பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும், அரசியல் கட்சித் தலைவர்களைத் தவிர, யாருக்குமே இதில் ஆர்வம் இல்லை. தேர்தல் முடிந்தவுடன் அந்தத் தொகுதி மக்கள் அடைந்த நிம்மதிக்கு அளவே கிடையாது. அந்த அளவுக்கு அவர்கள் மிகப்பெரும் மனஇறுக்கத்திலும், பதற்றத்திலும் இருக்க நேரிட்டது. தேர்தல் அறிவித்த உடனே இத்தொகுதிக்குள் கட்சிகள் புகுந்து செயல்படத் தொடங்கிவிட்டன. தகராறு, அடிதடி, சாதிஉணர்வு, பணபேரம் என கட்சித் தொண்டர்கள் களத்தில் இறங்கினர். இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல. இந்தப் புகார்களுக்கு முதல்வர் கருணாநிதியே கோபமாகப் பதில் கொடுத்திருக்கிறார். ""திமுக பணத்தை வாரி இறைத்து வெற்றி பெறப் பார்க்கிறது என்று சொல்கிறார்கள். இவர்கள் மட்டும் என்ன, பணம் செலவழிக்காமல், பிச்சையெடுத்தா வாக்கு கேட்கிறார்கள்? தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள செலவை நாங்களும் செய்கிறோம். அவர்களும் செய்கிறார்கள்'' என்ற முதல்வரின் கோபப் பேச்சிலிருந்தே இங்கே அனைத்துக் கட்சிகளும் எப்படித் தேர்தல் ஆணையம் நிர்ணயித்த செலவைச் செய்துள்ளன என்பதை யூகித்துக் கொள்ள முடியும்.இது அரசியல் கட்சிகளின் பிரச்னை. ஆனால் இந்தத் தேர்தலில் மக்கள் எதிர்கொண்ட பிரச்னைகளைப் பார்க்கும்போது, இடைத்தேர்தலுக்குத் தனியான நிபந்தனைகளை, புதிய கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் புகுத்த வேண்டிய அவசியம் இன்றைய மக்களாட்சித் தத்துவத்தில் நேர்ந்திருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக அத்தொகுதி மக்கள் அனுபவித்த ஜனநாயக அவஸ்தை சொல்லி மாளாது.திமுக சார்பில் ஓர் அமைச்சர் அத்தொகுதிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். பாமக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் கட்சி நிறுவனரும் அங்கேயே பெரும்பகுதி நாள்கள் தங்குகிறார்கள். முதல்வர், துணை முதல்வர், முன்னாள் முதல்வர் எல்லோரும் தொகுதியில் பிரசாரம் செய்கிறார்கள். பொறுப்பில் இருக்கும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மட்டுமன்றி மேலும் இரண்டு காவல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் பொறுப்பில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். எங்கு பார்த்தாலும் காக்கிச் சட்டைகள். போதாதற்கு துணை ராணுவம். ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், அதிகாரிகள் இரவு பகலாக பென்னாகரம் பென்னாகரம் என்று பிதற்றும் அளவுக்கு சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். கடைசி இரு நாள்களும் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவே அங்கு வந்து தங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இத்தொகுதியில் செலவழிக்கப்பட்ட மின்சாரம், வீணாக்கப்பட்ட பெட்ரோல், வேறு எந்தப் பணியிலும் ஈடுபடாமல் இதற்காகவே அரசு அதிகாரிகள் சுற்றிக்கொண்டிருந்ததால் ஏற்பட்ட அலுவலகப் பணி இழப்பு நாள்கள், காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட பயணப்படி மற்றும் உணவுப்படிகள், மக்களுக்கு ஏற்பட்ட இன்னல் எல்லாவற்றையும் கணக்கிட்டுப் பார்த்தால், அரசுக்கு இந்த இடைத்தேர்தலால் இழப்புதான் அதிகமே தவிர, துளியும் பயன் கிடையாது. அரசுப் பணம் கோடிகோடியாய் கண்ணுக்குத் தெரியாமல் செலவாகியிருக்கிறது. மது விற்பனையில் வேண்டுமானால் அரசுக்குக் கொஞ்சம் கூடுதல் வருவாய் அத்தொகுதியில் கிடைத்திருக்கக்கூடும். இவையெல்லாம் போதாதென்று, தேர்தலுக்கு முந்தைய நாளே பென்னாகரம் தொகுதியின் அனைத்து சாலைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. குடும்ப அட்டை, அடையாள அட்டை இல்லாத மனிதர்களைத் தொகுதிக்கு உள்ளேயே அனுமதிக்கவில்லை. கணவன் மட்டும் அடையாள அட்டை வைத்திருந்து, மனைவிக்கு இல்லாததால் ஊருக்கு வெளியே காத்திருந்த சம்பவங்களும் நடந்தன. முன்னாள் இரவே, தேர்தல் ஆணையத்தின் அடையாள அட்டை பெற்றிராத பத்திரிகையாளர்களும் ஊடகத்தினரும் அவர்கள் தங்குமிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஏறக்குறைய ஒருநாள் முழுவதும் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட தொகுதியாக இருந்தது பென்னாகரம்.இருப்பினும், ஆயிரக்கணக்கில் வேட்டி, சேலை ஏற்றி வந்த லாரியைப் பிடித்து காவல்நிலையத்தில் வைத்தார்களே, அது யாருடையது? அதற்கு எந்தக் கட்சி காரணம்? பென்னாகரம் அதிமுக அலுவலகத்தில் முற்றுகையிட்டு சோதனை நடத்த முயன்று, ஆட்சியரின் கடிதத்துடன் வந்தால் அனுமதிப்போம் என்று அதிமுக பூட்டிச் சென்றதே! ஏன் அதிகாரிகள் அங்கே போனார்கள், ஏன் சோதனையிடாமல் வந்தார்கள்? சில இடங்களில் தடியடி நடத்தப்பட்டதே எதற்காக? சில கிராமங்களில் இலவச டிவிக்களை உடைத்தவர்கள் யார்? இந்தக் கேள்விகள் (வழக்குகளும்கூட) அனைத்துமே வரும் 30-ம் தேதி வெற்றி வாகையில் அமுங்கிப்போகும்.பென்னாகரம் தொகுதி மக்கள் மனதளவில் இடைத்தேர்தல் ஒவ்வாமை நோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள். பணம் வாங்கிப் பட்ட துன்பம் என்றால் அது இடைத்தேர்தலால் வந்த துன்பமாகத்தான் இருக்கும். இனி வெற்றிக்காக கட்சிகள் தங்கள் தொகுதிக்கு வந்தாலும்கூட, வெற்றியை தமிழ்நாட்டுக்குச் சொல்லுங்கள். இங்கே ஊருக்கு வந்துவிடாதீர்கள் என்று சொல்லும் அளவுக்குத் துன்பப்பட்டு விட்டார்கள். இடைத்தேர்தல்கள் பற்றிய மறுபரிசீலனையும், மக்களாட்சித் தத்துவம் செயல்படும் விதம் பற்றிய மறுசிந்தனையும் காலத்தின் கட்டாயம். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடுமோ என்று தோன்றுகிறது. அரசியல் கட்சிகள் சுயபரிசோதனையில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது என்பதை ஏன் உணர மறுக்கின்றன?
By Ilakkuvanar Thiruvalluvan
3/29/2010 3:28:00 AM
By K.Sugavanam
3/29/2010 1:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்