Last Updated :
காரைக்குடி, மார்ச் 27: கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கும் இடமிருக்கும் என்றும், கம்பன் ஏமாற்றப்படமாட்டார் என்றும் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் கூறினார். காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் நடைபெறும் 72வது கம்பன் திருவிழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், "தினமணி' முன்வைக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் தமிழக அரசும் முதல்வரும் ஏற்றுக் கொள்ளத் தயங்கியதில்லை என்றார். ""பள்ளி மாணவனாகவும் கல்லூரி மாணவனாகவும் காரைக்குடி கம்பன் விழாவில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட அந்த நாள்களை இன்று கம்பன் கழக மண்டபத்தில் நுழையும் போது நான் நினைவுகூர்ந்தேன். அப்போதெல்லாம் கம்பன் விழாவில் அன்றைய "தினமணி' ஆசிரியர் பெரியவர் ஏ.என். சிவராமனை பிரமிப்புடன் பார்த்திருக்கிறேன். ஒருநாள் நான் "தினமணி' ஆசிரியராகப் பொறுப்பேற்பேன் என்றோ, காரைக்குடி கம்பன் விழா மேடையில் தொடக்க உரையாற்றுவேன் என்றோ அப்போது கனவிலும் எண்ணிப் பார்த்ததில்லை. "கம்பனுக்கு மேலோர் கவிஞன் இல்லை; கம்பனது கவியின்றி கனித்தமிழ்தான் வாழ்வதில்லை' என்பார் கவியரசர் கண்ணதாசன். கம்பன் ஏன் காந்தம் போல் நம்மை இழுக்கிறான்? அவனது ராம காவியம் வெறும் கவிதை தொகுப்பல்ல. கற்பனைச் சுரங்கம் உவமைகளின் சமுத்திரம். எல்லாவற்றுக்கும் மேலாக கதா பாத்திரங்களை நாடகத் தன்மையுடன் உலவவிடும் கவித்துவம் கம்பனது தனித்துவம்.÷நான் எழுதியதாலோ என்னவோ எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கு இடமுண்டா இல்லையா என்று. நான் போகுமிடமெல்லாம் இந்தச் சர்ச்சை எழுப்பப்படுகிறது.÷தீண்டாமைக்கு எதிராகக் குரல் எழுப்பி மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்குள் தாழ்த்தப்பட்ட சகோதரர்களை அழைத்துச் சென்ற மதுரை வைத்தியநாத அய்யர் சிலை பராமரிப்பில்லாமல் இருக்கிறது என்று "தினமணி' நாளிதழில் செய்தி வெளிவந்தது. காலையில் "தினமணி' வெளிவந்த சில நிமிடங்களில் மாவட்ட ஆட்சியர், மேயர் தொடங்கி அனைத்து அதிகாரிகளும் அந்தச் சிலை அருகில் குவிந்துவிட்டனர். அடுத்த சில மணித் துளிகளில் சிலை புதுப்பொலிவு பெற்றுவிட்டது. காரணம், முதல்வரிடமிருந்து வந்த தொலைபேசி ஆணை.÷போலி காலாவதியான மருந்துகளைப் பற்றிய "தினமணி' தலையங்கம் வந்தவுடன், முதல்வர் அதிகாரிகளைக் கூட்டி நடவடிக்கையை முடுக்கிவிட்டதை நாடறியும்.÷காரைக்குடி மாநகரில் தமிழ்த்தாய் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய, அந்தத் தமிழ்த்தாய் கோயிலைத் திறந்து வைத்த, கம்பன் அடிப்பொடியின் மீது அளப்பரிய மரியாதையுள்ள, எல்லாவற்றுக்கும் மேலாக தமிழை நேசிக்கும் தமிழக முதல்வர், கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு செம்மொழி மாநாட்டில் இடமளிக்காமல் இருக்கமாட்டார் என்று நிச்சயமாக நம்புகிறேன். அவர் சொன்னதைச் செய்வதுபோல சொல்லாமலும் செய்வார் என்பதற்கு செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கு அளிக்கப்படும் இடம் எடுத்துக்காட்டாக அமையும் என்று நான் கருதுகிறேன். வள்ளுவன், இளங்கோ, கம்பன் ஆகிய மூவரையும் தமிழையும் பிரித்துப் பார்ப்பது இயலாது என்பதை அறியாதவர் அல்லர் அவர். கம்பன் ஏமாறவும் மாட்டான். நாம் ஏமாற்றப்படவும் மாட்டோம். ஏனென்றால் கம்பனின் தமிழ் காலத்தையும் வரைமுறைகளையும் கடந்த தேன்பாகு என்பதில் சந்தேகம் என்ன? என்றார் அவர்.
By Ilakkuvanar Thiruvalluvan
3/28/2010 4:53:00 AM
By Chandra
3/28/2010 4:41:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்