Last Updated :
சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தி.மு.க. பொதுக் குழுவில் பங்கேற்ற கனிமொழி எம்.பி. மற்றும் உறுப்பினர்கள்.
சென்னை, பிப்.20: பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதிநீர் பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண மத்திய அரசு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றன.கூட்டத்துக்குப் பின் கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:முல்லைப் பெரியாறு அணை எல்லா வகையிலும் வலுவானது; பலமானது என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் சொல்லி, அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்போது மீண்டும் ஒரு குழுவை நியமித்து, ஆய்வு செய்து, முடிவினை அறிவிப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது. அதனால்தான் தமிழகம் ஐவர் குழுவில் சேர்ந்து கொண்டு, கருத்து தெரிவிப்பது நல்லதல்ல; தேவையல்ல என்று கருதி ஒதுங்கிக் கொண்டிருக்கிறோம்.ஏற்கெனவே உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, கேரள சட்டப்பேரவையில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. எனவே, நாம் ஐவர் குழுவில் பங்கேற்காததால் எவ்வித சட்ட சிக்கலும் ஏற்படாது.ஐவர் குழுவில் நாம் பங்கேற்பதில்லை என்ற முடிவை தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்தவுடன், அதனை எதிர்த்து கர்நாடகம் நீதிமன்றம் சென்றது. எனவே நாங்களும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்ற பிரச்னைகளைப் போலவே இப்போது காவிரி பிரச்னையும் கிடப்பிலே போடப்பட்டிருக்கிறது.முல்லைப் பெரியாறு, காவிரி உள்பட எல்லா மாநிலங்களிலும் உள்ள நதிநீர் பிரச்னைகளிலும் மத்திய அரசு தலையிட வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள், அதிகாரிகளை அழைத்து மத்திய அரசு விவாதிக்க வேண்டும்.பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம், இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், மாநிலங்களுக்கிடையே ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக கடந்த 17}ம் தேதி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.மத்திய அரசுடன் கருத்து மாறுபாடா?: பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 29 தீர்மானங்களில் 16 தீர்மானங்கள் மத்திய அரசை வலியுறுத்தியே இருக்கின்றன. மத்திய அரசுக்கும், எங்களுக்கும் ஏதாவது கருத்து மாறுபாடா என்று கேட்கிறீர்கள். இவை அனைத்தும் மத்திய அரசை வேண்டிக் கொள்ளும் தீர்மானங்கள்தான்.மாநில சுயாட்சி குறித்து நாங்கள் இப்போது திடீரென தீர்மானம் போடவில்லை. அண்ணா காலத்திலிருந்து கேட்டு வருகிறோம்.பக்கத்து வீட்டு விருந்தினர்கள்: தி.மு.க. பொதுக்குழுவிலே சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டது, எங்கள் வீட்டு திருமணத்தில், திடீரென பக்கத்து வீட்டு விருந்தினர்கள் கலந்து கொண்டதைப் போன்றது. இதேபோல் மேலும் பல விருந்தினர்கள் வருவார்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்கிறீர்கள். உங்கள் ஆசை நிறைவேறலாம்.விருந்தினர்களாக வந்தவர்கள், வீட்டுக்காரர்களாக ஆவதற்கு வாய்ப்புண்டா என்றால், இந்த நாட்டின் கதியே அப்படித்தான் உள்ளது. விருந்தினர்கள், வீட்டுக்காரர்களாக ஆவது இந்த நாட்டின் தலையெழுத்து.தி.மு.க. அரசை விமர்சிக்க வேண்டுமென்று அண்மையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர் பேசியிருக்கிறார். இப்படி பேசுவது சரியா என்றால், விமர்சிப்பது தவறு அல்ல. விமர்சனம் பாராட்டுகின்ற விமர்சனமாகவும் இருக்கலாம்.அழகிரி பேரவை: அழகிரி பேரவை கூடாது என்று ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி இப்போது சிலர் பதாகைகள் வைத்துள்ளனர். ஏற்கெனவே முரசொலி மாறன் பெயரில் பேரவை அமைக்கப்பட்ட போது, அது தடை செய்யப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கோரினார்கள். இப்போது பேரவைகள் என்ற பெயரால் தமிழகத்தில் பிளவை ஏற்படுத்த சில முயற்சிகள், சில தூண்டுதல்கள் நடைபெறுகின்றன. அதற்கும் அழகிரிக்கும் தொடர்பு இல்லை.உர விலை: உரங்களின் விலையை உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு இறுதியாக என்ன முடிவெடுத்திருக்கிறது என்ற விவரம் கிடைக்கவில்லை. அந்த முடிவு விவசாயிகளைப் பாதிக்கக் கூடியதாக இருந்தால், எதிர்ப்பு தெரிவிக்க நான் தயங்க மாட்டேன் என்றார் கருணாநிதி.பொதுக்குழு துளிகள்...தி.மு.க. செயற்குழு காலை 9.30 மணிக்கும், தொடர்ந்து பொதுக்குழு 10.15 மணிக்கும் தொடங்கியது. பொதுக்குழுக் கூட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது.அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகர் எஸ்.வி. சேகர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டதோடு, கூட்டத்திலும் பேசினார். அ.தி.மு.க.-தி.மு.க. பொதுக்குழுக் கூட்டங்களை ஒப்பிட்டுப் பேசிய அவரது பேச்சை, கூட்டத்தினர் கை தட்டி ரசித்தனர்.மேலும், அண்மையில் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோவில்பட்டி ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் ராஜேந்திரன் ஆகியோரும் தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்றனர். அமைச்சர்கள் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கூட்டத்தின் பின் வரிசைகளில் அமர்ந்திருக்க, எஸ்.வி. சேகர், ராஜேந்திரன் ஆகியோர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.கூட்ட மேடையில் முதல்வர் கருணாநிதியுடன், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் க. அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், பரிதி இளம்வழுதி, முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். மேடையின் எதிர்புறம் முதல் வரிசையில் மு.க. அழகிரி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 1,702 பேர் கலந்து கொண்டதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
By Ilakkuvanar Thiruvalluvan
2/21/2010 5:42:00 AM
By Ilakkuvanar Thiruvalluvan
2/21/2010 5:38:00 AM
By அன்பன்
2/21/2010 4:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்