ஞாயிறு, 28 மார்ச், 2010

விருத்தாசலம் அருகே 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமால் சிலை கண்டெடுப்பு



பண்ருட்டி, மார்ச் 27: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வடக்கே 11 கி.மீ. தொலைவிலுள்ள முகாசாபரூரில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால திருமால் சிலையும், கச்சிராயர்கள் கால கல்வெட்டுகள் இரண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.÷இப்பகுதியை சேர்ந்த வீரசேகர பொன்னம்பல வேலுசாமி கச்சிராயர், ரமேஷ் கச்சிராயர் முன்னிலையில் பாழடைந்த பெருமாள் கோயிலில் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது முட்புதர்களுக்குள் மறைந்து கிடந்த 15-க்கும் மேற்பட்ட கருங்கற் சிற்பங்களும், கோயில் மண்டபத் தூண்களும் கண்டெடுக்கப்பட்டன.÷இவற்றை ஆய்வு செய்த கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் நிருபர்களிடம் கூறியது: முகாசாபரூரில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டன. சங்க காலத் தொடர்புடைய இவ்வூரில் திருமால், சிவன் கோயில்கள் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளன. இக்கோயிலில் இருந்த பெருமாள் தாயார், கருடாழ்வார், பாய்கலைப்பாவை எனப்படும் கொற்றவை சிற்பங்கள் அனைத்தும் வேற்று மத அரசர்களின் படையெடுப்பின் போது சிதைக்கப்பட்டுள்ளன.÷இதில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரேவொரு திருமால் சிலை மட்டும் மறைத்து பாதுகாத்து தற்போது எடுத்து வைக்கப்பட்டுள்ளது. 199 செ.மீ உயரமும், 82 செ.மீ. அகலமும் கொண்ட திருமால் சிற்பம் காண்பதற்கரிய கலை நுட்பம் மிகுந்த பல்லவர் கால படைப்பாகும். கோயில் திருச்சுற்றில் கிடந்த மண்டபத் தூண்களில் கச்சிராயர் சிற்பங்களும், கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டன.÷மேற்கண்ட கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டு மற்றும் தேதிக்கு சரியான ஆங்கில ஆண்டு 1750 நவம்பர் முதல் வாரம் ஆகும். கச்சிராயர்கள் காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு அரசாண்ட பல்லவ மன்னர்களின் வழிவந்தவர்களாகும்.÷இக்கோயில் கச்சிராயர்கள் கட்டியுள்ளனர் என்பதும், இவ்வூரின் பழமையான பெயர் பருவூர் என்றும் ஆய்வின் மூலம் தெரியவருகிறது என பண்ருட்டி தமிழரசன் கூறினார்.(1) குறுநில மன்னர் பொன்னம்பல முத்து கிருஷ்ணப்பக் கச்சிராயர் சிற்பம். (2) பல்லவர் கால திருமால் சிற்பம். (3) கச்சிராயர் கல்வெட்டு.
கருத்துக்கள்

1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றால் கல்வெட்டு ஆண்டு 1750 என்பது தவறல்லவா? இதுதான் சரி யென்றால் 1300 என்பது தவறல்லவா?அலலது சிற்பக்காலம் வேறு ; கல்வெட்டு காலம் வேறு என்றால் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். கோவில் உருவாக்கத்திற்கு முன்பே சிற்பம் எப்படி வந்தது? சரியாகத் திருத்திக் குறிப்பிட வேண்டுகின்றேன்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/28/2010 5:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக