திருநெல்வேலி: நெல்லையில் தமிழ் அறிஞர் கால்டுவெல் வாழ்ந்த வீட்டை, அரசு நினைவு இல்லமாக மாற்ற, அமைச்சர் பரிதிஇளம்வழுதி நேரில் ஆய்வு செய்தார்.இங்கிலாந்தில், பிறந்து கிறிஸ்தவசமயத்தொண்டு புரிவதற்காக, 1838 ல் சென்னைவந்த ராபர்ட் கால்டுவெல், நெல்லை மாவட்டம் இடையன்குடியில் தங்கி, சமயப் பணிகள் ஆற்றி மறைந்தார்.
தமிழ்மொழி கற்று, அதன் இலக்கண, இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற திராவிட மொழிகளையும் கற்று, இம் மொழிகளுக்கிடையில் உள்ள ஒற்றுமைகளை ஆய்வு செய்து, அவர் படைத்த "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் நூல் சிறப்புக்குரியது."திராவிட மொழிகள்' என்னும் சொல்லாக்கத்தை முதன் முதல் உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தார்.
இவ்வாறு, தமிழ் மொழிக்கு பெருமைகளை சேர்த்த பிஷப் கால்டுவெல், இடையன் குடியில் வாழ்ந்த இல்லத்தை, 18 லட்சம் ரூபாய் செலவில் அரசு நினைவு இல்லமாக்க, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அதற்கான பணிகளை மேற்கொள்ள, தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதிஇளம்வழுதி, நேற்று நேரில் ஆய்வு செய்தார்.கால்டுவெல், அவரது மனைவி எலைசா ஆகியோரது கல்லறைகள், அவர் நிறுவிய ஆலயம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
அவருடன், செய்தித்துறை இயக்குனர் காமராஜ், ராதாபுரம் எம்.எல்.ஏ.,அப்பாவு, செய்தித் துறை அதிகாரிகள் இளங்கோ, உல.ரவீந்திரன், இடையன்குடி சேகர குரு மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்அமைச்சர் பரிதி கூறுகையில், பிஷப் கால்டுவெல் நினைவை போற்றும் வகையில், மே 7 ல், அவருக்கு அரசு சார்பில் சிறப்பு தபால் தலை வெளியிட உள்ளதாக, தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக