செவ்வாய், 5 ஜனவரி, 2010

படங்கள் இணைப்பு] தஞ்சையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் பேரமைப்பு மாநாடு

பதிந்தவர்_குயிலி on December 28, 2009
பிரிவு: செய்திகள், தமிழ்நாடு

[படங்கள்] [2ஆம் இணைப்பு] உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் ஈழத்தமிழருக்கான வாழ்வுரிமை மாநாடு கடந்த 26,27.12.2009 அன்று தமிழ்நாட்டில் தஞ்சையில் பழ.நெடுமாறன் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது.

தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டுத் தீர்மானங்கள்

உலகத் தமிழர் பேரமைப்பு
ஏழாம் ஆண்டு நிறைவு விழா
ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான
உலகத் தமிழர் மாநாடு
தஞ்சை திசம்பர் 26, 27/2009

தீர்மானம்-1

இரங்கல் தீர்மானம்

உலகப் பெருந்தமிழர் முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியம், செக் நாட்டு தமிழறிஞர் கமில் சுவலபில், உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் மரு. இந்திரகுமார் ஆகியோரின் மறைவிற்கு இம்மாநாடு வருந்துகிறது. அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறது.

தீர்மானம்-2

உலகத் தமிழர் கடமை

தொன்மைச் சிறப்பும், வரலாற்றுப் பெருமையும் மிக்க தமிழினம், மிகப்பெரும் நெருக்கடியையும், அறைகூவல்களையும் எதிர்நோக்கியுள்ளது. இலங்கையில் பூர்வீகக் குடியினரான ஈழத் தமிழர்களைச் சிங்கள வெறியர்கள் திட்டமிட்ட இனப்படுகொலை செய்து வருகிறார்கள். தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன.
தமிழர்களின் தாயக மண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் தங்கு தடையின்றி நடத்தப்படுகின்றன. தமிழர் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. தமிழர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

இந்தக் கொடுமைகளுக்கும், அநீதிகளுக்கும் எதிராக ஈழத் தமிழர்கள் 30 ஆண்டுக்காலம் அறவழியிலும் 30 ஆண்டுக்காலம் மறவழியிலும் போராடினார்கள். கடந்த 60 ஆண்டுக்காலத்தில் சுமார் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 10 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் எல்லாவற்றையும் இழந்த நிலையில் ஏதிலிகளாக உலக நாடுகளில் அடைக்கலம் புகுந்தார்கள்.

உள்நாட்டில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த வீடுகளிலிருந்தும், ஊர்களிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டுத் தங்களின் தாயக மண்ணிலேயே ஏதிலிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 3 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இராணுவச் சிறை முகாம்களில் அடைக்கப்பட்டுப் போதுமான உணவு, மருந்து மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் அல்லல்படுகிறார்கள். இளைஞர்கள் பிரித்தெடுக்கப்பட்டு, விடுதலைப்புலிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டுக் கொடுமையான சித்திரவதைகளுக்கும் படுகொலைகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். இளம் பெண்களும், சிறுமிகளும், சிங்கள இராணுவத்தின் பாலியல் வன்முறைக் கொடுமைகளுக்கு இரையாக்கப் படுகிறார்கள்.

தமிழர் பகுதிகளில் உள்ள ஊர்களின் பெயர்கள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன. தமிழர் தாயகத்தில் புத்த விகாரைகளும், சிங்களக் குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன. புகழ் பெற்ற கதிர்காமம் முருகன் கோயில் இப்போது புத்த பிட்சுக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தமிழர்கள் தங்களின் வாழ்விடங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் இழந்து தவிக்கும் நிலைமை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

இவ்வாறு இன அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சிங்களப் பேரினவாத அரசின் நடவடிக்கைகள் மிகக் கடுமையான போர்க் குற்றமாகும். இன அழிப்பு (ஏங்ய்ர்cண்க்ங்), போர்க்குற்றங்கள் (ரஹழ் ஈழ்ண்ம்ங்ள்), மனித உரிமை மீறல்கள் (ஐன்ம்ஹய் தண்ஞ்ட்ற்ள் யண்ர்ப்ஹற்ண்ர்ய்ள்) என்ற கொடும் குற்றங்களை, வரைமுறையற்ற அளவில் # ஈழத் தமிழினத்தை இலங்கைத் தீவிலிருந்து துடைத்தொழிக்கும் திட்டத்தோடு, உலகநாடுகளில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும், நச்சுப்பொருட்களையும் பயன்படுத்தி, வக்கிரமான வழிமுறைகளில் # சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்தியுள்ளது என்பதை உலக சமுதாயத்திற்குச் சுட்டிக்காட்டுகிறோம்.

இட்லரின் ஜெர்மனி, யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையை அரசுக் கொள்கையாகக் கொண்டிருந்தது. கிழக்கு அய்ரோப்பாவில் மட்டும் யூத மற்றும் சிலாவிய இன மக்கள் ஏறத்தாழ 120 இலட்சம் பேர் ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டார்கள். அதைப் போல, இலங்கையில் இராசபக்சேவின் அரசு, தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலையைத் திட்டமிட்டு நடத்தி வருகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமைக்கப்பட்ட நூரம்பர்க் # டோக்கியோ சர்வதேச நீதிமன்றங்கள் இனப்படுகொலை தண்டிக்கத்தக்க மிகப்பெரிய குற்றம் எனக் கூறியுள்ளன.

“இனப்படுகொலை’ என்ற பெருங்குற்றத்துக்குள் அடங்கக்கூடிய செயல்பாடுகள் அனைத்தையும் சிங்களப் பேரினவாத அரசு செய்து முடித்துள்ளது.

- தமிழின மக்கள் இரண்டு இலட்சம் பேரை இதுவரை படுகொலை செய்துள்ளது.

- மே 16 முதல் 18 வரையிலான மூன்று நாட்களில் மட்டும் 50,000 தமிழர்கள் கொல்லப்பட்டு, வன்னி மண்ணே பிணக்காடாக்கப்பட்டது.

- போரில் 25,000 தமிழர்கள் ஊனமுற்றதாகச் செய்தி வெளியானாலும், ஊனமுற்றவர் எண்ணிக்கை அதைவிடப் பலமடங்கு அதிகம் ஆகும்.

- ஈழத் தமிழ் மக்களுக்கு உணவும், நீரும், மருந்தும் கிடைக்கவிடாமல் தடை செய்து, அவர்களைப் பட்டினி போட்டும், மருத்துவ உதவியில்லாமலும் கொன்றொழித்தது.

- வதை முகாம்களில் அடைபட்டுள்ள இளைஞர்கள் சிங்களப் படையினரால் நாள்தோறும் அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்கள் முகாமுக்குத் திரும்புவதே இல்லை. வதைமுகாமுக்குள் அடைபட்டுக் கிடக்கும் பெண்கள் சிங்கள இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப் படுகின்றனர்.

- தமிழினத்தில் குழந்தைகள் பிறப்பு வலுவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. நடைமுறையில் தடை செய்யப்பட்டிருக்கிறது. கருவுற்றிருக்கும் பெண்களுக்குக் கட்டாயக் கருச்சிதைவு, பிற பெண்களுக்குக் கட்டாயக் கருத்தடை ஆகியவை சிங்கள இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள வதை முகாம்களில் மேற்கொள்ளப்பட்டன.

- குழந்தைகள் தாய் தந்தையரிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு வெவ்வேறு முகாம்களில் இருத்தப்படுகிறார்கள். அவர்களை உளவியல் அடிப்படையில் ஊனமாக்குவது திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுகிறது.

இவை அனைத்தும் சர்வதேசக் குற்றவியல் நீதிக்குழுவினால் விசாரிக்கப்பட வேண்டிய குற்றங்கள். இச்செயல்பாடுகள் அனைத்தும் இனப் படுகொலை பற்றிய ஐ.நா.வின் தீர்மானத்தின் 3வது கூறுபடி, தண்டனைக்குரிய குற்றங்கள் ஆகும்.

அய்.நா. பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள், இனப்படுகொலைத் தடுப்பு தண்டித்தல் குறித்த சிறப்பு மாநாட்டில் (1948) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையில் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை உலக நாடுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பு வலியுறுத்துகிறது.

ஏற்கனவே 1960 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் நாள் அய்.நா. பேரவை கூடி மனித குலத்தின் வாழ்வுரிமையையும், தேசிய இன உரிமையையும் அங்கீகரிக்கும் வகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. 90 நாடுகள் இந்தப் பிரகடனத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 9 ஏகாதிபத்திய நாடுகள் மட்டுமே வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

அய்.நா. பேரவை வெளியிட்ட மேற்கண்ட பிரகடனத்தின் அடிப்படையில் தமிழீழ மக்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டுமென உலகத் தமிழர் பேரமைப்பு வலியுறுத்துகிறது.

சிங்கள இனவெறிப் படுகொலையில் இருந்து தப்பிய தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும், உலகத் தமிழர்களும் இணைந்து நின்று அய்.நா. அமைப்பினையும் உலக நாடுகளையும் பன்னாட்டுச் சமுதாயத்தையும் வற்புறுத்திச் செயல்பட வைக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள ஆறரைக்கோடித் தமிழ் மக்களுக்குப் பெரும் பொறுப்பும் வரலாற்றுக் கடமையும் உண்டு என்பதை உணர்ந்து செயல்பட முன்வருமாறு வேண்டிக்கொள்கிறோம்.

ஈழத் தமிழர்கள் தங்களின் தாயகத்தை விடுவிக்கும் போராட்டத்தில் தங்கள் வலிமைக்கு மேலான அளப்பரிய தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். உலகில் எந்த ஒரு தேசிய இனமும் சந்தித்திராத வெங்கொடுமைகளுக்கும், பேரிழப்புகளுக்கும், ஆளாகியிருக்கிறார்கள். இந்த இழிநிலையை நாம் மாற்றியமைக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தில் எண்ணற்ற தியாகங்களைச் செய்வதற்கு உலகத் தமிழர்களாகிய நாம் அணியமாக வேண்டும். இதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த முடியும் என்பதை நெஞ்சார உணர்ந்து உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டு போராட முன்வருமாறு உலகத் தமிழர் பேரமைப்பு வேண்டிக்கொள்கிறது.

உலகில் உள்ள பிற தேசிய இன மக்களைப் போல முழுமையான இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையும், தங்களின் எதிர்காலத்தைத் தாங்களே முடிவு செய்து கொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும், அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலை நிறுத்திக் கொள்ள அவர்களுக்குத் தோள் கொடுத்துத் துணைநிற்க முன்வருமாறு உலகத் தமிழர்களை இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.
அளப்பரிய தியாகங்களைச் செய்து ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக இறுதிவரை போராடிய போராளிகளும் வீறுகொண்டு நடத்திய விடுதலைப் போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாகப் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும், உலகத் தமிழர்கள் முழுமையாக முன்வந்து உதவுவதோடு. அதற்காக தங்களை முற்றிலுமாக ஒப்படைத்துக் கொண்டு, எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருக்கும்படி உலகத் தமிழர்களை இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.
உலகத் தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் வேளையில் உலகெங்கிலும் உள்ள சனநாயக சக்திகள், சமத்துவச் சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் நம்முடன் இணைந்து குரல் கொடுக்க முன்வருமாறும், உலகத் தமிழர்கள் அனைவரும் அவர்கள் வாழும் நாடுகளில் உள்ள மக்களையும், அரசுகளையும் வலியுறுத்தி ஈழத்தமிழர் சிக்கலை தீர்ப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் அனைவரையும் இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.

தீர்மானம்-3

வழிகாட்டும் வட்டுக்கோட்டைத் தீர்மானம்

முப்பது ஆண்டு காலத்திற்கு மேலாக தொடர்ந்து அறவழியில் தங்கள் உரிமைகளை நிலை நாட்டப்போராடிய ஈழத்தமிழர்களின் கோரிக்கைகள் எதனையும் ஏற்க சிங்களப் பேரினவாதிகள் பிடிவாதமாக மறுத்ததின் விளைவாக 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா அவர்கள் தலைமையில் கூடிய மாநாட்டில் “ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திர இறைமை உள்ள மதசார்பற்ற சோசலிச தமிழீழம் அமைப்பதற்காக தமிழர்கள் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பாக இத்தேர்தலை அறிவித்தது.

ஈழத்தமிழர்களும் மிகப்பெருவாரியான வாக்குகளால் இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களைப் பெரும் வெற்றி பெறவைத்தனர். அதற்குப் பின்னால் நடைபெற்ற அத்தனை நாடாளுமன்ற தேர்தல்களிலும் தமிழீழத் தனிநாடு கோரிக்கையை முன்வைத்தே தமிழர்களின் பேராதரவு பெறப்பட்டது. நாடாளுமன்ற ஜனநாயக முறையில் தங்களது இலட்சியத்தை அடைய முடியாது என்பதை உணர்ந்த தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தைத் தொடங்கினர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் தலைமையில் முப்பது ஆண்டுகாலத்திற்கு மேலாக சிங்கள இராணுவத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 30,000க்கும் மேற்பட்ட போராளிகள் உயிர்த்தியாகம் செய்தனர். இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

உள்நாட்டில் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்டத் தமிழர்களும் மேலும் 10 இலட்சத்திற்கு மேற்பட்டத் தமிழர்கள் வெளிநாடுகளிலும் ஏதிலிகளாக பெரும் துன்பங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். அளப்பரிய இந்தத் தியாகத்திற்குப் பின்னணியில் தமிழீழ மக்களின் மாறாத மனஉறுதி மலைபோல் நிற்கிறது.

இவ்வளவுக்கும் பிறகு தமிழீழ இலட்சியத்தை கைவிட்டு சிங்களர் கொடுப்பதை பெற்றுக்கொள்ள மண்டியிடுவது என்பது மகத்தான துரோகமாகும். இந்த உண்மையை உணர்ந்து வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஒரு போதும் மறவாமல் அதன் அடிப்படையில் தொடர்ந்துப் போராட உறுதிபூணுமாறு உலகத்தமிழர்களுக்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக