environmental லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
environmental லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 16 நவம்பர், 2010

தலையங்கம்: விழித்துக் கொள்வோம்!

தலையங்கம்: விழித்துக் கொள்வோம்!


கடற்கரைப் பொதுக்கூட்டத்தின் முடிவில் மட்டும்தான் சுண்டல், முறுக்கு சாப்பிட்ட காகிதக் குப்பைகளும், அறுந்த செருப்புகளும், பிளாஸ்டிக் பைகளும் இறைந்து கிடக்கும் என்பதில்லை. அதைவிட மிக மோசமான குப்பைகள் கோயில் திருவிழாக்களின்போது ஏற்படுகிறது.÷திருமலை திருப்பதி தேவஸ்தானம் உள்பட சில கோயில்கள் 20 மைக்ரான் அளவுக்கும் தடிமன் குறைவான பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தத் தடை விதித்திருக்கின்றனவே தவிர,  மறுசுழற்சிக்குத் தகுதியான பிளாஸ்டிக் குப்பைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இக்கோயில் நிர்வாகங்கள் ஈடுபடவில்லை. திருமலையில் இப்போதும்கூட தேவஸ்தான லட்டு கவுன்டரில் பிளாஸ்டிக் பைகள்தான் விற்பனையில் உள்ளன.÷திருவண்ணாமலையில் ஒவ்வொரு நிறைநிலா நாளிலும் அண்ணாமலையை கிரிவலம் வரும் பக்தர்கள் கொண்டுவரும் குப்பை 100 முதல் 110 டன். இவற்றில் பெரும்பகுதி பிளாஸ்டிக் குப்பைகள். சென்ற ஆண்டு கார்த்திகை தீபத்தின்போது 220 டன் குப்பைகள் சேர்ந்தது. இந்த ஆண்டு இன்னும் அதிகரிக்கும் என்கிற கவலையில் இருக்கிறது, திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம். ÷சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் ஒரு முன்மாதிரியாகச் செயல்பட்டு, பக்தர்களைத் தேடிச்சென்று, அவர்களிடம் பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தென்னிந்திய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு கேரள மாநிலத் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் கோயில் நிர்வாகிகள் நேரடியாகச் சென்று, ஐயப்ப சேவா சங்கங்களையும், குருசாமிகளையும் அழைத்துப் பேசுகின்றனர். பிளாஸ்டிக்கினால் சபரிமலையும் பம்பை நதியும்  எவ்வாறு பாழ்படுகின்றன என்பதை விளக்குகின்றனர். இவர்களின் அடிப்படை நோக்கம் பக்தர்கள் சபரிமலைக்கு வரும்போது இருமுடியிலோ அல்லது அவர்களது பைகளிலோ பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருள்கள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்வதுதான்.÷சபரிமலைக்கு ஓராண்டில் சுமார் ஒரு கோடி பக்தர்கள் வருகின்றனர்.  இவர்கள் கொண்டுவரும் குப்பைகள் 350 டன் பிளாஸ்டிக், 550 டன் காகிதங்கள். இவை சபரிமலையின் சுற்றுச்சூழலைப் பாதிக்கின்றன. அதுமட்டுமே பிரச்னை அல்ல. இந்த பிளாஸ்டிக் பைகளில் பெரும்பாலும் பக்தர்கள் பாதி சாப்பிட்டு தூக்கி வீசிய உணவுப் பொருள்களும் இருக்கின்றன. இந்த உணவுக் குப்பைகளின் அளவு 2,000 டன் வரை. உணவுகளை அப்படியே மண்ணில் கொட்டினால் ஒரேநாளில் மக்கிப் போகும். ஆனால் பிளாஸ்டிக் பைகளில் இருக்கும் உணவுக்காக வனவிலங்குகள் அவற்றைச் சாப்பிட முற்படும்போது, பிளாஸ்டிக் பொருளையும் சேர்த்து விழுங்கி, இறந்துபோகும் சம்பவங்கள்தான் அதிகமாக நடக்கின்றன. ஆகவேதான், பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வராதீர்கள் என்று சொல்வதோடு அதனால் அங்கே ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, வனவிலங்குகள் இறப்பு குறித்தும் பக்தர்களுக்கு இவர்கள் விளக்குகிறார்கள். ÷பிளாஸ்டிக் பைகளைவிடவும் மோசமான பிரச்னையாக தண்ணீர் போத்தல்கள் உருவெடுத்துள்ளன. தண்ணீர் போத்தல்கள் ஆங்காங்கே வீசப்படுகின்றன. இவை மக்காத பிளாஸ்டிக் பொருள்கள். இவற்றின்கேடு மிக அதிகம்.÷ஒவ்வொரு பக்தரும் பிளாஸ்டிக் பை கொண்டுசெல்வதில்லை என்றும், பிளாஸ்டிக் போத்தல்களைப் பயன்படுத்துவதில்லை அல்லது ஒரு பிளாஸ்டிக் போத்தலை மட்டுமே தன் பயணம் முழுவதற்கும் பயன்படுத்துவது என்கிற குறிக்கோளுடன் செயல்பட்டாலே போதும்,  இந்தக் குப்பைகளில் பெரும்பகுதி குறைந்துவிடும். ÷இதற்கு முதல்கட்டமாக கோயில் வளாகங்களில் உள்ள கடைக்காரர்களையும், அவர்களுக்குப் பொருள்கள் விநியோகம் செய்யும் உற்பத்தியாளர்களையும்கூட அழைத்துப்பேசி, பிளாஸ்டிக்கைத் தவிர்த்துவிட்டு பூஜைப் பொருள்களை எப்படியெல்லாம் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் கோயில்களுக்குக் கொண்டுவர முடியும் என்பதை யோசித்தால் நன்மை கிடைக்கும்.÷பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்கிற விழிப்புணர்வு ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அத்தகைய பொருள்கள் கிடைக்கும் வாய்ப்பே இல்லாமல் செய்வதும் புத்திசாலித்தனமாக அமையும்.÷கோயிலைத் தூய்மை செய்யும் பணி தமிழருக்குப் புதிதல்ல. உழவாரப் பணியை தன் வாழ்வின் நோக்கமாகவே வைத்திருந்தவர் சமயக் குரவர்களில் ஒருவரான அப்பர் சுவாமிகள். இன்றும்கூட, சென்னையைச் சேர்ந்த சில அன்பர்கள் எந்த விளம்பரமும் இல்லாமல் இத்தகைய உழவாரப் பணிகளைச் செய்து வருகின்றனர். கோயிலுக்கு வெள்ளை அடிப்பது, தரையைத் துடைப்பது, கோபுரங்களில் முளைக்கும் செடிகொடிகளை அகற்றுவது ஆகிய பணிகளைச் செய்கின்றனர். ஆனால், இந்த உழவாரப் பணியின் நோக்கம் இன்னும் பரந்துவிரிந்ததாக இருக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது. ÷வெறும் கோயிலை மட்டுமல்ல. கோயிலுக்கு வெளியே பக்தர்களால் போடப்படும் இத்தகைய பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுவது, பக்தர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்கூட இற்றை நாளில் அவசியமான உழவாரப் பணிதான். ÷உலகம் நம்முடன் முடிந்துவிடுவதில்லை. நாளையும் நன்றாகவும் வளமாகவும் இருந்தால்தான் நமது சந்ததியர் நிம்மதியாக வாழமுடியும் என்கிற நல்லெண்ணம் வேண்டாமா?
கருத்துகள்

இறையன்பர்களுக்கு நல்ல வேண்டுகோள். இவ்வுரையில் நிறைநிலா என்று நல்ல தமிழ்ச் சொல் கையாளப்பட்டுள்ளது. பாட்டில் (bottle) என்பதன் தமிழ் எழுத்து வடிவமாக போத்தல் குறிக்கப்பட்டுள்ளது. (குப்பிதான் உரிய தமிழ்ச் சொல்) தமிழ்ச் சொற்களைக் கையாள வேண்டும் என்னும் எண்ணம் தெரிகிறது. முழுவதும் நல்ல தமிழிலேயே இனி எழுதலாமே! அன்புடனும் வாழ்த்துகளுடனும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/16/2010 6:22:00 AM
I support the points written in the article. Thanks Dinamani for bringing it out
By gkmani
11/16/2010 6:07:00 AM
EXCELLENT WRITING ABOUT ENVIRONMENT. INDIA, DUE TO DENSE POPULATION, THE AMOUNT OF WASTE PLASTIC MATERIAL IS DIFFICULT TO CALCULATE WHICH HAS SERIOUS IMPACT ON ENVIRONMENT. I AM ALSO A HINDU, WHEN I VISITED A TEMPLE, PEOPLE ARE USING PLASTICS AND BURNING SUDAM (DON'T FOLLOW STUPID TRADITION) WHICH ARE HIGHLY POLLUTING MATERIALS. PRAY GOD WITH YOGA, SILENT& SONG PRAYER. THINK POSITIVELY AND CHANGE YOUR BAD ATTITUDES WHEN YOU ARE IN TEMPLE.
By ravi,brunei
11/16/2010 5:59:00 AM
தலையங்கம் ஆன்மித்துக்கும் பக்தர்களுக்கும் சமூகத்துக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது.’ஆலயமானாலும் அழுக்கோடு வசிப்பது அவசியமாமே’எனும் புது மொழ்ஹி வராமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம்.
By ஆரிசன்
11/16/2010 5:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

செவ்வாய், 27 ஜூலை, 2010

தலையங்கம்: பயமல்ல... நிஜம்!


பசுமை இல்ல வாயு பற்றியும், புவி வெப்பமடைதல் பற்றியும் யாராவது எழுதினாலோ, பேசினாலோ அவர்கள் தேவையில்லாமல் மக்களைப் பயமுறுத்தும் எதிர்மறைச் சிந்தனையாளர்கள் என்பதுபோல மிகவும் சாதுர்யமாகத் தங்களது விளம்பர யுக்திகளின் மூலம் வர்ணிக்க முற்படுகின்றன, பல்லாயிரம் கோடி ரூபாய் லாபமீட்டும் எண்ணெய் நிறுவனங்கள். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறையுங்கள் என்று எச்சரித்தால், மனித இனம் வசதியாக வாழ்வதைப் பார்க்கப் பிடிக்காத வயிற்றெரிச்சல் வாதிகள் என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.இயற்கையுடன் விளையாடத் தொடங்கி இருக்கிறோம். ஒருசில தலைமுறைகள் மனித இனம், அதிலும் ஒரு சிறிய விழுக்காடு மட்டும், வசதியாக வாழ்வதற்காக வருங்கால உலகத்தையே பாலைவனமாக்கும் முயற்சி அரங்கேறி வருகிறது. இதன் விளைவுகள் தெள்ளத் தெளிவாகத் தெரியத் தொடங்கிய பின்னும்கூட மனிதன் சுதாரித்துக் கொண்டு, வசதிகளைச் சுருக்கிக் கொண்டு வருங்காலத் தலைமுறையினரைக் காப்பாற்ற முன்வராமல் போனால் அதை என்னென்று கூறுவது?இந்த ஆண்டு ரஷியா இதுவரை காணாத வெப்பத்தால் பாதிக்கப்பட்டது. கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத வறட்சியால் பாதிக்கப்பட்ட ரஷிய நாட்டு மக்கள், ஏரிகள், நதிகள் என்று பெரும் திரளாகப் படையெடுத்துக் கோடை வெயிலின் வெப்பத்தை எதிர்கொள்ள முற்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 233 பேர் நீரில் மூழ்கி இறந்திருக்கிறார்கள். பூமி வெப்பமடைதல் பொய்யென்றால், ரஷியாவில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தாக்குவானேன்?இந்தியாவுக்கு வருவோம். இமயமலையில் பனிப்பாறைகள் உருகி, பனிச் சிகரத்தின் உயரம் கணிசமாகக் குறைந்து வருகிறதே, அது ஏன்? டேவிட் ப்ரிஷியர்ஸ் என்கிற அமெரிக்கர் 1983-லிருந்து ஐந்து தடவை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்தவர். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோதெல்லாம் இமயமலையையும், அதன் பனிப்பாறைகளையும், சிகரங்களையும் தனது கேமராவில் பதிவு செய்து வைத்திருப்பவர். பனிச்சிகரங்களின் உயரம் குறைந்து வருவது அவருக்கு அதிர்ச்சி அளித்ததால், முன்பு எந்த இடத்திலிருந்து ஒரு சிகரத்தைப் படம் பிடித்தாரோ அதே இடத்திலிருந்து மீண்டும் படமெடுத்துப் பதிவு செய்து பார்த்தவருக்கு ஒரே அதிர்ச்சி.சுமார் நாற்பது மாடிக் கட்டடம் நான்கு மாடிக் கட்டடமாகச் சுருங்கினால் எப்படி இருக்கும், அதுபோல பல பனிச் சிகரங்கள் சுருங்கி இருப்பதை டேவிட் ப்ரிஷியர்ஸ் ஆவணங்களுடன் பதிவு செய்திருக்கிறார். ருங்பெக் பனிச் சிகரம் செங்குத்தாக சுமார் 330 அடி உயரம் குறைந்திருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்.இமயமலையிலுள்ள பல பனிச் சிகரங்கள் அசுர வேகத்தில் சுருங்கத் தொடங்கி இருப்பதை சீன ஆய்வு மையம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இப்படியே போனால், கைலாயம்கூடக் காணாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எவரெஸ்ட், கஞ்சன்ஜங்கா போன்ற பனிச் சிகரங்கள் ஆண்டுக்கு 26 அடி உயரம் குறைந்து வருவதாகத் தெரிகிறது.இதற்கு மூல காரணம் அளவுக்கு அதிகமாகக் கட்டுப்பாடற்ற முறையில் வெளியேற்றப்படும் கரியமில வாயு. வளர்ச்சி என்கிற பெயரில் காடுகள் அழிக்கப்படுவதால், வெளியேற்றப்படும் கரியமில வாயுவை உள்வாங்க இயற்கையால் முடியாமல் போகிறது. காற்று மண்டலத்தில் வியாபித்துவிட்டிருக்கும் கரியமில வாயுவால் வானமண்டலமே வெப்பமடைந்திருக்கிறது.மேலும், காடுகள் அழிக்கப்படுவதால் மழையின் அளவு குறைந்து விட்டிருக்கிறது. பருவநிலையிலும் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக, உருகும் பனியை ஈடுகட்டும் அளவுக்கு குளிர்காலத்தில் பனி உறைவது இல்லை. மேலும், பெட்ரோல், டீசல் புகையிலிருந்து வெளியேறும் கரியமில வாயு பனிச் சிகரங்களில் படர்வதால் வழக்கத்தைவிட அதிகமாக பனிச்சிகரம் உருகிவிடுகிறது; பனி உறைவதும் இல்லை. புவி வெப்பமடைதல், பனிச் சிகரங்கள் உறைதல் போன்றவைகளின் தொடர்ச்சியாக  நாம் சந்திக்கப் போகும் சவால் இன்னொன்றும் இருக்கிறது. விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. கடந்த மாதம் வெளியாகி இருக்கும் "சயன்ஸ்' இதழ், இதன் தொடர்விளைவுகள் சிந்து மற்றும் பிரம்மபுத்ரா நதிகளைப் பெரிய அளவிலும், கங்கை, சீனாவில் பாயும் மஞ்சள் நதி மற்றும் யாங்க்ட்ஸ் நதிகளை சிறிய அளவிலும் பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கிறது.சிந்து மற்றும் பிரம்மபுத்ரா சமவெளிப் பகுதிகளில் வாழும் ஏறத்தாழ 60 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் தன்மையது இந்த பனிச் சிகரங்கள் உருகும் போக்கு என்பதை நாம் உணர்வதாகவே தெரியவில்லை. எண்ணெய் நிறுவனங்களின் செயல்பாடுகளையும், குறிக்கோளையும் நிர்ணயிப்பது பல பில்லியன் டாலர் லாபம் மட்டுமே. பெருவாரியான மத்தியதர, மேல் மத்தியதர, பணக்கார மக்களின் எண்ணப்போக்கை நிர்ணயிப்பது இன்று அனுபவிக்கும் கார், ஏ.சி., குளிர்பதனப் பெட்டி, விமானம் போன்ற வாழ்க்கை வசதிகள் மட்டுமே."எப்போதோ வரப்போகும் ஆபத்தைப் பற்றி இப்போதே சிந்தித்துக் கவலைப்படுவது போன்ற முட்டாள்தனம் இருக்க முடியுமா? புவி வெப்பமடைதல், கரியமில வாயு, பனிச் சிகரங்கள் உருகுதல் என்றெல்லாம் இந்த எதிர்மறைச் சிந்தனையாளர்கள் ஏன் பயமுறுத்த வேண்டும்? நாம் அப்போது உயிரோடு இருக்கப் போகிறோமா? இருப்பதுவரை சுகமாக வாழ்வதை அனுபவிப்பதை விட்டுவிட்டு ஏன் நாளையைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்'' என்று கேட்பவர்களிடம் ஒரு கேள்வி-உங்களுக்கெல்லாம் குழந்தைகள், பேரக் குழந்தைகள் கிடையாதா? வருங்காலச் சந்ததியினரைப் பற்றிய கவலையே உங்களுக்கு இல்லையா?
கருத்துக்கள்

சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். சட்டி நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காகத் தினமணி ஆசிரியர் குழுவினர் நிறைய படிக்கிறார்கள் எனத் தெரிகிறது. தெரிந்த செய்தியாக இருந்தாலும் தெரியாத விவரங்களைத் தந்து விழிப்பூ்ட்டும் பணியை நன்கு ‌செய்கிறார்கள். வாழ்க ஆசிரியர் குழு! வளர்க தினமணி!
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/27/2010 3:14:00 AM
எதுக்குங்க எனக்கு பேரன் இருக்கான் மகன் இருக்கான் அதவிட நான் கொள்ளை அடிச்ச பணம் இருக்குங்க அவங்கள நான் கொள்ளை அடிச்ச பணம் காப்பாத்தும் இப்படி யார் சொல்வாங்க பணம் படைச்ச முதலாளி மட்டும் இல்லைங்க நம்ம அரசியல் அன்பர்களும் தான் எப்படின்னு பார்த்த அவங்களவிட பொறுப்பு இவங்களுக்கு இருந்தாலும் கொள்ளை அடிச்சது இவங்கத்தானே அதிகம் சேர்த்து வச்சி இருக்காங்க பின்ன எதுக்கு கவலை படனும் மக்களை பத்தி பாது காப்புன்னு மரம் வெட்டுவான் பிறகு பைத்தியம் பிடிச்சு வெட்டுவான் இப்படியே போகட்டும் னுதான் அரசியல்வாதி பார்க்குறான் எதுக்குன்னா எதிர் காலத்துல நலத்திட்டம் இன்ற பேர்ல துட்டு கொள்ள அடிக்கலாம்ல அதுக்குத்தான்
By Arasu
7/27/2010 2:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 22 ஆகஸ்ட், 2009

இந்தியாவைச் சேர்ந்த சுகாதார நிபுணருக்கு சர்வதேச விருது



லண்டன், ஆக. 21: இந்தியாவைச் சேர்ந்த சுகாதார நிபுணரும், "சுலாப்' சுகாதார இயக்க நிறுவனருமான பிந்தேஸ்வர் பதக், 2009 ஆம் ஆண்டுக்கான பெருமைமிகு "ஸ்டாக்ஹோம் வாட்டர்' என்ற சர்வதேச விருதைப் பெற்றுள்ளார். சுற்றுச்சூழல் சேவைக்கான இந்த விருது நோபல் பரிசுக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஸ்டாக்ஹோம் நகரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில், பிந்தேஸ்வர் பதக்கிற்கு இந்த விருதை சுவீடன் இளவரசர் கார்ல் பிலிப் வழங்கினார். இந்த விருதைப் பெற்றுக் கொண்ட பிறகு, பிந்தேஸ்வர் பதக் பேசியது: முறையான சுகாதார வசதியை அளிப்பதன் மூலம் அனைவரும் குறிப்பாக, பெண்கள் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியும். சிசு மரணத்தையும் குறைக்க முடியும். சுத்தமான தண்ணீரும், சுகாதாரமும் கிடைத்தால் ஒட்டுமொத்த சமுதாயத்தின் உடல்நலம் மேம்பாடு அடையும் என்றார் அவர்.