தனிப்பட்ட சிலர் சட்டம்-ஒழுங்கை கையில் எடுத்துக்கொள்வது என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, செயலிழந்துவிட்ட ஆட்சியாளர்களால் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் கருதுவது; அல்லது ஆட்சியாளர்களின் மறைமுக அனுமதி அவர்களுக்கு இருப்பது. காரணம் எதுவாக இருந்தாலும் அதன் விளைவு சமுதாயத்துக்கு நன்மை பயப்பதாக இருக்காது.மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவமே கருத்து உரிமைதான். நடிகர் அஜீத் குமார் சில உண்மைகளைப் பகிரங்கமாகக் கூறியதன் விளைவு, மிகப்பெரிய சர்ச்சை கிளம்பியிருப்பதுடன், அவருக்கு எதிராக அச்சுறுத்தல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.அஜீத்தின் வீடு தாக்கப்பட்டபோது ஏற்படாத சலசலப்பும் பரபரப்பும் திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கத்தின் கார் நொறுக்கப்பட்டவுடன் ஏற்பட்டிருப்பதுடன், ஜாதிமுலாம் பூசி பிரச்னையை ஊதிப் பெரிதாக்க நடைபெறும் முயற்சிகளும் விசித்திரமாக இருக்கின்றன. நடிகர் அஜீத்துக்குப் போட்டியாக உள்ள ஏதாவது ஒரு கதாநாயகனின் ரசிகர்களேகூட பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பழியை அஜீத்தின் ரசிகர்கள் மீது சுமத்தியிருந்தாலும்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. பிரச்னையில் அஜீத் மிரட்டப்பட்டாரா என்பதுபோய் யார் யாரைத் தாக்கினார்கள் என்று திசைமாறி இருக்கிறது. குற்றச்சாட்டை நேரிடுவதற்குப் பதிலாக, தவறு நடந்திருந்தால் மன்னிப்புக் கேட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குப் பதிலாக ஸ்டண்ட் மாஸ்டர்கள் களத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கும் விபரீதத்தை அரசு மேலும் வேடிக்கை பார்க்கிறதே, அதுதான் ஏன் என்று புரியவில்லை. காவிரிப் பிரச்னை, இலங்கைப் பிரச்னை போன்றவைகளுக்கான போராட்டங்களானாலும் சரி, முதல்வராக இருப்பவர்களுக்கு நடத்தப்படும் பாராட்டு விழாக்களானாலும் சரி, நடிக நடிகையர் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் திரைப்படத் தொழிலாளர் சங்க கூட்டமைப்பும் விநியோகஸ்தர்கள் சங்கமும் முனைப்புக் காட்டுகிறார்களே ஏன்? நடிக நடிகையர் இல்லாமலேயே பாராட்டு விழா நடத்துவதுதானே. அப்படி நடத்தப்படும் கூட்டங்களுக்கு மக்களின் வரவேற்பு இருக்காது என்று இவர்களுக்குத் தெரியாதா என்ன?திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டங்களில் கலந்துகொள்வதிலிருந்து கட்சியின் மூத்த உறுப்பினர்களாக இருந்த முன்னணி திரையுலகக் கலைஞர்களான எம்.ஜி. ராமச்சந்திரன், கே.ஆர். ராமசாமி மற்றும் எஸ்.எஸ். ராஜேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு அறிஞர் அண்ணா விதிவிலக்கே அளித்திருந்தார். பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து எடுக்கப்படும் திரைப்படங்கள் இந்த நடிகர்களின் அரசியல் ஈடுபாட்டால் நஷ்டப்படக் கூடாது என்கிற அக்கறை அறிஞர் அண்ணாவுக்கு இருந்தது. அதுமட்டுமல்ல, நடிகர்களின் கவர்ச்சி இல்லாமலேயே மக்கள் மத்தியில் நியாயமான போராட்டங்கள் வரவேற்பு பெறும் என்கிற நம்பிக்கையும் அவரிடம் இருந்தது. மிரட்டல், அஜீத்தின் குமுறல், ரஜினியின் கரகோஷம், வீடு மற்றும் கார் மீதான தாக்குதல் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு இந்தப் பிரச்னைக்கான களம் எது என்று பார்த்தால் அது அடிக்கடி நடத்தப்படும் முதல்வருக்கான பாராட்டு விழாக்கள்தான் என்பதை வருத்தத்துடன் குறிப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பாராட்டு விழாக்களை வயிற்றெரிச்சலால் எதிர்க்கிறார்கள், விமர்சிக்கிறார்கள் என்று முதல்வர் வேதனைப்படுவது அதைவிட வேடிக்கையாக இருக்கிறது.ஆழிசூழ் உலகத்தில் இந்த வயதில் இந்த மனிதரைவிட உழைப்பவர் யார் என்பதை அந்த ஆதவனால் மட்டும்தான் உணர்ந்துரைக்க முடியும் என்னும் அளவுக்கு, சின்னச்சின்ன விஷயங்கள்கூட அவரது பார்வையிலிருந்து தப்ப முடியாது என்கிற அளவுக்கு முதல்வரின் ஆற்றல் அளப்பரியது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு தலைவர் இதுபோன்ற விழாக்களில் தனக்கு முகஸ்துதி பாராட்டு மழை பொழிவதை ஏன், எதற்காக அனுமதிக்கிறார் என்பதுதான் புதிராக இருக்கிறது.பாராட்டு விழா நடத்துவோரில் எத்தனை பேர் கடந்தஆட்சியில் கைது செய்யப்பட்டபோது அவருடன் இருந்தார்கள் என்பதை ஏன் முதல்வர் யோசிக்க மறுக்கிறார்? இப்போது பாராட்டு விழா நடத்துபவர்களில் பலர் அப்போது மரியாதைநிமித்தம்கூட அவரைச் சந்திக்கத் தயங்கியவர்கள்தானே? இன்று கலையுலகப் பிதாமகர் என்று அவரை வர்ணிப்பவர்களில் பலர் அன்று அவரைக் கலையுலகக் கடைமகனாகக் கருதி ஒதுக்கியதை அவர் ஏன் மறந்துவிடுகிறார்?பாராட்டுகளுக்கு மயங்குபவர் முதல்வர் என்று சிலர் கருதுவதால், அவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். இதை முதல்வர் புரிந்துகொண்டு, தான் கலையுலகின் முதல்வரல்ல, தமிழகத்தின் முதல்வர் என்கிற கடமையுணர்வுடன் சட்டம் ஒழுங்கை மீறிச் செயல்படுபவர்களை கட்டம் கட்டி அடக்காவிட்டால், ஆட்சியையும் அதிகாரத்தையும் மக்கள் சட்டை செய்யாமல் ஒதுக்கிவிடும் நிலை ஏற்பட்டுவிடும்.விமர்சனங்களை வரவேற்கும் மனப்பக்குவமும், வாதத்தை வாதத்தால் எதிர்கொள்ளும் விவாதக் கலாசாரமும் வளர வேண்டுமே தவிர மிரட்டலும் உருட்டலும் வளர்வதும்,வளர்வதைச் சகிப்பதும் நல்லாட்சியின் இலக்கணங்கள் அல்லவே!
By Ilakkuvanar Thiruvalluvan
2/23/2010 4:03:00 AM
By Rajan
2/23/2010 3:59:00 AM
By vijay..
2/23/2010 3:26:00 AM
By vijay..
2/23/2010 3:26:00 AM
By nanban
2/23/2010 3:22:00 AM
By Ganessin
2/23/2010 2:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*