ஈரோடு, பிப்.21: அஜீத், ரஜினி ஆகியோரின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும், காங். தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன்.கருத்து கூற அனைவருக்கும் உரிமை உண்டு, மிரட்டுவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், பல்வேறு விழாக்களில் பங்கேற்க வேண்டுமென நடிகர்-நடிகையர் மிரட்டப்படுகிறார்கள் என நடிகர் அஜீத் வெளிப்படையாகத் தெரிவித்தார். இதற்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அஜீத், ரஜினி கருத்துகளுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: நடிகர் ரஜினிகாந்தும், அஜீத்தும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர். ஒருவர் சுதந்திரத்திற்கு யாரும் இடையூறாக இருக்கக் கூடாது. அவர்களுடைய கருத்துகளில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.இதற்காக அவர்களை மிரட்டுவதோ, கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிடுவதோ சரியல்ல. தமிழகத்தில் நடமாட முடியாது என்று பயமுறுத்துவதும், தமிழர்களுக்கு எதிரானவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பதும் கூடாது. கருத்து சுதந்திரத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது, தமிழ் கலாசாரத்திற்கு ஏற்புடையதல்ல. வன்முறையில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
வேடிக்கைதான்! கருத்து உரிமைகளுக்கு எதிராகச்சுவரொட்டிகளைக் கிழிக்கும் வன்முறையாளர் பொன்மொழி உதிர்க்கிறார். ஊடகங்களில் பெயர் வேண்டும் என்பதற்காகவே உளறுவதற்காக வெல்லாம் முதன்மை கொடுத்தால் ஏதேனும் உதிர்த்துக் கொண்டுதான் இருப்பார். இல்லையேல் மன நோயாளியாகி விடுவார். (குமுதத்தில் வி.சி.குகநாதன் அருமையாக விளக்கம் தந்துள்ளார். படித்துப் பாருங்கள்) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/22/2010 3:36:00 AM