Last Updated :
மதுரை, மார்ச் 29: தமிழகத்தில் 1992 முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 'தொட்டில் குழந்தைகள் திட்டத்தில்' சேர்க்கப்பட்ட குழந்தைகளின் கதி என்ன என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம் கேட்டு 40 நாள்களுக்கு மேலாகியும், சமூக நலத்துறையினரிடமிருந்து பதில் இல்லை.மதுரை, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெண் சிசுக் கொலை அதிக அளவில் நடந்தது தெரியவந்தது. பல்வேறு சமூகச் சூழலால் பெண் சிசுக் கொலை நடந்ததால், அதைத் தடுக்கும் வகையில் 1992-ல் அதிமுக ஆட்சியில் 'தொட்டில் குழந்தைகள் திட்டம்' செயல்படுத்தப்பட்டது.பிறந்து ஒரு நாள் முதல் 30 நாள்களுக்குள்ளான குழந்தைகளை அரசுத் தொட்டிலில் விட்டுச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் அரசுத் தொட்டில்கள் ஏற்படுத்தப்பட்டன.தருமபுரி மாவட்டத்தில் 40 இடங்களிலும், மதுரை-30, திண்டுக்கல்-30, தேனி-15, நாமக்கல்-30, ஈரோடு-43 என்ற எண்ணிக்கையிலும் அரசுத் தொட்டில்கள் அமைக்கப்பட்டன.இத் தொட்டில்களில் விட்டுச் செல்லும் குழந்தைகளை சமூகநலத் துறை அதிகாரிகள் பராமரித்து, பின் அரசு அனுமதி பெற்ற தொண்டு நிறுவனக் காப்பகங்களில் ஒப்படைக்கவேண்டும்.தமிழகத்தில் 22 தொண்டு நிறுவனங்கள் அரசுத் தொட்டில் குழந்தைகளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளன. இவை விதிகளுக்கு உள்பட்டு குழந்தைகளை யாருக்கும் தத்து கொடுக்கலாம்.கடந்த 1992 முதல் 1996 வரையில் அனைத்து மாவட்டங்களிலும் 136 குழந்தைகள் அரசுத் தொட்டிலில் விட்டுச் செல்லப்பட்டுள்ளன. இதில் 39 குழந்தைகள் இறந்துள்ளன. இவர்களில் பெரும்பாலானவை பெண் குழந்தைகள் என்று தெரிகிறது.ஆனால், 1997 முதல் 2001 வரையில் 10 குழந்தைகளே அரசுத் தொட்டிலில் விட்டுச் செல்லப்பட்டுள்ளதாக சமூகநலத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.கடந்த 2001 முதல் 2007 வரையில் 2659 குழந்தைகள் அரசுத் தொட்டிலுக்கு வந்துள்ளன. இதில் 143 குழந்தைகள் இறந்துள்ளதாக கணக்கெடுப்பில் கூறப்படுகிறது.கடந்த 2001 முதல் 2007 வரையில் மதுரை மாவட்டத்தில் 391 தொட்டில் குழந்தைகளில் 67 பெண், 15 ஆண் குழந்தைகள் இறந்துள்ளன.இதே ஆண்டில் நாமக்கல்லில் 24 பெண் குழந்தைகளில் நான்கும், திண்டுக்கல்லில் 2, ஈரோட்டில் 2 பெண், 1 ஆண், சேலத்தில் 1992 முதல் 2008 வரை 44 பெண், 3 ஆண், தருமபுரியில் 3 பெண், 2 ஆண் என்ற கணக்கில் தொட்டில் குழந்தைகள் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இக்குழந்தைகள் எப்படி, எதனால் இறந்தன? என்ற கேள்விக்கு விடை இல்லை.கடந்த 2008 முதல் 2 ஆண்டுகளாக தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் விட்டுச் செல்லப்பட்ட குழந்தைகள் குறித்த கணக்கு சரிவர பதிவு செய்யப்படவில்லை என்றும், பல குழந்தைகள் மீண்டும் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.மேலும், இதுவரை 734 பெண், 44 ஆண் குழந்தைகள் பெற்றோரால் விட்டுச் செல்லப்பட்ட நிலையிலும், 274 பெண், 43 ஆண் குழந்தைகள் சாலையோரங்களில் மீட்கப்பட்ட நிலையிலும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 121 பெண், 22 ஆண் குழந்தைகள் இறந்துள்ளனர்.திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் அரசு பதிவுபெற்ற காப்பகம் மூலம் தனியாருக்குத் தத்து கொடுக்கப்பட்டுள்ளன.அந்தக் குழந்தைகள் இப்போது எந்த நிலையில், எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் அரசுத் துறையான சமூகநலத் துறை வசம் இல்லை எனக் கூறப்படுகிறது. குழந்தைகளைத் தத்து கொடுப்பதற்கு உள்ள கடுமையான விதிமுறைகள் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் பின்பற்றப்பட்டதா எனவும் தெரியவில்லை.அந்தக் குழந்தைகளில் பலர் இப்போது திருமண வயதை எட்டியிருப்பார்கள். அப்படி எனில் அவர்களது வாழ்க்கை எப்படி உள்ளது என்ற கேள்விக்கும் விடை தெரியவில்லை.பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசாரத்தின் மையக் குழு மாநில உறுப்பினர் என்.ஜீவா கூறுகையில், 'அரசுத் தொட்டில் குழந்தைகள் 1992 முதல் தத்து கொடுக்கப்பட்டுள்ளனர். இப்போது அவர்களில் பலர் திருமண வயதை எட்டியிருப்பர். எனவே அவர்கள் குறித்த விவரத்தை வெளியிடுவது அவசியம். ஆனால் குழந்தைகள் நிலை குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அறிய கடந்த ஜனவரியில் விண்ணப்பித்தும் இதுவரை பதில் இல்லை. எனவே மேல்முறையீடுக்கு சென்றுள்ளோம் என்றார்.பெற்றவர்களால் கைவிடப்பட்ட நிலையில் தொட்டில் குழந்தைகளுக்கு தாய், தந்தை ஸ்தானத்தில் இருப்பது அரசுதான்.பெற்றவர்கள் இருக்கும்போதே பல பெண்களுக்கு வரதட்சிணை உள்ளிட்ட பிரச்னைகள் எழுவது தவிர்க்கமுடியாததாக உள்ளது. இந்நிலையில் ஆதரவற்ற தொட்டில் குழந்தைகள் எந்த நிலையில் வாழ்வை எதிர்கொள்கின்றனர் என்பதை அரசு உறுதிப்படுத்துவது அவசியமல்லவா? ஏன் பதிலில்லை?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக