செவ்வாய், 30 மார்ச், 2010

செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கு தனி அரங்கம்: தமிழக முதல்வருக்கு நன்றி



மதுரை,மார்ச் 29:​கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கு தனி அரங்கம் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ள தமிழக முதல்வருக்கு காரைக்குடி கம்பன் கழகம் நன்றியும்,​​ பாராட்டும் தெரிவித்துள்ளது.​ காரைக்குடியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 72-வது ஆண்டு கம்பன் திருநாள் தொடக்க விழாவில்,​​ கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ​ கம்பனுக்கு தனி அரங்கு அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.இந்த வேண்டுகோளை தமிழக முதல்வர் ஏற்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கம்பனுக்கு என தனி அரங்கம் அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.இந்தச் செய்தியை காரைக்குடியில் நடைபெற்ற கம்பன் திருநாளின் 3-ம் நாள் நிகழ்ச்சியில் ​(மார்ச் 29) கம்பன் கழகச் செயலர் பழ.பழனியப்பன் தெரிவித்தார்.அத்துடன்,​​ மாநாட்டில் கம்பனுக்கு தனி அரங்கம் அமைக்க உறுதியளித்த தமிழக முதல்வருக்கு பழ.​ பழனியப்பன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.இத்தகவலைக் கேட்டவுடன்,​​ விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அறிஞர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கருத்துக்கள்

அப்படிப்போடு அரிவாளை! கம்பரின் அன்பர்கள் கோரிக்கை கருத்தரங்க அமர்வுப் பொருண்மைகளில் கம்பர் சேர்க்க வேண்டும் என்பது. பூம்புகார்கள் படைத்த கம்பர் தமிழ்மானச் செம்மல் இளங்கோ அடிகளுக்குத் தனி அமர்வு வைக்காமல் தன் புலமைச் சிறப்பை ஆரிய விதைப்பிற்குப் பயன்படுத்திய கம்பருக்குத் தனி அமர்வு வைத்தால் முறையாகுமா? எனவே, கலைஞ்ர் தனக்கே உரிய சூழ்வினை அறிவுடன் கருத்தரங்கங்கள் நடைபெறும் கூடங்களில் ஒன்றிற்குக் கம்பர் பெயரைச் சூட்டி விட்டார். கம்பர் அன்பர்கள் இதிலேயே நிறைவுகாண வேண்டும். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் எனச் செயல்பட்டுள்ள முதலவர் முத்தமிழறிஞருக்குப் பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/30/2010 2:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக