u.r.varatharajan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
u.r.varatharajan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 அக்டோபர், 2009

இலங்கைத் தமிழ் அகதிகளும்-தமிழக அரசியலும்



இலங்கைத் தமிழ் அகதிகள் மூன்று பிரிவினராக உள்ளனர். கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவு வரையிலான பகுதிகளிலிருந்து விடுதலைப்புலிகள் உடனழைத்துச் சென்ற - அல்லது தாங்களாகவே விரும்பி உடன் சென்ற - வட இலங்கைப் பகுதித் தமிழ் மக்கள் ஈழப்போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை அரசால் முள்வேலி முகாம்களுக்குள் முடக்கி வைக்கப்பட்டுள்ள சற்றொப்ப 3 லட்சம் பேர் ஒரு பிரிவினர். வடக்கு - கிழக்கு மாகாணங்களிலிருந்து விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் இஸ்லாமிய - தலித் இலங்கைத் தமிழர்கள், சுமார் ஒன்றே முக்கால் லட்சம் பேர், இலங்கையின் தலைநகரம் கொழும்புவுக்கு அருகில் தெற்குப் பகுதியில் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்கள் இரண்டாவது பிரிவினர். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த இலங்கைத் தமிழ் அகதிகள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்திய மண்ணில் முகாம்களிலும், ஒரு சிறு பிரிவினர் தனித்த வாழ்விடங்களிலும் இருப்போர் மூன்றாவது பிரிவினர். இவர்களில் முதல் பிரிவினராக உள்ள யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மற்றும் திரிகோணமலைப் பகுதிகளில் 30 முகாம்களில் இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பில் இருந்து வரும் ஈழத்தமிழ் அகதிகள் பிரச்னையே இன்று இந்தியாவில் மட்டுமன்றி சர்வதேச அரங்கிலும், மிகுந்த கவலையோடும், அக்கறையோடும் பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் குடியுரிமைப் பிரச்னை தற்போது விவாதத்துக்குரிய ஒன்றாக முன்வந்துள்ளது. இடைப்பட்ட தென் இலங்கை முகாம் அகதிகளின் பிரச்னை அவ்வளவாக கவனத்தை ஈர்க்காத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஈழப்போர் நடைபெற்று வந்த காலம்தொட்டு, அங்கே இருதரப்பிலும் துப்பாக்கிகள் மௌனமானதற்குப் பின்னர், இன்று வரை தமிழ்நாட்டில் அரசியல் இயக்கங்களிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்துள்ளன. 2008-ம் ஆண்டில் ஒரு மிகக்குறுகிய கால அளவில் மட்டுமே, போர்நிறுத்தம் என்ற கோரிக்கை, தமிழ்நாட்டிலிருந்து ஒருமித்த குரலில் எழுப்பப்பட்டது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் காலத்திய அரசியல் கட்சி மாச்சரியங்களில் இலங்கைத் தமிழர் பிரச்னை சிக்கிச் சிதறுகாயானது. இந்தியாவில் பொதுத் தேர்தல் முடிவுக்கு வந்தது; இலங்கையிலோ, போர் நிறுத்தம் நிகழவில்லை; போர் முடிந்துவிட்டதாக இலங்கை அரசு வெற்றிப் பெருமிதத்தோடு அறிவித்தது. விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள பின்னணியில், இன்றைய தமிழகத்து அரசியலில் இலங்கைத் தமிழர் பிரச்னையின் மூன்று மையமான அம்சங்கள் விவாதப்பொருளாக இடம்பெற்றுள்ளன. ஒன்று - விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரன் குறித்த செய்திகள். இரண்டு - முள்வேலி முகாம்களில் சிக்கி உள்ள மூன்று லட்சம் அகதிகளின் வாழ்வுரிமைப் பிரச்னைகள். மூன்று - இலங்கை இனப்பிரச்னைக்குத் தீர்வுகாண வழி எது என்ற கேள்வி. இந்த மூன்றிலுமே தமிழ்நாட்டின் அரசியல் இயக்கங்கள், வெவ்வேறான நிலைப்பாடுகளை எடுத்து வருகின்றன என்பது வெளிப்படையான உண்மை. இலங்கைப் பிரச்னையில் இன்று இந்தியாவில் நடுவண் அரசில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்துள்ள நிலைப்பாடு என்ன? பிரபாகரன் மறைவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த மரணச்சான்றிதழை வழங்கி, ராஜீவ்காந்தி வழக்கை இறுதியாக முடித்து வைக்க உதவ வேண்டும் என்பது இலங்கை அரசுக்கு இந்திய அரசு விடுத்துள்ள கோரிக்கை. வட இலங்கை முகாம்களில் உள்ள சுமார் மூன்று லட்சம் தமிழர்களை அவர்களது சொந்த வாழ்விடங்களில் மீண்டும் குடியமர்த்துவதற்கான 180 நாள்கள் திட்டம் ஒன்றையும், இலங்கை அதிபருடனான கூட்டறிக்கை ஒன்றின் வாயிலாக இந்திய அரசு ஏற்றுள்ளது. இலங்கையின் அரசியல் சட்டத்தில் கொணரப்பட்ட 13-வது திருத்தத்தோடு தொடங்கி, இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதும், அதே கூட்டறிக்கையில் இந்திய - இலங்கை அரசுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இவை எதிலும் கடந்த மூன்று மாதகாலமாகக் கடுகு அளவு முன்னேற்றம்கூட எட்டப்படவில்லை என்பதும் மறுக்க இயலாத எதார்த்தம். இந்தப் பின்புலத்தில்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று, இலங்கைக்குச் சென்று அங்குள்ள அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டு, இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசித் திரும்பி இருக்கிறது. இது இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழ்நாட்டில் புதியதொரு விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இலங்கை செல்லும் திமுக அணியின் எம்.பி.க்கள் குழு மத்திய அரசின் அதிகாரப்பூர்வத் தூதுக் குழுவா என்ற கேள்வியை இந்தக் கட்டுரையாளர் எழுப்ப நேரிட்டது. (தினமணி, அக். 10, 2009) இதற்குத் தமிழக முதலமைச்சர், இது அரசாங்கத்தின் சார்பில், அரசு செலவில் அனுப்பப்பட்ட குழு அல்ல. அரசு சார்பிலே குழு அனுப்பும் போதுதான் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும், துறையின் பிரதிநிதிகளையும் அனுப்ப வேண்டும் என்று விளக்கம் அளித்தார் (முரசொலி, அக். 11, 2009). குழுவிலே சென்ற உறுப்பினர்களது விமானக் கட்டணம் போன்ற செலவுகளைக்கூட அந்தந்தக் கட்சிகள்தான் ஏற்றுக்கொண்டுள்ளன என்பது, இது அதிகாரப்பூர்வ தூதுக்குழு அல்லவே அல்ல என்பதற்கான அழுத்தமான சாட்சியமாகவும் முதலமைச்சரால் பதிவு செய்யப்பட்டது. திமுக, காங்கிரஸ் விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமரைச் சந்தித்து விடுத்த கோரிக்கையை ஏற்று, அந்தக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை இலங்கை சென்று நிலைமைகளை அறிந்து வர மத்திய அரசின் வெளியுறவுத் துறை அனுமதித்துள்ளது என்றுதான் அன்றைய தினத்திலே முதலமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார். பிரதமருடனான இந்தச் சந்திப்பு தில்லியில் செப். 22-ம் தேதி நடைபெற்றது. அப்போது பிரதமருக்கு மூன்று கட்சிகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு அளித்த மனுவில், இக்கோரிக்கை இடம்பெறவில்லை. வாய்மொழியாகவே எம்.பி.க்கள் குழுவை இலங்கைக்கு அனுப்ப வேண்டுகோள் விடப்பட்டது. அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஏன் அனுப்பவில்லை என்ற கேள்வியை எழுப்பிய கட்சியினருக்கு அக்கறை இருக்குமேயானால் அவர்கள் பிரதமரைச் சந்தித்துக் கோரிக்கை வைத்து - இந்திய அரசு இலங்கை அரசோடு அதைப் பற்றிக் கலந்தாலோசித்து அனுமதி பெற்றுச் சென்று பார்க்க வேண்டியதுதானே என்று எதிர்க்கேள்வியையும் அவர் எழுப்பி இருந்தார் (முரசொலி, அக். 12, 2009). ஆனால், செப்டம்பர் 22 முதல் திமுக அணி எம்.பி.க்கள் இலங்கை சென்று திரும்பிய நாளான அக். 14 வரை வெளியிடப்படாத ஒரு தகவலை முதன்முறையாக, அந்தக் குழுவினரை விமான நிலையத்திலேயே சென்று வரவேற்று, அக்குழுவின் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் சொன்னார்: இலங்கை குடியரசுத் தலைவர் ராஜபட்ச ஒரு தூதுக்குழுவை அனுப்பி இலங்கை நிலவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் என்று எனக்கு (தமிழக முதலமைச்சருக்கு)க் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் நானே செயல்படுவது முறையல்ல என்பதால் மத்திய அரசின் கவனத்துக்கு அந்தச் செய்தியைத் தாங்கி இருந்த கடிதத்தை அனுப்பி வைத்தேன் என்று தொடங்கி, தில்லிக்குச் சென்று பிரதமரையும், சோனியா காந்தியையும் சந்தித்து, ஒரு குழுவை அனுப்பக் கேட்டுக் கொண்டதையும், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வந்து சந்தித்துக் கலந்து பேசி, 10 எம்.பி.க்கள் கொண்ட குழுவை அனுப்ப முடிவு செய்ததையும், இலங்கை அரசின் ஒப்புதலைப் பெற்று அந்தக் குழு சென்று திரும்பியதையும், அப்போது விரிவாக எடுத்து இயம்பினார் தமிழக முதலமைச்சர் (முரசொலி அக்.15, 2009). அண்டை நாடு ஒன்றின் அதிபர், தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் அதிகாரப்பூர்வமற்ற ஒன்றாக இருக்க முடியாது. அதன் மீது மாநில முதலமைச்சர் முடிவெடுப்பது முறையல்ல என்று உணர்ந்திருந்த தமிழக முதலமைச்சருக்கு, அந்தக் கடிதத்தில் கண்டிருந்த அழைப்பு தனது தலைமையிலான அணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு மட்டுமேயானது என்று எடுத்துக்கொள்வது மட்டும் முறையானதாகத் தெரிந்தது எப்படியோ அந்தக் கடிதம் இன்று வரை பகிரங்கப்படுத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ளதும் ஏன் என்று தெரியவில்லை. இது எவ்வாறாயினும், திமுக அணி எம்.பி.க்கள் இலங்கை சென்று அங்கு முகாம் வாழ் தமிழர்களின் நிலைமைகளைக் கண்டறிந்து வந்ததும், முகாமிலுள்ளவர்களை மீண்டும் அவரவர் வாழ்விடங்களில் குடியமர்த்தும் பணி தொடங்கப்பெறும் என்பதும் குறைகாணப்பட வேண்டிய விஷயங்களாகப் பார்க்கப்படுவது தமிழக அரசியலின் இன்றைய எதிர் - எதிர் நிலைப்பாடுகளின் வெளிப்பாடே. ஆனால், ஒரு குழுவாகச் சென்று திரும்பி, மாநில முதலமைச்சர் மூலமாக அறிக்கையொன்றை வெளியிட்டு முடித்ததுமே, அந்தக் குழுவில் இடம்பெற்ற மூன்று கட்சிகளும் ஒருமித்த செயல்பாட்டைத் தொடர முடியவில்லையே? கலைஞருக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவித்து மாநிலம் முழுவதும் சுவரொட்டிகள் ஒருபுறம்; பிரபாகரன் மரணத்தைத் தழுவிய நேரத்தில் உடனில்லாது தப்பியதை ஒட்டிய நகைச்சுவைப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட தொல். திருமாவளவன் இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்துக்கு அறைகூவல் விடுவது மறுபுறம்; மத்திய அரசின் சார்பில் ப. சிதம்பரத்தைத் தவிர - குறிப்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்டு - வேறு யாரும் இலங்கைத் தமிழர் பிரச்னையில் வாய் திறவாது மௌனம் சாதிப்பது மூன்றாவது புறம் என்று நவக்கிரகப் பார்வை வெளிப்படுகிறதே. யுத்தக்களத்தில் எல்லாவிதமான துன்பங்களையும் அனுபவித்துவிட்டு வந்து, தற்போது முள்கம்பிச் சிறைக்குள் வார்த்தைகளால் குறிப்பிட முடியாத துயரத்தை அனுபவிக்கிற முகாம்களிலுள்ள மக்களை உடனடியாகச் சொந்த இடங்களில் குடியமர்த்தி, சிதைந்த தேசத்தை அபிவிருத்தி செய்து, இழந்த வாழ்வைக் கட்டி எழுப்ப நடவடிக்கை எடுங்கள் என்றும், நிரந்தரமான உரிமையற்ற அகதிகளாக அலைந்து கொண்டிருக்கின்ற எமது மக்களுக்கு நிரந்தரமான வாழ்வுரிமையைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுங்கள் என்றும், இரண்டு கோரிக்கைகளை முன்வைத்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் துயரந் தோய்ந்த மன்றாடல்களை மத்திய அரசின் செவிகளுக்கு எட்டச் செய்து, அதிகாரப்பூர்வமான செயல்பாடுகளில் இறங்குவதற்கான நிர்பந்தத்தை உருவாக்க வேண்டிய தருணம் இது. தமிழக அரசியலின் கட்சி மாச்சரியங்களைத் தாண்டி இந்த நிர்பந்தத்தை உருவாக்க முற்படுவோமா!
கருத்துக்கள்

மிகவும் சரியாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், அனைத்துக் கட்சிக் குழு என்றால் சிங்கள கொடுங்கோலரசும் காங்கிரசு கொலைகாரக் கட்சியும் விரும்புவது போல் நற்சான்றிதழ் தர முடியாதே! அவர்கள கட்சியினரை மட்டும்தானே கண் மூடி வாய்பொத்தி இருக்கச் சொல்ல முடியும்? அவ்வாறிருக்க எவ்வாறு அனைத்துக் கட்சியினரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க முடியும்? உலக மக்களைக் கவருவதற்காகக் கனிமொழி மட்டும் நாடகம் ஆடினால் போதுமா? இந்தக் குழுவின் அறிக்கையே செல்லத்தக்கது அல்ல என்று அறிவிக்க வேண்டும். தமிழர்தாயகமான தமிழ் ஈழம்அமைவது ஒன்றே தமிழர்களின் சிக்கல்களுக்குத் தீர்வு என்பதைப் புரிந்து கொண்டு அதற்கான ஆக்கச் செயல்களில் ஈடுபட்டு வெற்றி காண வேண்டும். ‌

வெல்க தமிழ் ஈழம்! மலர்க ஈழ-உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/26/2009 3:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

ஈழம்: உள்ளும் புறமும் எழும் குரல்



"ஈழப்போர் 4' முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு கடந்த மே 19 அன்று அறிவித்துவிட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த செய்திகளும் மறுப்புகளும் ஊடகங்களிலும் இணையதளப் பதிவுகளிலும் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கி நடத்துவார் என்று சுட்டிக்காட்டப்பட்ட செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்டு கொழும்புவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இது விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்ச்சியான பின்னடைவுகளைச் சந்தித்து வந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது. கைது செய்யப்படுவதற்கு முன்பாக, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வதேசப் பிரிவின் இணையதளக் கட்டுரைகளில் அந்த இயக்கத்தின் அடுத்தகட்டப் பயணம் பற்றிய விளக்கங்களை பத்மநாதன் அளித்திருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுதங்களை மவுனிக்கச் செய்து அரசியல் ராஜதந்திரப் பாதையைப் பின்பற்ற முடிவு செய்துள்ளது என்பது அதன் தலைவர் முள்ளிவாய்க்காலில் வைத்து எடுத்த தீர்மானம் என்று அழுத்தமாகக் கூறும் பத்மநாதன், இரண்டு முக்கிய சர்வதேச நிலைமைகளைக் கவனப்படுத்தியுள்ளார்: 1. தென்னாசியாவினதும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினதும் புவிசார் அரசியல் நலன்கள் அடிப்படையில் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற வல்லாண்மைச் சக்திகள் இலங்கைத் தீவினை ஒரே நாடாகப் பேணியவாறு தமது நலன்களை அடைந்து கொள்வதே உசிதமானதாகக் கருதியமை. இது தமிழீழம் என்ற நமது லட்சியத்திற்கு எதிரான உலக நிலைப்பாட்டுக்கு வழிகோலியது. 2. இலங்கைத் தீவில் ஆயுதப் போராட்டம் ஏதோ ஒரு வழியில் முடிவுக்கு வர வேண்டும் என்பதிலும் அனைத்துலகும் ஒரே கருத்துக்கு வந்திருந்தது. இதனால் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்திற்கும் உலக ஆதரவைத் திரட்டுவது சாத்தியமற்றதாகவிருந்தது''. இந்தப் பின்புலத்தில், "தமிழீழ விடுதலைப் போராட்டம்' எதிர்கொண்ட பெரும் பின்னடைவைக் கருத்தில்கொண்டு அரசியல் ராஜதந்திர வழிமுறையே சாத்தியமானதும் வலுவானதுமாகும் என்ற முடிவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வந்தது. இந்த அரசியல் ராஜதந்திரப் பாதையை முன்னெடுக்கும் அதேவேளையில் ஆயுதப் போராட்டத்தையும் சமநேரத்தில் முன்னெடுப்பது முரணான இருதிசைகளில் பயணிப்பதற்கு ஒத்ததாக இருக்கிறது. இது எமது மக்களின் நலன்களை மையப்படுத்தும் விடுதலைப் போரை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்குப் பலவித நடைமுறைத் தடைகளை ஏற்படுத்தும்'' என்றும் பத்மநாதன் கருத்துத் தெரிவித்திருந்தார். ஐரோப்பிய யூனியனில் செயல்படும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு ஒன்றை ஜெர்மனியில் நடத்தியது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கூர்ந்து கவனிக்கத் தக்கவையாகும். வன்னியிலிருந்து ராணுவ நடவடிக்கையால் வெளியேற்றப்பட்டு முள்கம்பி வேலிகளுக்குள் ராணுவம் சுற்றி வளைத்துள்ள முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தப்படுவதற்குரிய நடவடிக்கையை இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் எடுக்க வேண்டும். இலங்கை அரசிடம் சரண் அடைந்ததாகக் கூறப்படும் சுமார் பத்தாயிரம் இளைஞர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி அவர்களின் புனர்வாழ்வுக்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; முகாம்களில் உள்ளவர்களில் குற்றவாளிகளென இலங்கை அரசு அடையாளம் காட்டுபவர்களை நீதி விசாரணைக்கு உள்படுத்த வேண்டும்; முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள் குறித்த முழு விவரங்களை மனித உரிமைகள் நிறுவனங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கை அரசு அறிவிக்க வேண்டும்; சர்வதேச உதவிகள் அந்த மக்களின் புனர்வாழ்வுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும்; மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவி வழங்கிய நான்கு தமிழ் மருத்துவர்களையும் முல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரையும் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும்; ஏற்கெனவே அகதிகளாக உள்ள முஸ்லிம் தமிழ் மக்களையும் சமகாலத்தில் தத்தம் இடங்களில் மீள் குடியேற்ற வேண்டும் என்ற தீர்மானங்களை உலகின் பல நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஏற்று, ஒற்றுமையாகச் செயல்படுவதற்கு ஒத்துழைக்குமாறு அந்த இயக்கம் கேட்டுக் கொண்டது. விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்றது. இலங்கை இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை வரையறுத்து வருவதாகவும், அதனை விரைவில் வெளியிடுவதாகவும் தெரிவித்த அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், "தனித்துவமான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அனைத்து அதிகாரங்களுடனான முழுமையான சுயாட்சி தேவை. காணி, பாதுகாப்பு, விவசாயம், கைத்தொழில் என முக்கிய அதிகாரங்கள் எங்களுடைய கையில் இருக்க வேண்டும்' என்ற வகையில் இந்தத் திட்டம் அமையும் என்று கோடிட்டுக் காட்டினர். கூடவே "இலங்கை இனப்பிரச்னைக்கு இந்தியாவுடன் இணைந்தே தீர்வைக் காண முடியும்' என்றும், "இலங்கை அரசுடனும் அனைத்துலக சமூகத்துடனும் பேசுவதற்குத் தயாராக உள்ளோம்' என்றும் அவர்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர். இலங்கைக்கு வெளியே நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்கான ஆலோசனைக்குழு ஒன்று இயங்கி வருகிறது. நாடு கடந்த தமிழீழ அரசின் கட்டமைப்பையும் அதனது ஆட்சிக்குழுவைத் தோற்றுவித்து நடைமுறைப்படுத்தும் பாதையையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் இக்குழு அதேவேளையில் தமிழ் மக்கள் வெளிப்படுத்திய அபிலாஷைகளை ஜனநாயக, அமைதி வழிகளில் வென்றெடுப்பதிலும் தன் கவனத்தைச் செலுத்துமென உறுதி கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்புகள் எல்லாம் அரசியல் ராஜதந்திரத் தீர்வு என்பதை முன்னிலைப்படுத்தி உள்ளபோதிலும், இவற்றில் தனித்தமிழ் ஈழம் என்ற கோரிக்கை கைவிடப்படவில்லை என்பதை நினைவில் நிறுத்த வேண்டியுள்ளது. ஈழத்தமிழர் தேசம், தமிழர் தேசியம், தாயகம், தனித்துவமான சுயநிர்ணயம் என்ற வாசகங்களில் இது உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இது புரிந்துகொள்ளக்கூடியதே. தமிழ் ஈழம் என்ற கோட்பாடு இந்த இயக்கங்களின் இருப்புக்கு அடிப்படையானது. எனினும் அது நீண்டகால லட்சியம் என்ற அளவில் மட்டும் தொலைதூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடிக் கோரிக்கையாக அரசியல் தீர்வு முன்வந்துள்ளது என்பது ஒரு நல்ல அம்சம். ஆனால் இலங்கையில் இருந்து வெளியாகும் தகவல்கள் அங்குள்ள தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த ஆழமான கவலைகளை எழுப்புகின்றன. வவுனியாவில் உள்ள முகாம்களில் 60 வயதுக்கும் அதிகமான முதியவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களை முன்னுரிமை அடிப்படையில் சொந்தக் குடியிருப்புகளுக்குச் செல்ல அனுமதிப்பதாகக் கூறும் இலங்கை அரசு, அவர்களின் குடும்பத்தாரை மட்டும் முகாம்களிலேயே நீடிக்க வலியுறுத்துகிறது. இதன் காரணமாக இத்தகைய முதியவர்களில் 400 பேர் மட்டுமே முகாம்களை விட்டு வெளியேற, மற்றவர்கள் குடும்பத்தோடு முகாம்களிலேயே அல்லல்படுகின்றனர். இதே முகாம்களில் குடும்பத்தினர் அனைவரையும் இழந்து அனாதைகளாக அடைபட்டுக் கிடக்கும் ஆதரவற்ற சிறுவர் சிறுமியர்களைப் பராமரிக்க முன்வரும் தன்னார்வ அமைப்புகளுக்கும் இலங்கை அரசு அனுமதி அளிக்க மறுக்கிறது. மாறாக, 13 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களைத் தனியாகப் பிரித்து ஒரு புனர்வாழ்வு முகாம் அமைக்க இலங்கை அரசு முற்பட்டுள்ளது. இது அவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பில் வைப்பதற்கான ஏற்பாடாகத் தெரிகிறது. 180 நாள்களுக்குள் முகாம்களில் உள்ளவர்களை மீள் குடியமர்த்துவோம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்தப் பணி கண்ணி வெடிகளை அகற்றுவது என்ற பெயரால் தாமதப்படுத்தப்படுகிறது. இலங்கை அதிபரின் சகோதரரும் அவரது அரசியல் ஆலோசகருமான பாசில் ராஜபட்ச, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஐரோப்பாவை உதாரணங்களாகச் சுட்டிக்காட்டி அங்கெல்லாம் உள்நாட்டிலேயே அகதிகளாக இருந்தவர்களைக் குடியமர்த்துவதற்குப் பல பத்தாண்டுகளும், ஒரு நூற்றாண்டு காலம் கூடப் பிடித்திருக்கிறது என்று பேசியுள்ளது இந்த இழுத்தடிப்பை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளது. இலங்கையில் அமலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான அரசுப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்: ""போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட லட்சக்கணக்கிலான மக்கள் இன்று அகதி முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களைச் சென்று பார்வையிடவும் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் எமக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இங்கு ஊடகவியலாளர்கள் கூட அனுமதிக்கப்படுவதில்லை. முள்கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் கம்பிகளுக்கு அப்பால் தாயும் மறுபக்கத்தில் பிள்ளையும் என்ற நிலைமையே காணப்படுகிறது. தொடர்ந்தும் அந்த மக்களின் உரிமைகள், சுதந்திரம், சகவாழ்வு மறுக்கப்படுவதாக இருந்தால் முகாம்களுக்குள்ளேயே அவர்கள் சத்தியாக்கிரகம் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்துவதற்குத் தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை'' என்றார் அவர். சிங்கள இனவாதத்தின் குரலாகச் சித்திரிக்கப்படுகிற ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினரே இவ்வாறு பேச நேரிட்டுள்ளது என்பது அங்குள்ள சற்றொப்ப மூன்று லட்சம் தமிழ் அகதிகளின் மனிதப் பேரவலத்திற்குச் சாட்சியாக அமைந்துள்ளது. சொந்த நாட்டிலேயே அகதிகளாக நிறுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களின் துயர் துடைப்புப் பணியும் அவர்கள் முகாம்களிலிருந்து சொந்தக் குடியிருப்புகளுக்குத் திரும்பக் கொண்டு செல்லப்பட்டுக் குடியமர்த்தப்படுவதும் இலங்கை அரசின் முன்னுள்ள அவசர அவசியக் கடமை. கடுமையான சர்வதேச நிர்பந்தம் இருந்தால் ஒழிய ராஜபட்ச அரசு இதில் வெளிப்படையாகவும் உள்ளார்ந்த அக்கறையுடனும் செயல்படும் என்றும் எதிர்பார்க்க வாய்ப்பில்லை. இலங்கைத் தமிழர் பிரச்னையில் ""13-வது அரசியல் சட்டத் திருத்தத்திற்கும் கூடுதலாக'' அரசியல் தீர்வு காண இலங்கை அரசு உறுதியளித்துள்ளதாக இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறி வருகிறது. ஆனால், தமிழர் வாழும் பகுதிகளில் தனி மாநிலம் என்பதையோ, சுயாட்சி அதிகாரம் என்பதையோ ஏற்க முடியாது என்றும், வடக்கு கிழக்குப் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதைத் தடுக்க இயலாது என்றும் இலங்கை ஆட்சியாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்த செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இவை இலங்கைத் தமிழர் பிரச்னைக்கான அரசியல் தீர்வை நோக்கி ராஜபட்ச அரசு அடியெடுத்து வைக்குமா என்கிற ஐயப்பாட்டை எழுப்புகின்றன. இந்தப் பின்னணியில் இலங்கைக்கு உள்ளும் புறமுமாக அரசியல் தீர்வை வலியுறுத்தி எழுந்துள்ள குரல்களும் இதுகுறித்து இந்திய அரசின் தலையீடு குறித்த எதிர்பார்ப்புகளும் இந்திய அரசு தன் செயல்பாட்டில் வேகத்தையும் விவேகத்தையும் காட்ட வேண்டியதை வலியுறுத்துவனவாக உள்ளன. மன்மோகன் சிங் அரசு இத்திசையில் இனியேனும் பயணிக்குமா?