காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
காவிரி மேலாண்மை ஆணையம் என்பது தமிழ்நாட்டை ஏமாற்றும் ஒரு போலி நிறுவனம் என்பதைப் பதினான்காவது தடவையாக 27.09.2021 அன்றும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்திய அரசு நீராற்றல் துறையின் முழுநேரத் தலைவராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பணித் தலைவராகவும் உள்ள எசு.கே. அலுதார் தலைமையில் 27.09.2021 அன்று புதுதில்லியில் நடந்த காவிரி ஆணையக் கூட்டம் வழக்கம்போல், தமிழ்நாட்டுக்குக் கொஞ்சம் தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டு முடிந்துவிட்டது.
ஆனால், நாளேடுகள் பலவற்றில் கருநாடகம் தமிழ்நாட்டிற்கு 33.7 ஆ.மி.க. (TMC) தண்ணீர் திறந்துவிடக் காவிரி ஆணையம் “உத்தரவு” என்று செய்திகள் வந்துள்ளன.
தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்குசேனா தலைமையில் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் கடந்த 2021 சூன் மாதத்திலிருந்து செட்டம்பர் 26 வரை கருநாடகம் காவிரியில் திறந்துவிட்டிருக்க வேண்டிய தண்ணீரில் 33.7 ஆ.மி.க. (TMC) பாக்கி உள்ளது. அதை உடனே திறந்துவிடச் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் காவிரி ஆணையக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய எசு.கே. அலுதார் அவ்வாறு ஆணையிடவில்லை. அவர் என்ன கூறினார் என்பது ஆங்கில இந்து நாளேட்டில் (28.09.2021) வந்துள்ளது.
அந்த ஏட்டின் மூத்த செய்தியாளர் டி. இராமகிருட்டிணன் தொலைப்பேசியில் எசு.கே. அலுதாரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன விடை அப்படியே இதோ :
“குறிப்பாக எவ்வளவு தண்ணீர் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடச் சொன்னீர்கள் என்று திரும்பத் திரும்பக் கேட்டும் அவர் (எசு.கே. அலுதார்) அது பற்றிச் சொல்ல மறுத்துவிட்டார்.
ஆனால், அவர் ஒரு தகவலைச் சுட்டிக் காட்டினார். கடந்த 30 ஆண்டுச் சராசரியை ஒப்பிட்டால், மேட்டூரில் இந்த நாளில் இருக்க வேண்டிய நீர் இருப்பு இல்லை. இக்காலத்தில் சராசரியாக 40 முதல் 45 ஆ.மி.க. (TMC) வரை மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு இருக்கும். இதனோடு ஒப்பிடும்போது கொஞ்சம் பற்றாக்குறை (deficiency) இருக்கிறது. அதையாவது கருநாடகம் திறந்துவிட வேண்டும் என்று கூறியுள்ளோம் என்றார்” என்று ஆங்கில இந்து ஏடு கூறுகிறது.
காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கு வழங்கிய தண்ணீரின் அளவில், உச்ச நீதிமன்றம் ஓரளவு குறைத்து 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பின்படி சூன் மாதத்திலிருந்து செப்டம்பர் 26 வரைக் கருநாடகம் திறந்து விட்டிருக்க வேண்டிய தண்ணீரில் 33.7 ஆ.மி.க. பற்றாக்குறை உள்ளது. ஆனால் காவிரி ஆணையத் தலைவர் கட்டப்பஞ்சாயத்தாகக் கூறியது அதற்கும் குறைவான குத்துமதிப்பான அளவுத் தண்ணீர். ஆணையத்தின் இந்தக் குத்துமதிப்பான “பரிந்துரையையும்” கருநாடக அரசு செயல்படுத்தப் போவதில்லை.
ஏற்கெனவே ஒரு தடவைகூட காவிரி ஆணையத்தின் “பரிந்துரையை”க் கருநாடகம் செயல்படுத்தியதில்லை. அதன்மீது காவிரி ஆணையமும் மோடி அரசும் எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுத்ததில்லை.
தமிழ்நாட்டை ஏமாற்றும் இந்தக் காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்துத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுத்ததில்லை; உருப்படியான சனநாயக நடவடிக்கையும் எடுத்ததில்லை!
காவிரியை நம்பி வாழும் பல கோடித் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் பொறியமைவாகவே, தன்னாட்சி அதிகாரமோ, தனியான முழுநேரத் தலைவரோ, தனி அலுவலகமோ இல்லாமல் நரேந்திர மோடி அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. இப்போது ஆணையத்தின் முழுநேரத் தலைவராக அதே எசு.கே. அலுதாரை இந்திய அரசு அமர்த்தி இருக்கிறது. அதே அல்தார் வரும் நவம்பர் 30-இல் பணி நிறைவு பெறுகிறார் என்பது கவனிக்கத்தக்கது. அவருக்கு ஓய்வுக்காலப் பரிசாக இப்பதவி வழங்கப்பட்டுள்ளத. இஃது என்ன உள்சூழ்ச்சியோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது.
இந்த மோசடி ஆணையத்தைக் கலைத்துவிட்டு, தன்னாட்சி அதிகாரமுள்ள முழுநேர ஆணையத்தை அமைத்திட இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு உடனே கோரிக்கை எழுப்ப வேண்டும். இக்கோரிக்கையை முன்வைத்துத் தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும், அனைத்து உழவர் அமைப்புகளும், அனைத்து மக்களும் காவிரி மீட்பு எழுச்சி நாள் ஒன்றை உடனடியாகக் கடைபிடித்து, அந்நாளில் குமரிமுனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!
கடந்த 16.11.2019 அன்று நடந்த இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில், ‘சிறீலங்கா பொதுசன பெரமுனா’ கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட, மகிந்த இராசபக்சேவின் தம்பி கோத்தபய இராசபக்சே 52.25% வாக்குகள் பெற்று பெரும் வெற்றியை ஈட்டியுள்ளார். இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயக மாநிலங்களில் உள்ள தமிழர்களும், தமிழ் பேசும் முசுலிம்களும் கோத்தபய இராசபக்சேயை எதிர்த்து நின்ற ‘ஐக்கிய தேசியக் கட்சி’ வேட்பாளரான சயித்து பிரமேதாசாவுக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்திருக்கிறார்கள்.
இராசபக்சே குடியரசுத் தலைவராகவும், அவரது தம்பி கோத்தபய இராசபக்சே பாதுகாப்புத் துறைச் செயலாளராகவும் இருந்த காலத்தில் தமிழின அழிப்புப் போரை தீவிரமாக நடத்தினார்கள். 2008 – 2009இல் இலட்சக்கணக்கான தமிழ்ப் பொது மக்களையும், விடுதலைப்புலி வீரர்களையும் இனப்படுகொலை செய்து நரவேட்டை நடத்தினார்கள்.
சிங்கள பௌத்த பேரினவாத ஆதிக்கத்தை – தமிழர்கள் மீது திணித்ததைப் போலவே, முசுலிம் மக்கள் மீதும் இராசபக்சே அரசு திணித்தது. இதனால் இம்மக்கள் இராசபக்சே தம்பிக்கு வாக்களிக்க மறுத்து, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இன்னொரு சிங்களக் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தனர். ஆனால், கோத்தபய இராசபக்சே மிகப்பெருவாரியான வாக்குகள் பெற்றது எப்படி என்ற கேள்வி எழுகிறது!
இலங்கையில் தமிழர்கள் செயற்கையாகச் சிறுபான்மையாக்கப்பட்ட மக்கள் ஆவர். வரலாற்றில் தமிழர்களின் அரசு தனித்து அங்கு நடந்து வந்தது. ஐரோப்பிய வணிக வேட்டைக் கொள்ளை நிறுவனங்கள் வேட்டையாட வந்தபொழுது, பீரங்கிகளால் தமிழின அரசை வீழ்த்தி சிங்கள அரசையும் வீழ்த்தி ஒரே நிருவாகக் கட்டமைப்பாக இலங்கையை உருவாக்கினார்கள். அதில் ஆங்கிலேய அரசு கோலோச்சியது. இதனால், செயற்கையாக சிறுபான்மையாக்கப்பட்ட தமிழர்கள் எந்தக் காலத்திலும் நாடாளுமன்றத் தேர்தல் வழியாகத் தம் மொழியை – பண்பாட்டை – தாயகப் பரப்பைப் பாதுகாத்துக் கொள்ளும் அரசு அதிகாரத்தைப் பெறவே முடியாத நிலை ஏற்பட்டது.
இலங்கை மக்கள் தொகையில் வடக்கு கிழக்கு மாநிலங்களில் உள்ள ‘சிறுபான்மை’ மக்கள் எண்ணிக்கை 30 விழுக்காடு. மற்ற சிங்கள மாநிலங்களி்ல் சிங்களரின் மக்கள் தொகை 70 விழுக்காடு.
குடியேற்ற(காலனி) வேட்டையாடிகளாலும், பெருந்தேசிய இன ஆக்கிரமிப்பாளர்களாலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடுகளில் செயற்கையாக சிறுபான்மையாகிப் போன மக்களின் உரிமையை அந்நாடுகளில் நடைபெறும் தேர்தல் வாக்குரிமை மூலம் அடைந்துவிட முடியாது என்பதற்கு, இப்பொழுது நடந்துள்ள இலங்கைத் தேர்தல் மற்றுமோர் எடுத்துக்காட்டு!
“பெரும்பான்மையினரின் முடிவைச் செயல்படுத்துவது” என்ற சனநாயகக் கோட்பாட்டை பல்வேறு இனங்களைக் கொண்ட நாடுகளில் ஒற்றைப் பொருளில் பயன்படுத்தினால், ஒப்பீட்டளவில் சிறுபான்மையாக உள்ள இனங்கள் நிலையான அடிமைகளாக வாழ வேண்டிய நிலைதான் ஏற்படும்.
ஏற்கெனவே, பிரித்தானியாவில் (U.K) சிக்கிக் கொண்டுள்ள அயர்லாந்து, காட்லாந்து தேசிய இனங்கள் தங்களின் மொழி மற்றும் இன உரிமைகளைப் பாதுகாக்க நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல் மூலம் வழியில்லை என்ற முடிவுக்கு வந்து தனிநாடு கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் ஒப்பீட்டளவில் மிகச்சிறந்த சனநாயகம் உள்ள நாடாகக் கருதப்படும் பிரித்தானியாவிலேயே இந்த இனப்பாகுபாடு நடந்து கொண்டுள்ளது.
இதேபோல்தான், இசுபெயினில் சிக்கிக் கொண்ட ‘சிறுபான்மைத்’ தேசிய இனங்கள் விடுதலைக்குப் போராடுகின்றன. சோவியத்து ஒன்றியத்தில் இரசியப் பேரினவாதத்தின் ஆதிக்கம் தாங்க முடியாத ‘சிறுபான்மைத்’ தேசிய இனங்கள் பிரிந்து தனிநாடு அமைத்துக் கொண்டன.
அனைவருக்கும் வாக்குரிமை இருப்பதால், ‘சிறுபான்மைத்’ தேசிய இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று எந்த நாட்டிலும் நம்ப முடியாது. இந்தியாவிலும் அப்படித்தான்!
இந்த உண்மைக்கான இன்றைய எடுத்துக்காட்டுதான், ஒட்டுமொத்த தமிழர்களும், தமிழ் பேசும் முசுலிம்களும் கோத்தபய இராசபக்சேவுக்கு எதிராக வாக்களித்தும், அந்த வாக்குகள் வலிமையற்றவை – அந்தத் தேர்தல் வெறும் சடங்கு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியுள்ளது.
இலங்கை நாடு மிகப்பெரிய பொருளாதாரச் சிக்கலில் தவித்துக் கொண்டுள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. நாணய மதிப்பு நாள்தோறும் குறைந்து கொண்டுள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரம் மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது. ஊழல் மலிந்துள்ளது. இவையெல்லாவற்றுக்கும் இராசபக்சே கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் காரணங்களாக இருக்கின்றன.
போர் வெறி கொண்டு, இலங்கையின் கருவூலத்தைக் காலி செய்தவர், இராசபக்சே! அவருடைய கட்சியைச் சிங்கள மக்கள் பெருமளவு தேர்வு செய்திருக்கிறார்கள் என்றால், அதற்கு என்ன காரணம்? தமிழர்களையும், முசுலிம்களையும் கடுமையாக ஒடுக்குவதில் – அழிப்பதில் முதல் பரிசு பெற வேண்டியது இராசபக்சே குடும்பம் என்ற சிங்களப் பேரினவாத உணர்வு பெரும்பாலான சிங்கள மக்களிடம் இருப்பதுதான் இத்தேர்வுக்குக் காரணம்!
வெற்றி பெற்ற உடனேயே கோத்தபய இராசபக்சே, “எனக்கு வாக்காளிக்காதவர்களும் என் பக்கம் வாருங்கள், உங்களுக்கும் நான்தான் குடியரசுத் தலைவர். ஒரே இலங்கையை உருவாக்க வேண்டும்” என்று மிரட்டல் பாணியில் கோரிக்கை வைத்துள்ளார். சிங்கள பௌத்த இன ஆதிக்கத்தை – மொழி ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டு, முழுமையான சிங்கள பௌத்த நாடாக இலங்கையை மாற்றுவதற்கு, சிறுபான்மையினரே மரியாதையாக என்னோடு வாருங்கள் என்ற இராணுவ அழைப்புதான் கோத்தபய விடுத்துள்ள அந்த அழைப்பு!
கோத்தபய இராசபக்சே ஒரே நாடு முழக்கத்தை நரேந்திர மோடியிடமிருந்து எடுத்துக் கொண்டாரா என்ற ஐயப்பாடு எழுகிறது.
வடக்கு – கிழக்கு மாநிலங்களில் மிகத் தீவிரமாகச் சிங்களக் குடியேற்றங்கள் நடக்கும் கண்டமிருக்கிறது. வடக்கு கிழக்கு மாநிலப் பகுதிகளில் மணலாறு என்ற தமிழர் பகுதியில் இருந்த தமிழர்களை 1984 வாக்கில் இராணுவத்தை வைத்து வெளியேற்றிவிட்டு, வலுவந்தமாக சிங்களக் குடியேற்றங்களை இலங்கை அரசு கொண்டு வந்தது அன்று வலுவந்தமாக 18 கிராமங்களில் சிங்கள அரசு சிங்களக் குடியேற்றங்களைக் கொண்டு வந்தது. இன்றைக்கு அங்கு சிங்களக் குடியேற்ற ஊர்களின் எண்ணிக்கை சற்றொப்ப நூறு!
மணலாறு என்ற தமிழ்ப் பெயரை ‘வெலிஓயா’ என்று சிங்களத்தில் மாற்றிவிட்டார்கள். ஏராளமான தமிழ் ஊர்களின் பெயர்களையும் சிங்களத்தில் மாற்றிவிட்டார்கள். அப்பகுதியின் 90 விழுக்காட்டிற்கு மேல் கோத்தபய இராசபக்சேவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. இதே பாணி சிங்களக் குடியேற்றங்களைத்தான், இன்றைக்குள்ள வடக்கு – கிழக்கு தமிழர் மாநிலங்களில் வலுக் கட்டாயமாகக் கொண்டு வரப் போகிறது, கோத்தபய ஆட்சி! ஏற்கெனவே, இந்துக் கோயில்களை பௌத்த கோயில்களாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். அப்போக்கு இன்னும் தீவிரப்படும்.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கையில் நடந்த தேர்தல் முடிவுகளிலிருந்து மேற்கண்ட பாடங்களைப் படிக்க வேண்டும். தமிழ்நாட்டிலும் இப்படித்தான் குடியேற்றங்களும், தமிழர் ஆன்மிகத்திற்குப் புறம்பான வடஇந்திய ஆன்மிகத் திணிப்பும் நடந்து கொண்டுள்ளன.
வாக்குரிமை மூலம் இலங்கையில் தமிழர்கள் தங்களின் தாயகப் பகுதிகளையும் இன உரிமைகளையும் இன அடையாளங்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்று சொல்லும்போது, இதற்கு மாற்று ஆயுதப்போர் என்று கருத வேண்டா!
இப்போதைய நிலையில், ஒட்டுமொத்த தமிழர்கள் ஒருங்கிணைந்து சனநாயக வழிப்பட்ட போராட்டங்களை நடத்திச் சிங்களப் பேரினவாத அரசுக்கு நெருக்குதல் கொடுத்து, உலகக் கவனத்தை ஈர்த்து உரிமைகளைப் பெற முயல வேண்டும். அதற்கான முதல் தேவை – சம்பந்தர், சுமந்திரன் போன்றவர்களுக்கு அப்பால் உண்மையான தமிழின உரிமையில் அக்கறையும் ஒப்புக் கொடுப்பும் கொண்டு, மக்களைத் திரட்டிச் சனநாயக வழியில் உரிமைப் போராட்டங்கள் நடத்தும் தலைமை தமிழீழத்தில் உருவாக வேண்டும். தமிழினத்தைச் சேர்ந்த இளம் ஆண்களும், பெண்களும் இதுபற்றி சிந்தித்து சரியான முடிவுக்கு வந்து கூட்டுப் போராட்டங்களை நடத்த வேண்டும்.
இவ்வாறான ஒருங்கிணைந்த மக்கள் திரள் உரிமைப் போராட்டங்கள் தமிழீழத்தில் நடக்கும்போது, தாய்த் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு ஆதரவு நல்க வேண்டும். இங்கு சொல்லப்பட்ட படிப்பினைகள், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் பொருந்தும்!
கோத்தபய அரசு சீனாவுக்கு ஆதரவாக இருக்கும். அதனால், இந்திய அரசு இலங்கைக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடும் என்று நம்மில் சிலர் கதைக்கத் தொடங்குவார்கள். இந்தக் கதைப்புகளை நம்ப வேண்டா. கடந்தகாலப் படிப்பினைகள் நமக்கு உணர்த்துவது, எதிர்க்க வேண்டியது சீனர்களையா – தமிழர்களையா என்று முரண்பாடு வந்தால், தமிழர்களைத்தான் எதிர்ப்போம் என்று இந்திய அரசு நிலைப்பாடு எடுக்கும் என்பதுதான்! எனவே, கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் உத்திகளைச் சொல்லும் ‘சிந்தனைச் சிற்பி’களின் ஆசை வார்த்தைகளில் தமிழர்கள் பலியாகக் கூடாது என்ற படிப்பினையும் பெற வேண்டும். உரிமை மீட்பிற்கான வழி மக்கள் திரள் எழுச்சியே!
திருப்பூர்பெரியசாமிஅவர்களுக்குஉதவுங்கள்!தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்
அன்பார்ந்ததமிழ்ப்பெருமக்களே !
மொழிப்போர் ஈகியர், திருப்பூர்ப. பெரியசாமி அவர்களைத் தமிழ் உணர்வாளர்கள் நன்கு அறிவர்.
1965 இல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் திருப்பூரில் கலந்து கொண்டு போராடியவர் திரு. பெரியசாமி அவர்கள். அப்போது அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கிளைச் செயலாளராக இருந்தார். இப்போது அவருக்கு அகவை 83.
இந்தித் திணிப்பை எதிர்த்து அவர் ஏற்றிய கருப்புக் கொடியை இறக்கச் சொல்லி காவல் துறை பெரியசாமிக்குக் கட்டளையிட்டது. கருப்புக் கொடியை இறக்க மறுத்துவிட்டார் பெரியசாமி.
1965 – இந்தி எதிர்ப்புப் போர் என்பது, தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய உரிமைப் போராட்ட நிகழ்வாகும். திருப்பூரில் ஏராளமானவர்களைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அதேபோல், குமாரபாளையம் – பொள்ளாச்சி ஆகிய இடங்களிலும்இந்தியை எதிர்த்த தமிழர்களை சுட்டுக் கொன்று அவர்தம் பிணங்களைச் சரக்குந்தில் ஏற்றிச் சென்று காவல்துறையினர் எரித்தனர். தமிழ்நாடு முழுவதும் முந்நூறு பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், கொல்லப்பட்டவர்களின் உண்மையானஎண்ணிக்கையை அரசு வெளியிடவில்லை என்றும் 1965 மொழிப்போர் வரலாற்றை எழுதிய பேராசிரியர் அ. இராமசாமி அவர்கள் தமது “இந்திஎதிர்ப்புப்போராட்டவரலாறு” – நூலில் குறிப்பிடுகிறார்கள் (பாகம் 1, 2).
வரலாற்றுச் சிறப்புமிக்க அப்போராட்டத்தில் பங்கு கொண்ட பெரியசாமி அவர்கள் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளில் வழக்குப்போட்டார்கள். பெரியசாமி தலைமறைவாகிவிட்டார்.
மூன்று மாதம் தலைமறைவாக இருந்தார். பின்னர் அவரே நேரில் வந்து தன்னைஒப்படைத்துக் கொண்டார்.
நீதிமன்றம் இளைஞர் பெரியசாமிக்கு 18 மாத சிறைத் தண்டனை விதித்தது. ஏழு மாதச் சிறை வாசத்திற்குப் பிறகு, தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில் பெரியசாமி விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர், தி.மு.க.வில் முதன்மையாளராகச் செயல்பட்டார். தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டார். வேலம்பாளையம் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிற்காலத்தில், மொழிப்போர் ஈகி பெரியசாமி அவர்கள், மொழிப்போரில் உயிரீகம் செய்தோர் குடும்பத்தினர் – சிறை சென்றவர்கள். அவர்களின் குடும்பத்தினர் என எல்லாரையும் ‘மொழிப்போர் தியாகிகள் சங்கம்‘ நிறுவி ஒன்று திரட்டினார். அதன் தலைவராக ஈகி பெரியசாமி செயல்பட்டு வருகிறார். மொழிப்போர் ஈகியருக்கு தமிழ்நாடு அரசிடமிருந்து உதவித் தொகை பெற்றுத் தருவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டார்.
மொழிப்போரில் மிகப்பெரிய ஈகம் செய்த திருப்பூர் நகரில், அந்த ஈகியருக்கு நினைவுச் சின்னம் எதுவும் எழுப்பப்படவில்லை. ஈகி பெரியசாமி அவர்களின் முயற்சியால்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் மொழிப்போர் ஈகியர் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது.
இலஞ்சம் ஒழிப்புச் சங்கம் நிறுவி, கையூட்டு ஊழலுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகளை நடத்தினார். அதற்கான இயக்கங்கள் நடத்தினார். கையூட்டு கொடுக்கக்கூடாது என்ற ஒழுக்கத்தை மக்களிடம் பரப்பினார்.
பின்னர், தமிழ்நாட்டில் தமிழைக் கல்வி மொழியாக – ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமென்ற இலட்சியத்திற்கு முதன்மை கொடுத்துச் செயல்பட்டு வந்தார். தமிழ் மொழி – இன உணர்வாளர்களின் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழ்நாடெங்கும் பல்வேறு போராட்டங்களிலும் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொண்டு வந்தார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் 2005 மே 21 அன்று, ஈரோட்டில் நடத்திய “வெளியாரை வெளியேற்றுவோம்” மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்நாடெங்கும் உள்ள மொழி இன உணர்வாளர்களுடனும், பல்வேறு கட்சி – இயக்கத் தலைவர்களோடும், உறுப்பினர்களோடும் நல்ல உயிரோட்டமான உறவு வைத்துக் கொண்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துப் புயல்போல் செயல்பட்டார். அக்காலத்தில், கட்சி எல்லை கடந்து இன உணர்வோடு ஈழ விடுதலைக்கான போராட்டங்கள், மாநாடுகள், கூட்டங்களில் பங்கேற்றார்.
கடந்த இரண்டாண்டுகளுக்கு மேல் கடுமையாக நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுப் பல்வேறு மருத்துவம் பார்த்தும் குணமாகாமல் வீட்டிலேயே முடங்கிப் போயுள்ளார். குடல் நோய் தீராமல் மிகவும் துன்பப்பட்டு வருகிறார். சொந்தத் தொழில், வீடு, கார் என வாழ்ந்த ஐயா பெரியசாமி அவர்கள், நோய் பாதிப்பால் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார். மிகக் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் உழல்கிறார். மருத்துவத்திற்கும் பணமில்லாமல் துன்புறுகிறார்.
