திங்கள், 22 பிப்ரவரி, 2010

தலையங்கம்:அணைபோட வேண்டுமா?



முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள 5 பேரைக் கொண்ட ஆய்வுக் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதிகள் இடம்பெறத் தேவையில்லை என்று திமுக பொதுக் குழு தீர்மானித்துள்ளது. தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் திமுக இருப்பதால், கூட்டணிக் கட்சிகள் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டா என்ற நிலையில், திமுகவின் இந்த முடிவுதான் தமிழக அரசின் முடிவாக அமையும்.திமுகவின் இந்த முடிவு விரக்தியின் உச்சநிலை. "கிணற்றில் மூழ்கிய விளக்கினைப்போல் செய்யும் முயற்சியெலாம் கெட்டு முடிவதுவும்' ஆன சலிப்பின் அடையாளம்தான், 5 பேர் குழுவில் தமிழகப் பிரதிநிதிகள் பங்கேற்கத் தேவையில்லை என்ற நிலைப்பாடு.இதற்குக் காரணம் முதலாவதாக, பெரியாறு அணையில் 142 அடி உயரம் நீரைத் தேக்கி வைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும், அதைக் கேரள அரசு நிறைவேற்றவில்லை. அதை நிறைவேற்றாமல் தடுக்க தனிச்சட்டம் நிறைவேற்றுகிறது. ஆனால் உச்ச நீதிமன்றம் கண்டிக்கிறது. மத்திய அரசு ஏன் என்றும் கேட்கவில்லை. இரண்டாவதாக, ஏற்கெனவே உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் 7 பேர் கொண்ட குழு, முல்லைப் பெரியாறு அணையை ஆய்வுசெய்து அணை வலுவுடன் இருக்கிறது என்று பரிந்துரைத்துள்ள நிலையில், மீண்டும் அதே உச்ச நீதிமன்றம் இன்னொரு 5 பேர் கொண்ட குழுவை நியமிக்கிறது.இந்நிலையில், இனிமேல் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்த நீதியும் கிடைக்கப்போவதில்லை என்ற எண்ணம் தமிழக முதல்வருக்கு வந்துவிட்டது என்பதால்தான் இந்தத் தீர்மானம் பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த முடிவை தமிழக அரசின் முடிவாக அறிவிக்காமல், திமுக பொதுக்குழு தீர்மானமாக அறிவிக்கக் காரணம் உள்ளது. திமுக அரசுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியும், பாமகவும் தமிழக அரசு இந்தக் குழுவில் பங்குபெற வேண்டும் என்று பிடிவாதம் செய்தால், அவர்களுக்காகத் தமிழக அரசு பிரதிநிதிகளை பங்கேற்கச் செய்யும் வாய்ப்புகளைத் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சிதான் இது.திமுகவின் தனிப்பட்ட கருத்தைப் பதிவு செய்துகொள்வதோடு, மற்ற கட்சிகளுக்காக விட்டுக்கொடுத்துப் போவதற்கும் இந்த தீர்மானம் வழி விடுகிறது. தமிழகத்தின் நதிநீர் பிரச்னைகளில் தமிழகத்துக்கு ஆயிரம் நியாயங்கள் இருந்தாலும் அவை யாவும் நீதிமன்றத் தீர்ப்புகளில் எழுத்தாய் உறைந்துபோனதே தவிர, தமிழகத்துக்குப் பயனுறு நியாயங்களாக மாறவில்லை. காவிரி, பெரியாறு இரு நதிகளின் பிரச்னைகள் தீர்வு காணப்பட்டும் தீர்க்கப்படாமலே தொடர்கின்றன. காவிரிப் பிரச்னையில் பல ஆண்டு காலம் போராடிப் பெற்ற நடுவர் மன்றத் தீர்ப்பைக்கூட தமிழகத்துக்கு அமல்படுத்த யாரும் முன்வரவில்லை.காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை ஏற்க மறுத்து, தண்ணீரைத் தர மறுத்த கர்நாடக அரசை, மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. பெரியாறு அணையின் நீரை 142 அடி உயர்த்த நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும் அதை மீறிய கேரளத்தை உச்ச நீதிமன்றமே கண்டிக்க முடிகிறது, தண்டிக்க முடியவில்லை. மத்திய அரசும் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது. மாநிலத்தில் திமுக, அதிமுக எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அவர்கள் மத்திய கூட்டணி அரசில் பங்கு பெற்றாலும்கூட, தமிழக நதிநீர் பிரச்னைகளில் தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநியாயங்களுக்கெல்லாம் "மதராஸிதானே' என்று புதுதில்லி கண்மூடிக்கொள்வதைத் தடுக்க இயலவில்லை. சில லாபங்களுக்காக சில அவமானங்களைப் பொறுத்துக்கொண்டதன் பின்விளைவுகள் இவை.இப்போதைய பிரச்னை, தமிழகத்தின் பிரதிநிதிகள் இடம்பெறத் தேவையில்லை என்கிற திமுகவின் முடிவு, தமிழக அரசின் முடிவாக மாறுவதால் மட்டும் தீர்ந்துவிடுமா? அல்லது இது உச்ச நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்குமான பதிலடியாக அமையுமா? என்பதைச் சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தற்போது அமைக்கப்பட்டுள்ள 5 பேர் கொண்ட குழு, வெறும் அணையின் பலத்தை மட்டுமல்ல, இன்னொரு அணைக்கான நியாயங்களையும் கலந்து ஆலோசிக்கப் போகிறது. இக்குழுவின் பரிந்துரைக்கு நிச்சயமாக முக்கியத்துவம் தரப்படும்.புதிய அணை கட்டப்படுவது தவிர்க்க முடியாதது என்ற கருத்தாக்கம் உருவானால், அந்த அணையின் பராமரிப்பும், தமிழகத்துக்குக் கிடைக்கும் தண்ணீர் தற்போதைய அளவுக்குக் குறையாமலும் கிடைக்கும்படியாகத் தமிழகத்தின் கருத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பை இந்தக் குழுவில் இடம்பெறாமல் போவதன் மூலம் தமிழகம் இழக்க நேரிடலாம். மேலும் தமிழகத்தின் பிரதிநிதிகள் இல்லை என்ற நிலையில், அவர்கள் எத்தகைய முடிவை எடுத்தார்கள், எதன் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன என்று எதுவுமே தெரியாமல் இருப்பது சரியான முடிவாக அமையாது.பெரியாறு அணைக்கு நிதி கொடுப்பதை பிரிட்டிஷ் அரசு நிறுத்தியபோதும், இங்கிலாந்தில் இருந்த தனது சொத்துகளை விற்று அணை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி குயிக், பெரியாறு அணை நீரின் மூலம் வளம் காணப்போகும் பல கோடி தமிழர்களின் வாழ்க்கையைக் கண் முன் கண்டார். அத்தகைய தொலைநோக்கு உள்ள மாமனிதர்கள் இக்குழுவில் தோன்றி, தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பார்கள் என்பது நிச்சயமில்லை. தமிழகப் பிரதிநிதிகள் மட்டுமே குரல் கொடுத்தாக வேண்டும். விரக்தியின் காரணமாக ஆட்சியை, பதவியை இழக்கலாம், நியாயத்துக்கு குரல் கொடுக்கும் எந்த வாய்ப்பையும் இழந்துவிடக்கூடாது. அணைபோட்டுத் தடுக்கக் கூடாது.
கருத்துகள்

தொடக்கம் துதி பாடுவதுபோல் தோன்றினாலும் முடிவுசரியாகத்தான் உள்ளது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/22/2010 4:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக