நோயில் துன்புறும் மொழிப்போர் ஈகி
திருப்பூர் பெரியசாமி அவர்களுக்கு உதவுங்கள்!தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்
அன்பார்ந்த தமிழ்ப் பெருமக்களே !
 மொழிப்போர் ஈகியர்,  திருப்பூர் . பெரியசாமி அவர்களைத் தமிழ் உணர்வாளர்கள் நன்கு அறிவர்.
 1965 இல் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் திருப்பூரில் கலந்து கொண்டு போராடியவர் திரு. பெரியசாமி அவர்கள். அப்போது அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கிளைச்  செயலாளராக இருந்தார். இப்போது அவருக்கு அகவை 83.
இந்தித் திணிப்பை எதிர்த்து அவர் ஏற்றிய கருப்புக் கொடியை இறக்கச் சொல்லி காவல் துறை பெரியசாமிக்குக் கட்டளையிட்டது. கருப்புக் கொடியை இறக்க மறுத்துவிட்டார் பெரியசாமி.
1965 – இந்தி எதிர்ப்புப் போர் என்பது, தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய உரிமைப் போராட்ட நிகழ்வாகும். திருப்பூரில் ஏராளமானவர்களைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். அதேபோல், குமாரபாளையம் – பொள்ளாச்சி ஆகிய இடங்களிலும்இந்தியை எதிர்த்த தமிழர்களை சுட்டுக் கொன்று அவர்தம் பிணங்களைச் சரக்குந்தில் ஏற்றிச் சென்று காவல்துறையினர் எரித்தனர். தமிழ்நாடு முழுவதும் முந்நூறு பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும், கொல்லப்பட்டவர்களின் உண்மையானஎண்ணிக்கையை அரசு வெளியிடவில்லை என்றும் 1965 மொழிப்போர் வரலாற்றை எழுதிய பேராசிரியர் அ. இராமசாமி அவர்கள் தமது “இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு” – நூலில் குறிப்பிடுகிறார்கள் (பாகம் 1, 2).
வரலாற்றுச் சிறப்புமிக்க அப்போராட்டத்தில் பங்கு கொண்ட பெரியசாமி அவர்கள் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளில் வழக்குப்போட்டார்கள். பெரியசாமி தலைமறைவாகிவிட்டார். 
மூன்று மாதம் தலைமறைவாக இருந்தார். பின்னர் அவரே நேரில் வந்து தன்னைஒப்படைத்துக் கொண்டார்.
நீதிமன்றம் இளைஞர் பெரியசாமிக்கு 18 மாத சிறைத் தண்டனை விதித்தது. ஏழு மாதச்  சிறை வாசத்திற்குப் பிறகு, தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில் பெரியசாமி விடுதலை செய்யப்பட்டார்.
 பின்னர், தி.மு.க.வில் முதன்மையாளராகச் செயல்பட்டார். தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டார்.  வேலம்பாளையம் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
பிற்காலத்தில், மொழிப்போர் ஈகி பெரியசாமி அவர்கள், மொழிப்போரில் உயிரீகம் செய்தோர் குடும்பத்தினர் – சிறை சென்றவர்கள். அவர்களின் குடும்பத்தினர் என எல்லாரையும் ‘மொழிப்போர் தியாகிகள் சங்கம்‘ நிறுவி ஒன்று திரட்டினார். அதன் தலைவராக ஈகி பெரியசாமி செயல்பட்டு வருகிறார். மொழிப்போர் ஈகியருக்கு தமிழ்நாடு அரசிடமிருந்து உதவித் தொகை பெற்றுத் தருவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டார்.
மொழிப்போரில் மிகப்பெரிய ஈகம் செய்த திருப்பூர் நகரில், அந்த ஈகியருக்கு நினைவுச் சின்னம் எதுவும் எழுப்பப்படவில்லை. ஈகி பெரியசாமி அவர்களின் முயற்சியால்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் மொழிப்போர் ஈகியர் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது.
இலஞ்சம் ஒழிப்புச் சங்கம் நிறுவி, கையூட்டு ஊழலுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகளை நடத்தினார். அதற்கான இயக்கங்கள் நடத்தினார். கையூட்டு கொடுக்கக்கூடாது என்ற ஒழுக்கத்தை மக்களிடம் பரப்பினார்.
பின்னர், தமிழ்நாட்டில் தமிழைக் கல்வி மொழியாக – ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமென்ற இலட்சியத்திற்கு முதன்மை கொடுத்துச் செயல்பட்டு வந்தார். தமிழ் மொழி – இன உணர்வாளர்களின் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டு தமிழ்நாடெங்கும் பல்வேறு போராட்டங்களிலும் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொண்டு வந்தார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் 2005 மே 21 அன்று, ஈரோட்டில் நடத்திய “வெளியாரை வெளியேற்றுவோம்” மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ்நாடெங்கும் உள்ள மொழி இன உணர்வாளர்களுடனும், பல்வேறு கட்சி – இயக்கத் தலைவர்களோடும்,  உறுப்பினர்களோடும் நல்ல உயிரோட்டமான உறவு வைத்துக் கொண்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துப் புயல்போல் செயல்பட்டார். அக்காலத்தில், கட்சி எல்லை கடந்து இன உணர்வோடு ஈழ விடுதலைக்கான போராட்டங்கள், மாநாடுகள், கூட்டங்களில் பங்கேற்றார்.
கடந்த இரண்டாண்டுகளுக்கு மேல் கடுமையாக நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுப் பல்வேறு மருத்துவம் பார்த்தும் குணமாகாமல் வீட்டிலேயே முடங்கிப் போயுள்ளார். குடல் நோய் தீராமல் மிகவும் துன்பப்பட்டு வருகிறார். சொந்தத் தொழில், வீடு, கார் என வாழ்ந்த ஐயா பெரியசாமி அவர்கள், நோய் பாதிப்பால் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார். மிகக் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் உழல்கிறார். மருத்துவத்திற்கும் பணமில்லாமல் துன்புறுகிறார்.
ஈகி பெரியசாமி அவர்களைத் தாங்கிப் பிடிக்கும் பொறுப்பு தமிழர்களுக்கு இருக்கிறது! தமிழ் உணர்வாளர்கள் ஈகி ப. பெரியசாமி அவர்களுடைய வங்கிக் கணக்கில் நிதியளித்து, பேருதவி செய்ய வேண்டுமெனத் தமிழ்ப் பெருமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஐயாவின் சேமிப்புக் கணக்கில் உரூபாய் ஐயாயிரம் செலுத்தியுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோல், ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவிகளைத் தாராளமாகச் செய்யுங்கள்!
ஐயா பெரியசாமி வங்கிக் கணக்கு விவரம்
கணக்குப் பெயர்
ப. பெரியசாமி
வங்கி
ஆந்திரா வங்கி
கிளை
அனுப்பர்பாளையம், திருப்பூர்
சேமிப்புக் கணக்கு எண்
107610100025422
IFSC CODE
ANDB0001076 
தொடர்பு எண்
94433 76383
 தங்கள் அன்புள்ள,
பெமணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
========================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
========================================
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
========================================