இலங்கையில் நடந்து முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படும் போர், இரண்டு நாடுகளுக்கிடையில் நடந்த போர் அல்ல. முழுக்குடியுரிமை பெற்ற தமிழ்மொழி பேசும் மக்களுக்கு எதிராக, பல நாட்டுப் படை, போர்க்கருவிகள், அரசியல், நிதியுதவியுடன், அரசு அதிகாரத்தை கையில் வைத்துள்ள இலங்கை அரசு நடத்திய கொடூரமான போர் என்பதை - மீண்டும் நினைவுறுத்தும் அவசியம் எழுந்துள்ளது. 2009-மே மாதத்தில் தமிழ்ப் போராளிகளை முற்றாக அழித்து ஒழித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அதன் மகிழ்ச்சிக்காக விழாவையும் கொண்டாடிக் கொண்டது. இந்திய அரசும் இதைப் பாராட்டி, போரினால் ஏற்பட்ட சேதங்களை ஈடுசெய்து கொள்ள நிதியுதவி செய்வதாக அறிவித்தது. தொடர்ந்தும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சித்திரவதைக் கூடங்களில் சிக்குண்டு கிடக்கிறார்கள். இந்தக் காலத்தில்தான், தமிழக முதல்வர் கருணாநிதி, நம் மெüனம் யாருக்குத் தெரியப் போகிறது என்ற தலைப்பிட்டு, கட்டுரையை எழுதி வெளியிட்டிருந்தார். அதில் ""நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை'' என்று எழுதியுள்ளார். நானும் அவரிடம் குற்றம் காணவோ, அவர் மீது குறை கூறவோ இதை இங்கு குறிப்பிடவில்லை. ஆனாலும் இதனை ஆராய்ந்து கவனிக்க வேண்டிய அவசியம் நமக்கு எழுந்துள்ளது.÷தமிழர்களின் உயர்வுக்காகப் பாடுபட வேண்டியவர்கள் தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக் கொண்டு போய்விட்டார்களே, என்ற ஆதங்கத்தில்தான் எழுதுகிறேன். ""வாழவேண்டிய ஆயிரக்கணக்கான இளந்தளிர்கள் வாடி வதங்கி விட்டார்களே என்ற வேதனையில் எழுதுகிறேன்'' என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாகக் கணிக்காத காரணத்தால், நம்முடைய தமிழ்மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு ஆளாகித் தங்கள் உயிரை இழக்க நேரிட்டது? ரணில் கூறியிருப்பதைக் கூர்ந்து, விடுதலைப்புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காதது தான் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் கருணாநிதி எழுதியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் மட்டும் நடந்த போராக மட்டும் கருணாநிதி இதைக் கூறுகிறார். இந்தியப் பேரரசும் இலங்கைப் போரில் பங்கெடுத்தது. இந்த உண்மையை யாராலும் மறைக்க முடியுமா? தமிழக முதல்வர் இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்காக 1956 முதல் ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து போராடியதையும் பதிவு செய்து, அன்று முதல் இன்று வரை தனது கட்சி நடத்திய போராட்டங்கள், சட்டமன்றப் பதவிகளைத் துறந்தது, இருமுறை ஆட்சியை இழந்தது, தி.மு.க திரட்டிய நிதி, அது மதிக்கப்படாதது, மதுரையில் பழ.நெடுமாறனால் கூட்டப்பட்ட டெசோ மாநாடு, இந்தியா திரும்பிய அமைதிப்படையை வரவேற்க மறுத்தது என நீண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளார். ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வந்த போதுகூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு ரணில் விக்கிரமசிங்க தந்த பேட்டியையும் ஆதாரம் காட்டியுள்ளார். இதற்குப் பின் இவர் குறிப்பிட்டுச் சொல்வதுதான் மிகவும் முக்கியமானதாகும். என்னையும், தம்பி மாறனையும் 1989-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி தில்லிக்கு அழைத்து - விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பற்றியும், ஈழப்பிரச்னை குறித்தும், இரண்டு நாள் உரையாடி - அது பற்றிய விவரங்களை சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தமிழ்நாடு மாளிகையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நட்வர்சிங் மூலமாக எங்களுக்குத் தெரிவித்து - நீங்களும், மாறனும், வைகோவும் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு, பிரபாகரனுடன் இந்தப் பிரச்னை குறித்து விரிவாகப் பேசுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் அதற்காக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். இலங்கையில் நீங்கள் அவர்களைச் சந்திக்கவோ, அல்லது அவர்கள் நீங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு வந்து சந்திக்கவோ தேவையான ஏற்பாடுகளை இங்கிருந்து செய்து தருகிறேன்.அதிகபட்சம் அவர்களது கோரிக்கை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் - இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன். என்று கூறி உறுதியளித்த அந்த இளந்தலைவர் ராஜீவ் காந்தி, இந்திய மண்ணில், அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். இதனால், ஈழ விடுதலைப் போராட்டத்தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று என்றும் எழுதியுள்ளார். அந்தப் படுகொலைக்குப் பின்னர் பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைவித்தால் சங்காரம் நிஜம் என்று சங்கே முழங்கு என பொங்கியெழுந்த ஆதரவு வெள்ளம் வற்றிய ஓடையாகியது என்பதும் உண்மை தான்.நம்முடைய கேள்வி என்னவென்றால் இன்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ள இந்த முக்கியத் தகவல்கள், இதற்கு முன்னர், இவரால் தமிழக மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டதா என்பதுதான். பிரதமர் ராஜீவ் காந்தி, கருணாநிதியுடனும் முரசொலி மாறனுடனும் தில்லியில், பேசியது 1989-ம் ஆண்டில். ù காலையுண்டது 1991 மே 21-ம் நாளன்று. கொல்லப்பட்ட போது இவர் முன்னாள் பிரதமர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மட்டும்தான். 1989-க்கும் 1991,மே மாதத்துக்கும் இடையிலான காலத்தில், ராஜீவ் காந்தி கேட்டுக் கொண்டபடி, கருணாநிதி பிரபாகரனைச் சந்தித்தாரா? ராஜீவ் காந்தி உறுதியளித்த உதவி பற்றி பிரபாகரனுக்குக் கூறப்பட்டதா? இந்தியப் பேரரசு உதவிக்கரம் நீட்டியதை பிரபாகரன் உதறித் தள்ளினாரா? தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மைச் செய்திகளைக் கூறி விளக்கம் தர வேண்டிய அவசியம் கருணாநிதிக்கு இருக்கிறது.ஏனெனில், 1989 பிப்ரவரியில் தில்லியில் பிரதமர் ராஜீவ் காந்தி, முதல்வர் கருணாநிதியை அழைத்துப் பேசியபோது உடனிருந்தவர் முரசொலி மாறன் மட்டுமே. உறுதிமொழி தந்த ராஜீவ் காந்தியும் இப்போது இல்லை, உடனிருந்து கேட்ட மாறனும் இல்லை. எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூற, ஒரே ஒருவர் மட்டும் தான் உள்ளார். அவர் தான் கருணாநிதி. ராஜீவ் காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர்களாக இருந்த பெரியவர் மூப்பனாரிடமோ, வாழப்பாடி ராமமூர்த்தியிடமோ இந்தப் பணியை ஒப்படைக்காமல், கருணாநிதியை அழைத்துச் சொன்னது ஏன்? இவர் கூறினால் தான் பிரபாகரனும், போராளிகளும் கேட்பார்கள் என்ற நம்பிக்கையில் தான். இந்தப் பணி நிறைவேற்றப்பட்டதா? கிடைத்த பதில் ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டதா? இவை எல்லாம் இதில் தொடரும் கேள்விகள். 1989 முதல் 1991 மே வரை இந்தச் செய்தியைத் தமிழ் மக்களுக்கு ஏன் தெரிவிக்காமல், அதன் பிறகும் 2009 வரை இது குறித்து மெüனமாக இருந்து இன்று முரசொலியில் கடிதம் ஏன் எழுத வேண்டும்? ராஜீவ் காந்தி கருணாநிதியிடம் தந்த வாக்குறுதி, பிரபாகரனை எட்டியதாகவும் தெரியவில்லை. பிரபாகரன், ராஜீவ் காந்தி தந்த வாக்குறுதியை நம்பவும் இல்லை, ஏற்கவும் இல்லை இதில் வேறு சந்தேகம் கலைஞருக்கு இருக்கிறது என்றால், 1991-ல் அமைந்த, தி.மு.க. ஆதரவு வி.பி.சிங் அரசிடம் அதைக் கூறி, ராஜீவ் காந்திக்குப் பாதுகாப்பு ஏற்பாட்டை இவர் செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ராஜீவ் காந்தி படுகொலை தான் நடந்தது. இன்னொரு முக்கிய அரசியல் விளக்கத்தையும் தர வேண்டுகிறேன். 1956 முதல் தந்தை செல்வாவின் குரலோடு சேர்ந்து முழங்கத் தொடங்கிய அந்த இனச்சிக்கல் 2009 வரை தீர்க்கப்படவே இல்லை. இதற்கு யார் காரணம் விடுதலைப்புலிகள் இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பே இலங்கைத் தமிழ் மக்கள் அகதிகளாகி, புலம் பெயர்ந்து ஓடுவது தொடங்கி விட்டது.இந்திய அரசு, தொடக்க காலத்தில், இலங்கைத் தமிழர்களுக்கு இடம் தந்து உதவியது. இலங்கை அரசைக் கண்டித்தது. தீர்வு காண வற்புறுத்தியது. 1956-ம் ஆண்டிலேயே கருணாநிதி தி.மு.க. வின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். அவர் தான் இன்று ஆட்சிக்கும் தலைவர். கட்சிக்கும் தலைவர். பா.ஜ.க.வுடனும் தி.மு.க. கூட்டாட்சி நடத்தியது. காங்கிரசுடனும் கூட்டாட்சி நடத்துகிறது. கடந்த 15 ஆண்டுகளாக மத்திய கூட்டாட்சியில் பங்கேற்று வருகிறது. தி.மு.க. மத்திய ஆட்சியில் பங்கு பெறாமல் இருந்த போது, காங்கிரஸ் ஆட்சி, இலங்கைத் தமிழர்க்கு ஆதரவு நிலையை எடுத்தது. ஆனால், தி.மு.க. மத்திய மந்திரி சபையில் சேர்ந்த பின்னர், மத்திய காங்கிரஸ் ஆட்சி இலங்கை அரசுக்கு ஆதரவு நிலையையும், போராளிகளை ஒழிக்க ஆயுத உதவி செய்வதும் ஏன்? இந்தக் கொள்கை நிலை - மாற்றத்துக்குக் காரணம் என்ன?÷விடுதலைப்புலிகள் தந்த ஆலோசனைகளையும், உதவிகளையும் நிராகரித்தனர் எனக் குறை சொல்லப்படுகிறது. இருக்கலாம். ஆனால், தி.மு.க. பங்கேற்றுள்ள மத்திய அரசு, தமிழ்நாட்டிலுள்ள அத்தனை கட்சிகளும் முதலமைச்சர் தலைமையில் கூடி நிறைவேற்றிய தீர்மானம், சட்டசபைத் தீர்மானம். பிரதமரை நேரில் சந்தித்துத் தந்த வேண்டுகோள் - ஆகியவை பயனற்று குப்பைக் கூடை காகிதமாகிவிட்டதே ஏன்? அது பற்றிய சுய விமர்சனம் இல்லாமல், போராளிகள் தவறாக மதிப்பிட்டுச் செயல்பட்டதை மட்டும் பட்டிலிட்டுள்ளது ஏன்? ÷1990 முதல் 1996 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததாலும், 1991 மே மாதம் 21-ம் நாளன்று ராஜீவ் காந்தி வெடிகுண்டுக்கு ஆளான போது அதே இடத்தில் நானும் ரத்தம் சிந்தியவன் என்பதாலும், தமிழ் மக்களை மிகவும் நேசித்தவர், அவர்களது உரிமைகளை ஈட்டித்தர உறுதியுடன் முயன்றவர் ராஜீவ் காந்தி என்பதைத் தெரிந்தவன் நான். அவர் மீது சுமத்தப்பட்டுவரும் களங்கத்தைத் துடைக்க வேண்டியோர் துடைக்கவில்லை. அவருடைய இந்த உள்ளுணர்வைத் தெரிவிக்க விரும்புகிறேன். ÷நானறிந்த வரையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களுக்கு எல்லாம் பல காரணங்கள் உண்டு. தமிழகத்தின் அரசியல் கட்சிகள் குழப்பியதும் காரணமாகும். ÷ஆனால் இலங்கைத் தமிழர்கள் தன்னம்பிக்கையை இன்னமும் இழக்கவில்லை, இலங்கைத் தமிழரின் அரசியல் மனித உரிமைகளை மீட்டு நிலை நாட்டப்பட வேண்டுமெனில், இலங்கை ஒரு ஜனநாயக நாடு அல்ல என்பதை நாம் உணர வேண்டும். அது நட்புக்குரிய நாடு அல்ல என்பதை இந்தியா உணர வேண்டும்.இலங்கைத் தமிழர்களே அவர்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். இறுதி அரசியல் தீர்வு இலங்கைத் தமிழர்களால் ஏற்கப்படதக்கதாக அமைய வேண்டும். இதைத் தவிர்த்து தமிழக அரசியலுக்காக இலங்கைத் தமிழர்களின் உயிரைப் பணயம் வைத்து விளையாடுவ தை நிறுத்திக் கொள்ள வேண்டும். இறுதியில் அறம் வெல்லும், நம்புவோம்.
கருத்துக்கள்
காலங்காழ்த்தி இக் கட்டுரை வந்தாலும் உண்மை உணர்வை எதிரொலிக்கின்றது. அறம் வெல்லும் என்று கூறுகிறோம். வாழ்க்கையிலும் கதையிலும் அறம் இறுதியாய் வெல்லும் போது அதற்காகக் கொடுக்கப்படும் விலை மிகுதியாக உள்ளது. இலங்கையில் தமிழர் நிலம் சுருங்கிக் கொண்டே போகின்றது. தமிழர்கள் மடிந்து கொண்டே போய் அவர்கள் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே போகின்றது. கை கால்கள் வாய் கட்டப்பட்டு அறம் முடங்கிய நிலையில் உள்ளது. தமிழக அரசியல்வாதிகளை நம்பாமல்,இந்தியக் கண்டம் முழுவதும் அடுத்து உலகம் முழுவதும் தமிழர்களின் தாயகமாம் தமிழ் ஈழம் மீட்கப்பட்டு ஏற்கப்படுவதன் கட்டாயத் தேவையையும் மனித இனம் தோன்றிய பகுதியில் முதல் மனித இனமான தமிழினம் அழிவதை நிறுத்த வேண்டியதன் இன்றியமையாமையையும் உணர்த்தி பரப்புரை மேற்கொண்டு வெற்றி காண வேண்டும்.
வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக உறவு!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan 4/2/2010 5:07:00 AM
அறமற்ற அரவம் போன்ற தலைவர்களின் கைகளிலே தமிழினம் சிக்கிச் சீரழிகிறது. ஆனால் அறம் என்றோ ஒருநாள் வெல்லும்.