ஈகி பெரியசாமி அவர்களைத் தாங்கிப் பிடிக்கும் பொறுப்பு தமிழர்களுக்கு இருக்கிறது! தமிழ் உணர்வாளர்கள் ஈகி ப. பெரியசாமி அவர்களுடைய வங்கிக் கணக்கில் நிதியளித்து, பேருதவி செய்ய வேண்டுமெனத் தமிழ்ப் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஐயாவின் சேமிப்புக் கணக்கில் உரூபாய் ஐயாயிரம் செலுத்தியுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதி மதவெறியால் மக்களை இரு கூறாகப் பிரிக்கும் ஆரியத்துவ ஆன்மிகத்திற்கு மாற்றாக, சாதி – மத வேறுபாடுகளுக்கு எதிரான வள்ளலாரின் தமிழர் ஆன்மிகத்தை முன்னிறுத்தும் வகையில் தமிழ்நாடெங்கும் ‘வள்ளலார் பெருவிழா’ நிகழ்ச்சிகளைj; தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தி வருகிறது.
வரும் மாசி 18 /மார்ச்சு 2 அன்று மாலை சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் மண்டபத்தில் நடைபெறும் “வள்ளலார் பெருவிழா” நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், தமிழர் ஆன்மிகச் செயல்பாட்டாளர் ஐயா சத்தியவேல் முருகனார் முதலானோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
திரு.வி.க. நகரில் வள்ளலார் வழியில் நாள்தோறும் எட்டாயிரம் பேருக்கு உணவளித்து வரும் திருமதி. தனலட்சுமி அம்மையார், கண் பார்வையற்றோருக்குப் பள்ளி நடத்தி உதவிகள் செய்து மறைந்த ஐயா கண்ணியப்ப சுவாமிகள் போன்றோர் விருது அளித்துப் பாராட்டப்படவுள்ளனர்.. தமிழர்களின் வீரக்கலைகளும், கலை நிகழ்வுகளும் நடக்கின்றன.
இந்நிகழ்வில், தாங்கள் தவறாமல் பங்கேற்க வேண்டுமெனத் தங்களை அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பைச் செய்யவும் வேண்கோள் விடுக்கிறேன்.
நன்றி!
தோழமையுடன், க. அருணபாரதி தமிழ்த்தேசியப் பேரியக்கம். பேச: 9025162216, 9841949462
உச்ச நீதிமன்றம் 18.5.2018 அன்று இறுதி செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருபெரும் ஊனங்கள் இருக்கின்றன.
ஒன்று, கருநாடக அணைகளின் மதகுகளைத் திறந்து மூடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்று நேரடியாகக்கூறப்படாதது.
கருநாடக அணைகளின் மதகுகளைத் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகப் பாசனத்துறையினர்க்கு ஆணை இட்டுத்தான்செயல் படுத்த முடியும் என்ற நிலை இருந்தால், கர்நாடக அரசு அவ்வாறு தன் அதிகாரிகளும் ஊழியர்களுக்கும் திறக்கக் கூடாது என்று ஆணைஇட்டால், நிலைமை என்னவாகும்?
ஏனெனில் ஏற்கெனவே பலமுறை தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடும்படி உச்சநீதிமன்றம் ஆணை இட்டும் அதைச் செயல்படுத்த முடியாதுஎன்று வெளிப்படையாகக் கர்நாடக அரசு மறுத்து வந்துள்ளது.
கடந்த 2016 இல் 10,000 கன அடி, 6,000 கன அடி, 2000 கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு பலமுறை உச்சநீதிமன்றத் தீபக் மிசுரா ஆயம் கட்டளை இட்டும் தண்ணீர் திறந்து விட மறுத்து விட்டது கருநாடக அரசு. அது மட்டுமின்றிக், கருநாடகச் சட்டப்பேரவையைக் கூட்டித் தண்ணீர் திறந்து விட முடியாதுஎன்று ஒருமனமாகத் தீர்மானம் நிறைவேற்றியது கருநாடக அரசு.
உச்சநீதிமன்றக் கட்டளையை மீறியதற்காக கருநாடக அரசின் மீது உச்சநீதி மன்றமோ அல்லது இந்திய அரசோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்!
இரண்டாவது ஊனம், ஏதாவதொரு மாநிலம் மாற்றுக் கருத்து கூறினால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமையுள்ள ஒன்பதுஉறுப்பினர்களின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி முடிவெடுக்க வேண்டும் என்று இருப்பதாகும். ஆணையத்தின் தலைவர் மற்றும்நான்கு உறுப்பினர்கள் –ஆக மொத்தம் ஐந்து பேர் நடுவண் அரசின் அதிகாரிகள்; நடுவண் அரசால் அமர்த்தப்படுவோர் ஆவர். தமிழ்நாடு முதலான நான்கு மாநிலங்களுக்கும் தலைக்கு ஒருவர் வீதம் நான்கு பேர்.
இதில் கருநாடக உறுப்பினர் மாற்றுக் கருத்து தெரிவித்து, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடமறுத்தால், நடுவண் அரசின் ஐந்து உறுப்பினர்கள்நடுவண் அரசின் வழிகாட்டுதல் படி நடந்து கொள்வார்கள். காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 – இல் வழங்கப்பட்டதிலிருந்து, இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்துமாறு 2013 – இல் உச்சநீதிமன்றம் ஆணையிட்டதிலிருந்து இதுவரை எந்தத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்து வருகிறது இந்திய அரசு. காங்கிரசு அரசாக இருந்தாலும் பாசக அரசாக இருந்தாலும் நடுவண் அரசின் நிலைபாடு எப்போதும்தமிழ்நாட்டிற்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுதான். இனி அந்தப் பாகுபாடு தொடராது என்பதற்கு என்ன உறுதி? கருநாடக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு சாதகமாக இந்திய அரசு அதிகாரிகள் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.
இந்த இருபெரும் ஊனங்கள் புதிய காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருக்கின்றன. இவற்றைச் சரி செய்வது எப்படி? இந்த ஊனங்களால் பாதிப்புவராது என்று நேரடியாகத் தெளிவாக உறுதி கூற நரேந்திர(மோடி) அரசு தயாரா? உச்சநீதிமன்றம் அப்போது தலையிட்டுச் சரிசெய்யுமா? கடந்த காலஅனுபவங்கள், “இல்லை” என்ற விடையைத்தான் தருகின்றன.
இவற்றுக்கப்பால், 16.2.2018 அன்று தீபக் மிசுரா ஆயம் அறிவித்த காவிரித் தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டவிதிகளுக்கு முரணானது. 1956 ஆம்ஆண்டின் தண்ணீர்த் தகராறு சட்டத்திற்கு எதிரானது. அத்துடன் அத்தீர்ப்பு மரபுவழித் தண்ணீர் உரிமை (Riparian Right) என்ற அடிப்படை உரிமையைத் தகர்த்து விட்டது. தேவைக் கேற்ற தண்ணீர் பகிர்வு (Equitable Share) கோட்பாட்டைத் திணித்துள்ளது. வேளாண்மைக்கு நிகராகத் தொழில்துறைக்குத் தண்ணீர் அளிக்கும் கோட்பாட்டைப் புகுத்தியுள்ளது.
இந்த அநியாயங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை மிக மோசமாகக் குறைத்துவிட்டது உச்ச நீதிமன்றம்.
எனவே இதைச் சரி செய்ய காவிரி வழக்கிற்கு உச்சநீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழக்கைத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுக்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முல்லைப் பெரியாறு வழக்கு, உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கும் நிலையில் அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றப்பட்ட முன் எடுத்துக்காட்டையும் சுட்டிக் காட்டி வருகிறது.
மேற்கண்ட எச்சரிக்கைகளுடன் – விழிப்புணர்வுடன் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது பற்றி தமிழர்கள் கவனமாக இருக்கவேண்டும்.