ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் செட்டியக்குடி நகை தொழிலாளி மணிகண்டன், கின்னஸ் சாதனைக்காக, புத்தக தலைப்பை 330 வார்த்தைகளில் அமைத்துள்ளார்.நகை தொழிலாளியான இவர், தனது தொழிலோடு கின்னஸ் சாதனை நிகழ்ச்சியிலும், தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். 2007ல் 24 மி.மீ., அகலம், நீளத்தில் செஸ் போர்டை வடிவமைத்து கின்னஸ் சாதனை படைத்தார்.
மேலும், 163 கிராம் வெள்ளியில் மின் விசிறி, 110 கிராம் வெள்ளியில் மோட்டார் பைக், நான்கு கிராம் தங்கத்தில் மோதிர வாட்ச், 8 மி.மீ., நீள, அகலத்தில் திருக்குறள் புத்தகம் போன்றவற்றை வடிவமைத்து, லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.கடந்த 2007ல் இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் 1,433 எழுத்துக்களில், 290 வார்த்தைகளில் புத்தக தலைப்பை வைத்திருந்தது கின்னஸ் சாதனையாக உள்ளது. இவர், தற்போது நடிகர் கமலஹாசனின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகத்திற்கு, 1,458 எழுத்துக்களில் 330 வார்த்தைகளில் தலைப்பு வைத்துள்ளார்.
மணிகண்டன் கூறுகையில், 'ஒரு கின்னஸ் சாதனையும், நான்கு லிம்கா சாதனையையும் செய்துள்ளேன். தற்போது, இந்த நீளமான புத்தக தலைப்பை, கடந்த ஆறு மாதமாக முயற்சி செய்து முடித்துள்ளேன். இதை, கின்னஸ் சாதனைக்கு அனுப்பி வைக்க உள்ளேன்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக