுறுத்தும் கடமையை அவர் மேற்கொள்ள வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/15/2010 3:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக