சென்னை, மார்ச் 28: ""அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, நீர்வளத்தில் தமிழகம் பற்றாக்குறை மாநிலமாகவே இருக்கிறது'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.பண்டைத் தமிழரின் நீர் மேலாண்மைக் கருத்தரங்கம் மற்றும் செம்மொழி தமிழ் விருதாளர்களுக்குப் பொற்கிழி வழங்கும் விழா ஆகியன சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில், கருத்தரங்கைத் தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியது:""இன்றைய பொறியியல் துறை அறிஞர்கள் வியந்து போற்றக்கூடிய தொழில் நுட்பத்தை ஏறத்தாழ 1,800 ஆண்டுகளுக்கு முன்பு கையாண்டு கரிகால சோழன் காவிரி ஆற்றுக்குக் கரை எடுத்தான்.காவிரியின் குறுக்கே கல்லணை கட்டி, நீர்ப்போக்கை ஒழுங்கு செய்ததும், தமிழரின் நீர் மேலாண்மைத் திறனை உலகுக்கு உணர்த்துகிறது. இதன்பயனாக, பிற நாட்டு வளங்களை விடச் சோழநாட்டு வளம் செழித்துக் கொழித்தது.நீர் ஆதாரங்களை ஏராளமாக உண்டாக்கி, தங்கள் பெயரை வரலாற்றில் இடம்பெறச் செய்தனர் அரசர்கள். மாமன்னன் ராஜேந்திர சோழன் 11}ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தில், "சோழ கங்கன்' என்னும் தனது பட்டப் பெயரில் "சோழகங்கம்' எனும் ஏரியை உருவாக்கினான்.அந்த ஏரி, இன்று "பொன்னேரி' என அழைக்கப்படுகிறது. அந்த ஏரியின் வடிகாலாக தனது சிறப்புப் பெயரிலேயே அமைத்த "வீர நாராயணன் ஏரி' இன்று "வீராணம் ஏரி' என்று புகழ் பெற்றுள்ளது.பற்றாக்குறை மாநிலம்: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த இலக்கியங்களாலும், கட்டுமான அமைப்புகளாலும் நீர்வளத்தில் அந்தக் காலத்திலேயே ஒரு தெளிவு தமிழகத்தில் இருந்தது.இன்றைய நிலையில், தமிழகத்தின் நீர்வளம் தமிழகத்தைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களோடு ஒப்பிடும்போது ஒரு பற்றாக்குறை மாநிலமாகவே இருக்கிறது. எனினும், கிடைக்கும் நீர்வளத்தைச் செம்மையாகப் பயன்படுத்திட வேண்டும் என்ற முனைப்போடு பல்வேறு பாசன மேம்பாட்டுத் திட்டங்கள் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், தமிழகத்தில் நீர் ஆதாரங்களைப் பெருக்கிட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தின் நீர்வளம் இந்தியாவின் நீர்வளத்தில் 2 சதவீதமாகவும், மக்கள் தொகை ஆறரை சதவீதமாகவும் அமைந்துள்ளது. இதன் காரணமாக, ஓர் இந்தியனுக்குக் கிடைக்கும் நீரில் மூன்றில் ஒரு பாகம்தான் தமிழகத்தில் வாழும் ஒருவருக்குக் கிடைக்கிறது.எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக உலகெங்கும் பிரச்னைகள் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.இந்த நிலையில், இருக்கும் நீர் வளத்தைச் செம்மையாகக் கையாள்வதற்கும், பருவ மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை உரிய முறையில் சேமிப்பதற்கும் தகுந்த திட்டங்களையும், நடைமுறைகளையும் வகுத்திட வேண்டும்.வகுக்கப்படும் திட்டங்களின் அடிப்படையில் மக்கள் அவற்றைப் பின்பற்றி வருங்காலச் சமுதாயத்துக்குக் காத்துத் தந்திட வேண்டும்'' என்றார் முதல்வர் கருணாநிதி.இந்த நிகழ்ச்சியில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் வா.செ.குழந்தைசாமி, காவிரி தொழில்நுட்பக் குழுமத் தலைவர் ஆ.மோகன கிருஷ்ணன், தமிழக தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன காசிநாதன், பனைத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.தமிழறிஞர்களுக்கு பொற்கிழிசெம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் சார்பிலான பொற்கிழிகளை முதல்வர் கருணாநிதி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.விருதுகள் தில்லியில் நடைபெறவுள்ள விழாவில், குடியரசுத் தலைவர் வழங்க உள்ளார். பொற்கிழிகள் பெற்றோர் விவரம்:தொல்காப்பியர் விருது (2005}2006): பேராசிரியர் அடிகளாசிரியர்}ரூ.5 லட்சம் பொற்கிழிஇளம் அறிஞர் விருது (2005}2006):முனைவர் இரா.அறவேந்தன், முனைவர் ய.மணிகண்டன், முனைவர் சி.கலைமகள், முனைவர் வா.மு.செ. முத்துராமலிங்க ஆண்டவர், முனைவர் கே.பழனிவேலு.இளம் அறிஞர் விருது (2006}2007): முனைவர் சு.சந்திரா, முனைவர் அரங்க பாரி, முனைவர் மு.இளங்கோவன், முனைவர் மா.பவானி, முனைவர் இரா.கலைவாணி.இளம் அறிஞர் விருது (2007}2008): முனைவர் அ.செல்வராசு, முனைவர் ப.வேல்முருகன், முனைவர் ஆ.மணவழகன், முனைவர் ச.சந்திரசேகரன், முனைவர் சா.சைமன் ஜான்.குறள் பீடம் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் எல்.ஹார்டுக்கு ரூ.5 லட்சம் பொற்கிழி அறிவிக்கப்பட்டு இருந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை. பின்னொரு நிகழ்வில் அவர் பொற்கிழியைப் பெறுவார் என அறிவிக்கப்பட்டது.
கருத்துக்கள்
நீர்வளம் குறித்த உரை அருமையானது. 2.) தமிழ்ச் செம்மொழியறிஞர்களுக்கான விருது அறிவிப்பிற்குப் பின் குடியரசுத் தலைவரால் சமற்கிருத அறிஞர்களுக்கு விருது வழங்கப் பட்டுள்ளது. தமிழுக்கு ஏன் குடியரசுத் தலைவர மாளிகையும மத்திய காங்கிரசு ஆட்சியும் தடைக் கற்களாக உள்ளன. ஏப்பிரல் 6 அன்று தமிழக முதல்வர் புது தில்லி போகும் நாளில் விருது வழங்கலையும் பொற்கிழி வழங்கலையும் வைத்திருக்கலாமே! தமிழ் மொழிக்கு மட்டும் ஏன் இந்தப் பாகுபாடு? விருதாளர்கள் தன்மானத்துடனும் பொறுமையுடனும் இருந்து விருதையும் பொற்கிழியையும் சேர்ந்து பெற்றிருக்கலாமே!
வெட்கக் கேட்டிற்கு வருந்தும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
3/29/2010 3:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்3/29/2010 3:02:00 AM