புதன், 6 ஜனவரி, 2010

அழிந்துவரும் தமிழ் வட்டார வழக்கு மொழி: தொகுத்து நூலாக்கும் முயற்சியில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்



சென்னை, ஜன. 5: தமிழகத்தில் பேசப்பட்டு வரும் "வட்டார பேச்சு மொழிகள்' அழிந்து போவதைத் தடுக்க, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது.
÷மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களில் வட்டார பேச்சு மொழிகளைத் தொகுத்து நூல் வடிவில் வெளியிடும் பணி இப்போது நடந்து வருகிறது. செம்மொழி வழக்காற்றாய்வு திட்டத்தின் கீழ் இப்பணி நடந்து வருகிறது.
÷மாறிவரும் சமூகச் சூழல், வேலைவாய்ப்புக்காக ஒரு வட்டாரத்தைச் சார்ந்த மக்கள் பிற வட்டாரங்களுக்குச் சென்று குடியேறும் நிலை மற்றும் பரம்பரைத் தொழில்களிலும், சமூகப் பழக்கவழக்கங்களிலும் மாறுதல் நிகழ்ந்து வருவது உள்பட பல காரணங்களால் அந்தந்த வட்டாரத்தில் பேசப்படும் பேச்சு மொழிகள் காலப்போக்கில் அழிந்துவரும் சூழல் நிலவுகிறது.
÷இப்படி அழிந்துவரும் வட்டார பேச்சு மொழிகளை, தொகுக்கும் முயற்சியில் சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
÷இதற்காக "செம்மொழி வழக்காற்றாய்வு திட்டத்தின்' கீழ் வட்டார பேச்சு மொழிகளை தொகுத்து ஆவணமாக்கும் முயற்சி நடந்து வருகிறது.
÷நாட்டுப்புறப் பாடல்கள், விடுகதைகள், கல்வெட்டுகள்...: சென்னை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட பேரகராதியில் இல்லாத சொற்களை, இப்போது சேர்க்கும் பணி நடந்து வருகிறது. இதில் பேச்சு வழக்கு மட்டுமல்லாமல் நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புறக் கதைகள், பழமொழிகள், விடுகதைகள், கல்வெட்டுகள், சாசனங்கள் என வழக்காற்றில் உள்ள சொற்களும் அடங்கும்.
இதற்கான கள ஆய்வுப் பணி மாநிலத்தின் 32 மாவட்டங்களில் நடந்து வருகிறது.
இதுபற்றி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் க.இராமசாமி கூறியது:
÷""அந்தந்த மாவட்டத்தில் பேசப்படும் வட்டார மொழிகளை தொகுத்து வருகிறோம். இதைத் தொகுத்து நூலாக வெளியிட உள்ளோம். இப்பணிக்கான கால அளவை நிர்ணயித்து கொள்ளவில்லை. இப்பணி தொடர்ந்து பல ஆண்டுகள் நடைபெறும்'' என்றார்.
÷தொழில் வழக்கு...: தொழில் மாற்றங்கள் நிகழ்வதால் தொழில்முறை நுணுக்கங்களைப் பற்றிய சொற்கள், கருவிகளின் பெயர்கள் மற்றும் கையாளப்படும் முறைகள் குறித்த சொற்களும் மறைந்து வருகின்றன. அந்த வகையில் நெசவுத் தொழில், நகைப் பட்டறைத் தொழில், சாயப்பட்டறைத் தொழில், சிற்பத் தொழில் என 28 தொழில்கள் பட்டியலிடப்பட்டு, ஈடுபட்டுள்ளவர்களின் தொழில் சம்பந்தமான பேச்சு மொழியும் தொகுக்கப்பட்டு வருகிறது.
÷ஆயிரம் வகை சொற்கள்...: தமிழில் உள்ள நெல் வகைகளும் அவற்றின் பெயர்களும் (820 நெல் வகைகள்), நிறம், சுழி, கால், கொம்பு, குளம்பு அடிப்படையில் பருவநிலைகள் மற்றும் மாட்டுத் தரகர்கள் பயன்படுத்தும் எண்ணல் அளவைகள் அடிப்படையில் ஆடு, மாடுகள் குறித்த 1,500 சொற்கள் உள்ளன. மீன்களின் பெயர்கள் மற்றும் வகைகள், ஆமை, நண்டுகளின் வகைகள், கடல்நீர் நிலைகள், நீரோட்டம், காற்று, திசை, வலை, வலையின் பாகங்கள், படகு, படகின் பாகங்கள் என 30 தலைப்புகளில் கடல்சார் தொழில் புரியும் மீனவர்களின் 3,500 சொற்கள் உள்ளன. தமிழில் உள்ள அளவைகள் பற்றிய 3,400 சொற்கள் (நீட்டலளவை, நிறுத்தலளவை, எண்ணலளவை, தொலையளவு, கால அளவு, நாணய அளவு, முகத்தலளவை, தொழில்சார் அளவை, அளவைக் கருவிகள்) இதில் அடங்கும். இம்மாதிரி ஆயிரம் வகையான பேச்சு வழக்குச் சொற்களை தொகுக்கும் பணி முடியும் தறுவாயில் உள்ளது.
÷"செம்மொழி வழக்காற்றாய்வு திட்டத்தின் கீழ் தொகுக்கப்படும் சொற்கள் மூலம் தமிழ் மொழியின் சொல் வரலாறு, தமிழும் பிற திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, தமிழர்களின் சமூகப் பண்பாட்டுக்கூறுகள், தமிழர்களின் தொழில்சார் அறிவும், தொழில் நுணுக்க அறிவும், கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும், தமிழர்களின் நாகரிக வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் ஆதாரமான வகைகள், வட்டார வழக்கு அகராதி, தொழில்சார் கலைச்சொல்லகராதி மற்றும் தமிழ் மொழியின் அகராதி ஆகியவை தயாரிக்கவும், அதுபற்றி ஆய்வு செய்யவும் உதவும். மேலும் இத் தலைப்புகளில் ஓராண்டுக்குள் நூல்கள் கொண்டு வரும் முயற்சியும் நடந்து வருகிறது' என்றார் இராமசாமி.

கருத்துக்கள்

நல்ல முயற்சி.பாராட்டுகள். அவ்வாறு தொகுக்கும் பொழுது கொச்சை வடிவினை நீக்கி விட்டுத் திருந்திய செம்மையான நடையிலேயே வெளியிட வேண்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/6/2010 3:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக