வியாழன், 1 ஏப்ரல், 2010

ஏற்புடையதா அயல்மொழிச் சொற்கள்?



அயல்மொழிச் சொற்களை அப்படியே ஏற்கலாமா, கூடாதா என்பது பற்றிய சர்ச்சை தொடங்கி ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாகப் போகிறது. தூய தமிழில்தான் பேச வேண்டும் என்கிற பழ. கருப்பையா போன்றவர்கள் ஒருபக்கம். மொழி மக்களுக்குப் புரியும்படி இருப்பதற்காகத்தான் என்கிற ஈ.வே.கி.ச. இளங்கோவன் போன்றோர் இன்னொருபக்கம். திராவிடப் பாரம்பரியத்தினரே பலர் பிறமொழி கலந்து பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டு விட்டனர்.

÷புதுக்கவிதை எழுதும் தமிழுணர்வுக் கவிஞர்களில் பலர் வடமொழிச் சொற்களைக் கையாள்வதுதான் சிறப்பு என்று கருதுவது வேடிக்கையாக இருக்கிறது. சிநேகம், பரிச்சயம், சுவாசம், பிரியம், ஜீவன் போன்ற வார்த்தைகளில்லாத புதுக்கவிதைகளை எண்ணிவிடலாம் போலிருக்கிறது. தமிழைச் சுவாசிக்கிறோம் என்பவர்களின் பெயர்கள் வடமொழிப் பெயர்களாக அல்லவா இருக்கிறது. சிநேகனும், விஜயும், மனுஷ்யபுத்ரனும், மாலதி மைத்ரியும், சாரு நிவேதிதாவும் தனித்தமிழ் இயக்கத்தினரின் பார்வையில் தீண்டத்தகாதவர்களாகி இருப்பார்களே?


÷தமிழில் முதல் டாக்டர் பட்டம் பெற்றவரும் சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில தமிழ் அகராதி தலைமைத் தொகுப்பாளருமான அ. சிதம்பரநாதன் செட்டியார் "சொல்லும் பொருளும்' என்ற தலைப்பிட்ட தமது கட்டுரையில் "இன்றியமையாத இடங்களில் வழக்குப் பயிற்சி அதிகமாகிவிட்ட சொற்களை ஆளுவது குற்றம் ஆகாது. உதாரணமாக மோட்டார், ரயில், சைக்கிள், பேனா, பாங்கி ஆகிய சொற்களை அப்படியே ஆளுவதாற் பெரிய குற்றம் வாராது. அவை தமிழே போல் அமைந்து தமிழ் மொழியிலே இக்காலத்திற் சேர்ந்து கலந்துவிட்டன. அவற்றை தானியக்கி, பொறியியக்கி, ஈருருளி, மை எழுதுகோல், பண்டாரம் முதலிய சொற்களைக் கொண்டு அப்புறப்படுத்த முயலுவது கடினமாகும்' என்று குறிப்பிடுகிறார். (தமிழோசை - முல்லை நிலையம்).
÷தமிழ்மொழி மீது தீவிர பற்றுக் கொண்டு ஜீவானந்தம் என்கிற தனது பெயரை (பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் சொரிமுத்து) "உயிர் இன்பன்' என்று மாற்றிக் கொண்டதோடு, மேடையில் தனித்தமிழில் மணிக்கணக்காகச் சொற்பொழிவாற்றும் ஆற்றல் மிக்கவராகவும் விளங்கினார் ஜீவா. அவர் சிராவயலில் நடத்தி வந்த ஆசிரமத்துக்கு ஒருமுறை தமிழறிஞர் வ.ரா. (வ. ராமசாமி) வந்திருந்தார். அன்று "நாடும் இளைஞர்களும்' என்ற தலைப்பில் ஜீவா ஒரு மணிநேரம் தூய தமிழில் உரையாற்றினார். அதனைக் கேட்ட வ.ரா. மிகவும் வியப்படைந்து ஜீவாவிடம், "இம்மாதிரி பிரசங்கத்தை நான் கேட்டதே இல்லை. இவ்விதம் பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் மிகச் சிலரே' என்று பாராட்டிவிட்டு, வேறு ஓர் ஆக்கமான யோசனையையும் சொன்னார். ""உங்களை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் நன்மையை உத்தேசித்து, தமிழ் மொழியின் வளர்ச்சியையும் உத்தேசித்து, தயவுசெய்து தனித் தமிழை விட்டு விடுங்கள். நீங்கள் என்னதான் அபூர்வமாகப் பேசியபோதும், உங்களுடைய தமிழைப் பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியாது. இது மக்களுடைய மொழியல்ல'' என்பதாகும் அந்த யோசனை.

÷அவரது அந்த யோசனை அன்றைக்கு ஜீவாவுக்கு கசப்பானதாகவே இருந்தது. ஆயினும், காலவரையில் ஏற்பட்ட அனுபவத்தில் அவர் தமது தூய தமிழ் போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று.

÷1927-ம் ஆண்டுவாக்கில் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிலும், சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்திலும் கலந்துகொண்ட ஜீவா, மறைமலையடிகளாரைப் பார்க்கப் போனார். மறைமலையடிகள் சென்னை, பல்லாவரத்தில் குடியிருந்தார்.
÷மறைமலையடிகள் வீட்டை அடைந்து, கதவைத் தட்டியபோது கேட்ட குரல் ஜீவாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கேட்ட குரல், தனித்தமிழ் இயக்கத்தின் ஆதர்ச நாயகனாகக் கருதப்பட்ட சுவாமி வேதாச்சலத்தின் குரல். அது தனித் தமிழாக இருக்கவில்லை.

÷""யாரது போஸ்ட்மேனா?'' என்று தனது இனிய மொழியில், தனித்தமிழ் வித்தகர் ஜீவாவை வரவேற்றார். அடுத்தபடியாக

""என்ன காரணம் பற்றி வந்தீர்கள்'' என்ற வினா.

""காரணம் என்ற வார்த்தை தமிழ்ச் சொல்லா அல்லது பிற மொழிச் சொல்லா?'' என்று ஜீவா திரும்பக் கேட்டார்.
÷"எம்மொழிச் சொல் என்று இன்னும் முடிவு கட்டப்படவில்லை'' மறைமலையடிகளின் பதில்.
""ஏது, மூலம் எனும் சொற்கள் தமிழ்ச் சொற்கள் தாமே?'' ஜீவா கேட்டார்.
÷""ஆமாம்'' அவரது பதில்.
""அங்ஙனமாயின் ஏது, மூலம் ஆகிய சொற்களைப் புழங்குதல் அன்றோ சால்புடைத்து''
""ஆம்!''
÷இப்படிப் பதில் சொல்லிவிட்டு, சுவாமி வேதாச்சலம், பேச்சின் போக்கைத் திசை திருப்ப வேண்டி, நூல் நூற்பதையும், கதர் ஆடை அணிவதையும் கடுமையாகத் தாக்கிப் பேச ஆரம்பித்தார்.
ஜீவாவோ, கடுமையாகப் பதில் சொல்லி அடிகளாரின் வாதத்தை மறுத்துவிட்டு வெளியேறினார்.

÷தனித் தமிழ் இயக்கத்தின் தலைவராக மதிக்கப்பட்ட தூய தமிழ்வாதியான சுவாமி வேதாச்சலமும், அவர் கூட்டத்தினரும் சம்ஸ்கிருத எதிர்ப்பாளர்களாக இருந்ததோடு மட்டுமல்லாமல், ஆங்கில ஆதரவாளர்களாக இருப்பதை ஜீவா உணரலானார். யதார்த்த வாழ்வில், மறைமலை அடிகளாரால் தூய தமிழை உபயோகிக்க முடியவில்லை என்கிற உண்மையும் புலப்படலாயிற்று.
÷பிற்காலத்தில், தலைமறைவு வாழ்க்கையின்போது, மக்களுடன் ஜீவனுள்ள தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், வ.ரா. சொன்னதுபோல், மக்கள் மொழியிலேயே பேச வேண்டும் என்ற உண்மை அவருக்குப் புரியலாயிற்று. (ஜீவானந்தம் - டி. செல்வராஜ் - சாகித்ய அகாதெமி).
÷இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம். "முரசொலி' நாளிதழில் மூதறிஞர் ராஜாஜியைப் பற்றிக் குறிப்பிடும்போது இராசாசி என்றுதான் எழுதப்பட்டு வந்தது. "முரசொலி' ஆசிரியருக்கு ராஜாஜியிடமிருந்து ஒரு தபால்கார்டு வந்தது. அதில் அவர் எழுப்பியிருந்த கேள்வி இதுதான் - முரசொலியில் எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஜி.ராமச்சந்திரன் என்றும், ஜெயலலிதா, ஜெயலலிதா என்றும் குறிப்பிடப்படும்போது தனது பெயர் மட்டும் ஏன் இராசாசி என்று குறிப்பிடப்படுகிறது? அதுமுதல் "முரசொலி' அவரை மூதறிஞர் ராஜாஜி என்றே குறிப்பிடத் தொடங்கியது.

÷வடமொழிக் கலப்பும் சரி, பிறமொழிக் கலப்பும் சரி, அடிப்படையையே சிதைக்காமல் இருப்பதுவரை அனுமதிக்கப்படத்தான் வேண்டும். இல்லையென்றால் மொழி வழக்கொழிந்து விடும். அதற்காகத் தேவையில்லாமல் ஆங்கிலம் கலந்து பேசுவதும், பெயருக்குத் தமிழ் வார்த்தைகளைக் கையாண்டு பேசுவதும் ஏற்புடையதல்ல. அப்பா, அம்மாவை - டாடி, மம்மி என்று கூப்பிடுவதும் தவறு. அதற்காக ஜெட், ராக்கெட், பஸ், கார் போன்ற நவீன கண்டுபிடிப்புகளுக்குத் தமிழ்ப் பெயர்களைத் தேடித் திரிவதும் தேவையில்லாத வேலை என்றே தோன்றுகிறது.


கருத்துக்கள்

பெயரிலேயே அயல மொழி எழுத்தைக் கொண்டுள்ள கட்டுரையாளரின் கருத்தும் நேயரின் கருத்தும் இம்மாதிரிதான் இருக்கும். தக்க தமிழ்ச் சொல் தெரியாத நேர்வில் இடைக்காலமாகப் பிற மொழிச் சொற்களை அல்லது வழக்கில் இடம் பெற்று விட்ட சொற்களைக்கையாளலாமே தவிர நிலையாகக் கையாள்வதால் நமக்குத்தான் தீமை. தமிழ்க் கண்டமாக இருக்க வேண்டிய இன்றைய நிலப்பகுதி பன்மொழிகள் பேசும் இந்தியாவாக உருவெடுத்ததற்குக் காரணம் நமது மொழியில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பயன்படுத்தியதுதான் என்னும் வரலாற்று உண்மையை மறந்து விட்டு அயல்மொழிக் கலப்பிற்கு வாதிடுவோர் அறியாமை நிரம்பியவர்கள் பற்றி என்ன கூறுவது? பிறர் தவறு செய்தால் நாம் அவர்களைத் திருத்த வேண்டும் அல்லது நாமாவது செம்மையாக இருக்க வேண்டும். அவர்கள் வழியில் நாமும் தவறு செய்வது முறையாகாது. எனவே, பிற மொழிக் கலப்பிற்கு இடம் தராமல் தமிழையே பேசுங்கள்!தமிழையே எழுதுங்கள்!தமிழ்த்தாய்க்கு நாம் விளைவித்த கேடுகள் போதும்! இனியேனும் குற்றுயிரும் குலையுயிரும் ஆக்காமல் தமிழ்த்தாயை வாழ வைப்போம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/1/2010 3:38:00 AM

I accept this article, we must develop our language scientifically and technically. Why can not this people gain the experience from English and other languages. Mr. Kalanjar KARUNANITHI AND PRHABAKARAN NAME is not tamil name , that is sanskirit, we all accept it. But i beleieve that srilankan tamils more concern about tamil language and we need to learn from them.

By jayakumar
4/1/2010 1:08:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக