+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மதுரை : ""தமிழகத்தில் தவறுகளை சுட்டிக்காட்ட ஆளில்லாமல் போய்விட்டது'' என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்.,வக்கீல்கள் பிரிவு சார்பில் மதுரையில் நடந்த வன்முறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கில் பேசினார். வக்கீல் கோபாலன் தலைமை வகித்தார்.
இளங்கோவன் பேசியதாவது: பயங்கரவாதிகளை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அவர்கள், 72 நாட்கள் அவகாசம் கேட்கும் அளவிற்கு வளர்ந்துள்ளனர். இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் படிக்கின்றனர். அவர்களை ஊக்குவிக்காமல், சீர்குலைக்கும் விதமாக, தீய கருத்துக்கள் திணிக்கப்பட்டால் வளர்ச்சி பாதிக்கும். தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு ரேஷன் அரிசி, இலவச "டிவி', அரசு மருத்துவ காப்பீடு போன்ற நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவை முழுமையாக மக்களுக்கு சென்றடைய, அமைதி நிலவ வேண்டும். தமிழகத்தில் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு பயங்கரவாத கருத்துக்களை பரப்புகிறவர்களை அடக்க முடியவில்லையே?
உங்களுக்கு பல்லக்கு தூக்க, கவிதை பாடச் சொல்கிறீர்கள். அதற்கு பலர் உள்ளனர். நானும், காமராஜரும் ஒரே மாதிரி என்கின்றீர்கள். காமராஜர் கடைசிவரை சாமானியனாகத்தான் இருந்தார். ஆனால் பதவிக்கு வரும்வரை சாமானியனாக இருந்தவர்கள், இன்று அப்படி உள்ளனரா? நாங்கள் வெள்ளையர்களையே எதிர்த்தவர்கள். எங்கள் ஆதரவுடன் நடக்கும் ஆட்சி என்பதால், நல்லமுறையில் அது இருக்க வேண்டும் என, தோழமை உணர்வுடன் உணர்த்துகிறேன். அடுத்த தேர்தலில் உங்களை, மக்கள் நிராகரித்துவிடக்கூடாது என்பதற்காக கூறுகிறேன். தமிழகத்தில் தவறுகளை சுட்டிக்காட்ட ஆளில்லாமல் போய்விட்டது. சிலர் ஆறு மாதம் மலைக்குப் போய்விடுகின்றனர்.
மதுரை மேற்கு தொகுதியில் நாங்கள் இல்லையெனில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,வெற்றி பெற்றிருக்க முடியுமா? என சிலர் கூறுகின்றனர். காங்., கூட்டணி இல்லாமல் இதை அவர்களால் பேசியிருக்க முடியுமா? தமிழகத்தில் காங்., ஆட்சிக்கு வரவேண்டும் என நினைப்பதில் என்ன தவறு. எல்லா கூத்துக்களுக்கும் விடிவு உண்டு. தனி மனித சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், பழனிச்சாமி பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக