செவ்வாய், 15 ஜூன், 2010

நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடும் மொழியாக விளங்க நடவடிக்கை: துரைமுருகன்



சென்னை, ஜூன் 14: உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக விளங்க அனைத்து நடவடிக்கையையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ளும் என்று அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார். நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்கக் கோரி, மதுரையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை கைவிடக் கோரி அமைச்சர் துரைமுருகன் செய்திக் குறிப்பு மூலம் திங்கள்கிழமை விடுத்த வேண்டுகோள்: உயர் நீதிமன்றத்தில் தமிழ் அங்கீகாரம் பெற்ற வழக்காடு மொழியாக இருக்க வேண்டுமென்பதற்காக தமிழக சட்டப் பேரவையில் கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நீதித் துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இதன்மீது மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தரவேண்டும் என்று பிரதமர், உள்துறை அமைச்சர், சட்டத் துறை அமைச்சர் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி கடிதங்களை எழுதினார். அதன்பின், இந்தக் கருத்துருவை வலியுறுத்தி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தர மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க கடந்த 2008-ம் ஆண்டில் பிப்ரவரி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நினைவூட்டுக் கடிதங்களை கருணாநிதி எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் கருத்துரு மத்திய அரசின் சீரிய பரிசீலனையில் உள்ளது என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்பமொய்லி பதில் அளித்தார். தமிழக அரசின் உள்துறை அலுவலர்கள் அளவில் மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறைக்கு தொடர்ந்து நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இறுதியாக, கடந்த மே மாதம் மத்திய அரசின் நீதித் துறை எழுதிய கடிதத்தில், இந்தக் கருத்துரு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழித் துறையின் பரிசீலனை மற்றும் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று பதில் அளித்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக விளங்க அனைத்து விதமான நடவடிக்கையையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ளும் என்று அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்துள்ளார்.
கருத்துக்கள்

அமைச்சரின் இந்த அறிக்கைக்கிணங்க உண்ணா நோன்பிருக்கும் தமிழ்நல வழக்குரைஞர்கள் தங்கள் உண்ண நோன்பை முடித்துக் கொண்டு வெற்றி கிட்டும் வரையில் வேறு வகையில் போராட்டத்தைத் தொடர வேண்டும். உங்களைப் போன்ற உணர்வாளர்களின் உயிர் விலைமதிப்பற்றது. எனவே, உடனே உண்ணா நோன்பைக் கைவிடுக.

வணக்கத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/15/2010 3:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக