ஞாயிறு, 28 மார்ச், 2010

காரைக்குடி என்று சொன்னால் கம்பனும் எழுந்து வருவான்



காரைக்குடி, மார்ச் 27: சங்க இலக்கியங்கள் ஒரு பக்கம் தமிழின் புகழ் பரப்பிக் கொண்டிருந்தாலும், தமிழை இன்றையநாள் வரை வாழும் மொழியாக வைத்திருப்பது பக்தி இலக்கியங்கள்தான். இவற்றில் தேவாரப் பாடல்களும், நாலாயிரத் திவ்ய பிரபந்தமும், கம்பராமாயணமும் மிக முக்கியமானவை.கவித்துவம், தத்துவம், கருத்துகள், வர்ணனைகள், சொல்லாடல் அனைத்தையும் கொண்ட இராமகாவியம், ஏதோ கடினமானது என்பதுபோன்ற கருத்தாக்கம் ஏற்பட்டபோது, கம்பராமாயணக் கவிதைகள் எவ்வளவு எளிமையானவை என்று எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இராவணன் திராவிடன் என்றும், இராமன் ஆரியன் என்றும் பேசப்பட்ட நாளில், இராமன்தான் தென்னிந்திய பழங்குடிகளின் நண்பன் என்றும், குகனையும் சுக்ரீவனையும் தனது சகோதரனாக ஏற்றுக்கொண்டவன் என்றும் மக்களிடம் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கம்பராமாயணம் வெறும் காமரசம் அல்ல, "இந்த இப் பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன்' என்று ஆணுக்கும் கற்பு நெறி சொன்ன காவியம் என்று சொல்லவேண்டிய அவசியம் நேர்ந்தது.1939-ஆம் ஆண்டு கம்பன் திருவிழாவைத் தொடங்கி வைத்து கம்பனையும் கம்ப ராமாயணத்தையும் புகழ்ந்து மக்களிடம் அதைக் கொண்டு சேர்க்கும் பணியைத் தொடங்கினார், கம்பன் அடிப்பொடி என்றே தன் பெயரை மாற்றிக் கொண்ட தமிழறிஞர் சா. கணேசன். ரசிகமணி டி.கே.சி. தலைமை ஏற்ற முதல் திருநாளில் அறிஞர் பலர் பங்கேற்றனர். அன்று தொடங்கி, கடந்த 71 ஆண்டுகளாக இவ்விழாவில் பங்கேற்காத தமிழ் அறிஞர்களே இல்லை. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், வெ. சாமிநாத சர்மா, விஞ்ஞானி கே.எஸ். கிருஷ்ணன், பி.ஸ்ரீ. ஆச்சார்யா, க.கு. கோதண்டராமக் கவுண்டர், நீதிபதி மு.மு. இஸ்மாயில், நீதிபதி எஸ். மகராஜன், தனிநாயக அடிகள், கா. நயினார் முகமது, அ.ச.ஞா., கி.வா.ஜ., தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், சே.ச., ஏ.சி. பால் நாடார், ஆல்பர்ட் பிராங்க்ளின், மு.வ., கண்ணதாசன், மு. ராகவ அய்யங்கார், கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார், ஏ.என். சிவராமன், வே.மி. சம்மனசு, சாரணபாஸ்கரன், வ.சுப.மா., வள்ளல் அழகப்பர், எஸ். வையாபுரிப்பிள்ளை, ராய.சொ., அ.சீ.ரா., சொ. முருகப்பா, வாலி, மு. கருணாநிதி என்று பெரும் அறிஞர் பட்டாளமே கம்பன் புகழ் பாடியிருக்கிறார்கள். கம்பன் பிறந்த நாள் நமக்குத் தெரியாது. ஆனால், அவர் கவிச்சக்கரவர்த்தி யாகப் பூவுலகில் அரங்கேறிய நாளான பங்குனி அத்தத்தை தனிப் பாடல் ஒன்றின் துணையால் நிறுவி, அத்திருநாளில் நாட்டரசன்கோட்டையில் விழா எடுத்து, அதற்கு முந்தைய மூன்று நாள்களும் காரைக்குடியில் விழா எடுத்து வருகிறது கம்பன் கழகம்.1939 முதல் 1982 வரை 43 ஆண்டுகள் கம்பன் திருநாளைக் கொண்டாடிய பெருமைக்குரியவர் கம்பன் அடிப்பொடி ஒருவரே. அவருக்குப் பிறகும் தொடர்ந்து இவ்விழா நடைபெற்று வருகிறது. மேலும் அவர்களது சேவை விரிந்துள்ளது.தமிழ்நாட்டில் எங்கே எந்த ஊரில் கம்பன் கழகம் தொடங்கப்பட்டாலும், தாய்வீட்டுச் சீராட்டுகளாக கம்பன், தமிழ்த்தாய் படங்களுடன் கம்பராமாயணப் புத்தகமும் அடையாள அன்பளிப்பாக ரூ.101 பணமும் தருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் உள்ள கம்பன் கழக நிர்வாகிகளும் உலகெங்கிலும் உள்ள கம்பனின் ரசிகர்களும் தாய்க் கழகமாம் காரைக்குடி கம்பன் விழாவுக்கு ஆண்டுதோறும் தவறாமல் வந்து விடுகிறார்கள்.காரைக்குடி கம்பன் விழாவுக்கு வரும் அன்பர்களையும் பிற கம்பன் கழக நிர்வாகிகளை உறவுகளை அழைத்துவருவதைப் போல, ரயில்நிலையம் பஸ் நிலையங்களிலிருந்து தனி வாகனத்தில் அழைத்து வந்து, இங்கே நான்கு நாள்களும் இலவசமாக தங்குதற்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்கிறார்கள். கம்பனின் புகழோடு, செட்டிநாட்டு விருந்தோம்பல் என்றால் என்ன என்பதையும் புரிய வைத்துவிடுகிறார்கள். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படுகின்றன. கம்பன் விழாவில் நிகழ்ச்சிகளின் இடையே ஓய்வு கிடைக்கும்போது பிள்ளையார்பட்டி, குன்றக்குடி ஆகிய இடங்களுக்கும் அன்பர்களை அழைத்துச் செல்கிறார்கள்.மொத்தச் செலவுகளில் ஒரு பகுதியை ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் நினைவு அறக்கட்டளை ஏற்கிறது. மீதிச் செலவுகளை கம்பன் அறநிலை ஏற்றுக்கொள்கிறது என்கிறார் கம்பன் கழகச் செயலாளர் பழ. பழனியப்பன்.இந்த நான்கு நாள் விழாவில் கம்பனின் முழு ஆளுமையையும் உணரச் செய்து விடுகிறார்கள். கம்பனின் கவியைப் பருக நினைப்பவர் அனைவரும் வரும் இடம் காரைக்குடி கம்பன் கழகம் என்பதை ஒவ்வொரு ஆண்டும் நிரூபித்து வருகின்றனர்.
கருத்துக்கள்

கம்பரைப் போற்றுபவர்கள் ஒற்றுமை இலக்கியம் படைத்த இளங்கோவடிகளையும் போற்ற வேண்டும். அப்பொழுதுதான் குறிப்பிட்ட வகுப்பாரும் ஆரியரும் போற்றும் கம்பரை அனைவரும் போற்றுவார்கள். கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம்! இளங்கோ அடிகளார் புகழ் பாடித் தமிழ் மானம் காப்போம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/28/2010 5:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக