சென்னை, ஏப்.2: தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
""தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்த பிறகும், அவர்களை தாழ்த்தப்பட்டவர்களாகக் கருத வேண்டும். அவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கெனவே பலமுறை மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
1950}ம் ஆண்டுக்கான தாழ்த்தப்பட்டோர் சட்டம், 1956}ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் சீரமைப்புச் சட்டம், 1976}ம் ஆண்டு எஸ்.சி., எஸ்.டி., சட்டத் திருத்தம் ஆகியன தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் இந்து, சீக்கியர், புத்த மதங்களைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களை தாழ்த்தப்பட்டவர் என்று கருத வேண்டும் எனக் கூறியுள்ளது.
1990}ம் ஆண்டு இந்தச் சட்டத்தில் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டது. அப்போது, புத்த மதத்தைத் தழுவியர்களும் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர்.
தாழ்த்தப்பட்ட இந்துக்கள் என்னென்ன சலுகைகள் பெறுகிறார்களோ, அத்தனை சலுகைகளையும் அவர்கள் வேறு மதத்துக்கு மாறினாலும் கொடுப்பதாக அரசு உறுதிமொழி வழங்கியது.
எனவே, தலித் கிறிஸ்தவர்களையும் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்து உரிய சலுகைகள் வழங்க வேண்டும். நாடாளுமன்ற சட்டப் பிரிவுகளின் கீழ், நீங்கள் (பிரதமர்) தனிப்பட்ட முறையில் இந்தப் பிரச்னையில் தலையிட்டு உதவ வேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்போது அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய அனைத்து சலுகைகளையும் குறிப்பாக, இடஒதுக்கீடு பெற அவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க உறுதி செய்ய வேண்டும்'' என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
2/2) பிற சமயம் மாறுபவர்கள் அந்தப் பழக்க வழக்கங்களைப்பின்பற்றுவதால் காலம் காலமாகப்பின்பற்றி வந்த மண்ணின் பண்பாட்டை உதறுகிறார்கள். (ஈழத்தில் இசுலாமியச் சமயத்தைப்பின்பற்றியதாலேயே தமிழர்களும் இசுலாமியர்களும் என வேறுபடுத்திக் காட்டி நடந்து கொள்வதை மறக்க வேண்டா.) சமய, சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் எல்லா வாய்ப்பும் கிடைக்க உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதே நேரம் சமயம் மாறுபவர்களுக்குச் சலுகைகள் நீடிப்பது மடமை என உணர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
4/3/2010 3:15:00 AM
1/2) இவ்வாறான கோரிக்கையும் செயல்பாடும் தாய்மண்பண்பாடடிற்கான சாவுமணி என்பதை யாரும் உணருவதில்லை. நேற்று வரை தமிழராக இருந்தவர் கிறித்துவராக மாறியதும், தமிழர் திருநாளாம் பொங்கல் நாளில் கடவுளுக்குப்படைக்கவில்லை எனக் கூறிப் பொங்கல் அளித்தாலும் ஏற்பதில்லை. கிருத்துவ ஆண்டைத்தான் பின்பற்றுவோம் எனத் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பதில்லை. ஐரோப்பிய கிருத்துவ அறிஞர்கள் தமிழ் இலக்கியச் சிறப்பால் கவரப்பட்டு சமய இலக்கியங்களைப்படித்தாலும் மொழி பெயர்த்தாலும் சமயம் மாறவில்லை. அதுபோல் ஒருவர் எச்சமயக் கருத்தையும் போற்றத் தடையில்லை. ஆனால், சமய மாற்றம் என்பது பத்தாயிரத்துக்கு ஒன்று என்ற அளவில் மிகக் குறைவாகத்தான் இருக்க வேண்டும். வேறு சமயத்திற்குச் சென்றால் உயர்ந்த நிலை அடைவோம் எனக் கருதி அல்லது கற்பிக்கப்பட்டு அச் சமயத்தைப் பின்பற்றி மாறுபவர்கள் தாம் சார்ந்திருந்த சமயச் சலுகைகளை இழக்க வேண்டியதே முறையாகும். (தொடர்ச்சி காண்க) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
4/3/2010 3:12:00 AM