ஞாலத்தலைவர் மேதகு
பிரபாகரன் புகழ் வணக்க நாள்
“தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலை நிறுத்தி முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரையும் உறுதி குலையாது, படைநடத்தி, தான் வரித்துக் கொண்ட உயரிய லட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமார ஏற்று உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி, எதிரிப்படையோ இறுதிக் கணம் வரை துணிவோடு களமாடி பிரபாகரன், 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாள், வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை தமிழீழ மாவீரர் பணிமனை அறியத் தருகிறது. பிரபாகரன், வீரச்சாவினை உறுதிப்படுத்தி நெஞ்சைப் பிளக்கும் இப்பெரும் துயரமிகு அறிவிப்பை, அவரது வழிநடத்தலை உளமார ஏற்றுப் போராடிய போராளிகளுக்கும் ஒப்பற்ற தேசியத் தலைமையாக தமது நெஞ்சங்களில் சுமந்திருக்கும் எம்முயிரினும் மேலான தமிழ் மக்களுக்கும் பெருந்துயரத்தோடு வெளிப்படுத்திக் கொள்ளும் அதேவேளை எமது வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”
என ‘விடுதலைப் புலிகள் மாவீரர் பணிமனை என்ற பெயரில் அறிக்கை ஒன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
“வரலாற்றில் எமக்குக் கிடைத்த அரும் பொருட் குவையான, பிரபாகரனுக்கு அவரது வழியில் களமாடிய போராளிகள், சமூகக் கட்டமைப்பினர், புலம் பெயர் தாயக-தமிழக உறவுகள் என அனைவரும் ஒன்றிணைந்து அவரது வீரவணக்க நிகழ்வை தாயகம், தமிழகம் உட்பட தமிழ் மக்கள் பரந்துவாழும் உலகப்பரப்பு எங்கும், நடத்துகிற அதேவேளையில் அனைவரும் ஒன்றிணையக் கூடிய ஐரோப்பிய நாடு ஒன்றில் 2025-ம் ஆண்டு நடுப்பகுதியில், உலகம் போற்றும் பேரெழுச்சியாக முன்னெடுக்க இருக்கிறோம்.
என்றும் இப்பணிமனை அறிவித்திருக்கிறது.
இவ்வறிக்கையின் பொய்மை மெய்மை குறித்து ஆராயாமல் மேதகு பிரபாகரன் புகழ் போற்ற வேண்டியது நம் கடமை என்பதை உணர வேண்டும். அவர் மறைவில் இருந்தாலும் புகழ் போற்றவேண்டும்! மறைந்திருந்தாலும் புகழ் போற்ற வேண்டும்! எனவே, வரும் வைகாசி 05 / மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கொண்டாடுவதுடன் நாம்
மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாளையும் உலகெங்கும் கொண்டாட வேண்டும்
எனத் தமிழ்க்காப்புக் கழகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
பிரபாகரன் புகழ் ஓங்குக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல நாள் மாசி 27, 2056 / 11.03.2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக